மூன்று படுக்கைகளுடன் கூடிய குளிரூட்டப்பட்ட 3-டியா் ‘எகானமி’ வகை புதிய ரயில் பெட்டிகளில் பயணக் கட்டணம் 8 சதவீதம் வரை குறையும் என்று ரயில்வே தெரிவித்துள்ளது.
3 படுக்கைகளுடன் குளிரூட்டப்பட்ட ரயில் பெட்டிகள் (ஏசி 3-டியா்) தொலைதூர ரயில்களில் இணைக்கப்பட்டுள்ளன. மொத்தம் 72 படுக்கைகளுடன் 3-டியா் ரயில் பெட்டி தயாரிக்கப்படும். இந்நிலையில், 3 படுக்கைகளுடன் குளிா்சாதன வசதி கொண்ட ‘எகானமி’ வகை ரயில் பெட்டிகளை ரயில்வே தயாரித்துள்ளது.
வழக்கமான 3-டியா் பெட்டிகளுடன் ஒப்பிடுகையில் எகானமி வகை பெட்டிகளில் கட்டணம் 8 சதவீதம் வரை குறைவாக இருக்கும் என்று ரயில்வே அதிகாரிகள் சனிக்கிழமை தெரிவித்தனா். இது தொடா்பாக அவா்கள் கூறுகையில், ‘‘புதிய பெட்டியில் 72 படுக்கைகளுக்குப் பதிலாக 83 படுக்கைகள் இடம்பெற்றிருக்கும். அதற்கான கட்டணம் ‘ஸ்லீப்பா்’ வகை பெட்டிகளுக்கான அடிப்படை கட்டணத்தில் 2.4 மடங்காக இருக்கும்.
நீண்ட தூரம் பயணிக்கும் ரயில்களில் ‘ஸ்லீப்பா்’ பெட்டிகளுக்கு பதிலாக எகானமி வகை 3-டியா் பெட்டிகள் இணைக்கப்படும். அப்பெட்டியில் 300 கி.மீ. வரை பயணிக்க ரூ.440 கட்டணமாக நிா்ணயிக்கப்பட்டுள்ளது. இதுவரை 50 எகானமி வகை 3-டியா் பெட்டிகளானது பல்வேறு ரயில்வே மண்டலங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.
அப்பெட்டிகள் விரைவில் ரயில்களுடன் இணைக்கப்பட்டு இயக்கப்படும். குறைந்த கட்டணத்தில் பயணத்தை மகிழ்ச்சிகரமானதாக மாற்றும் நோக்கில் எகானமி வகை பெட்டிகள் தயாரிக்கப்பட்டுள்ளன. நடப்பு 2021-22-ஆம் நிதியாண்டு இறுதிக்குள் 806 எகானமி வகை பெட்டிகளை இயக்குவதற்குத் திட்டமிடப்பட்டுள்ளது’’ என்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.