இந்தியா

திருக்கோயில்களில் பூஜை அடிப்படை உரிமை ! சுப்பிரமணியன் சுவாமி

சரோஜ் கண்பத்

மத வழிபாடுகளுக்கு அரசியல் சாசனத்தில் உரிமை கொடுக்கப்பட்டுள்ளது. அதன் அடிப்படையில் திருக்கோயில்களில் பூஜைகள் நடத்தப்பட்டு வருகின்றன. இதை யாரேனும் சிதைக்க முயற்சித்தால் வழக்கு தொடருவேன் என்று சுப்பிரமணியன் சுவாமி தெரிவித்தார்.
 எனினும் வேதங்கள், ஆகமங்களில் நம்பிக்கையுள்ளவர்கள் திருக்கோயில்களில் அர்ச்சகர்களாக வரலாம் எனவும் அவர் கூறினார்.
 தமிழகத்தில் உள்ள திருக்கோயில்களில் அரசு புதிதாக அர்ச்சகர்களை நியமனம் செய்துள்ள விவகாரம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக மாநிலங்களவை உறுப்பினர் சுப்பிரமணியன் சுவாமி தினமணிக்கு அளித்த சிறப்பு பேட்டி: திமுக ஆட்சியை எதிர்க்கவோ அல்லது விமர்சிக்கவோ இது நேரமல்ல. கே.கே. நகர் பள்ளியில் ஒரு பிரச்னை வந்தபோது முதல்வர் மு.க.ஸ்டாலின் சரியான நடவடிக்கையை எடுத்தார். சில சந்தேகங்களை எழுப்பியபோது அவர் தெளிவான அறிக்கையையும் கொடுத்தார். "அந்தப் பள்ளியை அபகரிக்கும் எண்ணமில்லை. ஆசிரியரின் தவறான நடத்தைக்கு மட்டும் நடவடிக்கை எடுக்கின்றோம்' என்று கூறிய பின்னர் விவகாரம் அத்துடன் முடிந்தது.
 வழக்கு தொடர முடிவு: தமிழகத்தில் இப்போது திருக்கோயில்களில் அர்ச்சகர்கள் நியமனம் குறித்த செய்திகள் வந்துள்ளன. சில தகவல்களின் அடிப்படையில் இந்த விவகாரம் தொடர்பாக வழக்கு தொடரலாம் என்று முடிவு செய்துள்ளேன். பள்ளி விவகாரத்தைப் போல இந்த விவகாரத்திலும் தமிழக அரசு தனது நிலையைத் தெளிவுபடுத்தினால் எனது நடவடிக்கையைக் கைவிட்டு விடுவேன்.
 அர்ச்சகர்கள் விவகாரத்தில் என்னைப் பொருத்தவரை பிராமணர்கள் பிராமணர் அல்லாதோர் என்று நான் பிரித்துப் பார்க்கவில்லை. யாருக்கு வேதம் குறித்த படிப்பு, ஞானம், நம்பிக்கை இருக்கிறதோ அவர்கள் வரலாம். ஆனால், திராவிடக் கட்சிகளுக்கு மதம் பிடிக்காது. அதிலும் இந்து மதத்தின் மீது அந்த இயக்கங்களுக்கு நம்பிக்கை கிடையாது.
 தமிழக திருக்கோயில்களில் காலியாக உள்ள இடங்களுக்கே புதிய அர்ச்சகர்கள் நியமிக்கப்பட்டுள்ளனரே தவிர பணியில் இருக்கும் யாரும் நீக்கப்படவில்லை என்று கனிமொழி எம்.பி. அறிக்கை வெளியிட்டுள்ளார். திருக்கோயில் பூஜை என்பது நமது அடிப்படை உரிமைகளில் ஒன்று. இதற்கு யாராவது இடையூறாக இருந்தால் நான் வழக்கு போடுவேன். ஏற்கெனவே பணியாற்றிக்கொண்டிருந்த பிராமணக் குருக்களை வெளியேற்றிவிட்டு பட்டியலினத்தவரை நியமித்துள்ளதாகக் கூறப்படுகிறது. இதற்கு ஆதாரம் இருக்கிறதா அல்லது வெறும் வதந்தியா என்பது தெரியவில்லை.
 ஆகம விதிகளை மாற்ற முடியாது:
 திருக்கோயில் ஆகம விதிகளை யாரும் மாற்றமுடியாது. அது பூஜாரிகள், பக்தர்களின் உரிமையாகும். இப்போதைய நிலையில் ஹிந்து விரோதியாக திமுக இருக்கும் என்று கருதவில்லை. முதல்வரின் மனைவியே கோயில் கோயிலாகச் சென்று கொண்டிருக்கிறார். முதல்வரையும் அவர் அழைத்துச் செல்ல வேண்டும்.
 அர்ச்சகருக்கான தகுதி: சட்டத்தின் மூலம் பட்டியலினத்தவர்களை குருக்களாக கொண்டு வந்திருக்கிறார்கள் என்றால் அவருக்கு வேதம் தெரியுமா? பூஜைகள் செய்யத் தெரியுமா? என்று பார்க்கவேண்டும். வேதம், உபநிஷத் பற்றிய அறிவும், பூஜைகளை எவ்வாறு நடத்துவது என்ற ஞானமும் இல்லாதவர்கள் திருக்கோயில்களில் அர்ச்சகர்களாக முடியாது.
 திருக்கோயில்களை அரசு விடுவிக்க வேண்டும்: தீட்சிதர்களின் கட்டுப்பாட்டிலிருந்து சிதம்பரம் நடராஜர் திருக்கோயிலை விடுவிக்க மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி முயன்று உயர்நீதிமன்றத்தில் வழக்கின் மூலம் வெற்றியும் பெற்றார். நான் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தேன். முடிவில் தீட்சிதர்களுக்கு சாதகமாக தீர்ப்பு வந்தது. அந்தத் தீர்ப்பு மற்ற திருக்கோயில்களுக்கும் பொருந்தும். தற்போது சுமார் 50,000 திருக்கோயில்கள் அரசின் கட்டுப்பாட்டில் உள்ளன. அந்தத் தீர்ப்பின் அடிப்படையில் அவற்றை அரசு விடுவிக்க வேண்டும்.
 பாஜக செய்யவேண்டியது என்ன?: ஹிந்துக்கள் ஒற்றுமையைச் சீர்குலைக்கும் முயற்சியாக திருக்கோயில்களில் தலையீடு இருக்கிறது என்றால், அதைத் தடுக்கும் பொறுப்பு பா.ஜ.க.வுக்கு உள்ளது. ஹிந்துத்துவ கட்சி என்று சொல்லும் பா.ஜ.க., இந்த விவகாரத்தில் மௌனமாக இருப்பது ஏன்?
 ஆர்.எஸ்.எஸ்.ஸýம்., அதன் அமைப்புகளும்தான் (பாரதிய மஸ்தூர் சங்கம், இந்து முன்னணி, அகில பாரதிய வித்யார்த்தி பரிஷத்) சிறப்பாகப் பணியாற்றுகின்றன. ஆனால், பாஜகவினர் அதிமுக - திமுகவுக்கு அடிமைகளாக இருக்கின்றனர். அவர்களைப் போலவே அரசியல் செய்கின்றனர். தேர்தலில் தனியாக நிற்கக்கூடிய பலம் பாஜகவுக்கு இருக்கிறது. அந்த நம்பிக்கை அளிக்கக்கூடிய தலைவர் வரவேண்டும். ஒருமுறை தோற்றாலும் அடுத்த முறை வெற்றி கிடைக்கும். மேற்கு வங்கத்தில் அதுதான் நடந்தது என்றார் சுப்பிரமணியன் சுவாமி.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மே, ஜூன் மாதங்களுக்காவது 300 யூனிட்டுகள் இலவச மின்சாரம் வழங்க வேண்டும்: வானதி சீனிவாசன்

துரித உணவில் விஷம் கலந்து கொடுத்த விவகாரம்: தாத்தாவை தொடர்ந்து தாயும் பலி

மார்ச் மாதத்தில் தொலைத்தொடர்பு சந்தாதாரர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு: டிராய்

கனடா: வாகன விபத்தில் இந்திய தம்பதி, 3 மாதக் குழந்தை உள்பட 4 பேர் பலி!

5 நாள் பயணமாக ஹிமா​சல் செல்லும் குடியரசுத் தலைவர்

SCROLL FOR NEXT