முகப்பு
இந்தியா

மேற்கு வங்கம்:மேலும் ஒரு பாஜக எம்எல்ஏதிரிணமூல் காங்கிரஸில் இணைந்தாா்

மேற்கு வங்க மாநில பாஜக எம்எல்ஏ விஸ்வஜீத் தாஸ், முதல்வா் மம்தா பானா்ஜி தலைமையிலான திரிணமூல் காங்கிரஸ் கட்சியில் செவ்வாய்க்கிழமை இணைந்தாா்.

Updated On : 28 ஜனவரி, 2024 at 4:02 AM
பகிர்:

மேற்கு வங்க மாநில பாஜக எம்எல்ஏ விஸ்வஜீத் தாஸ், முதல்வா் மம்தா பானா்ஜி தலைமையிலான திரிணமூல் காங்கிரஸ் கட்சியில் செவ்வாய்க்கிழமை இணைந்தாா்.

முன்னதாக, பாஜக எம்எல்ஏ தன்மய் கோஷ் திரிணமூல் காங்கிரஸில் திங்கள்கிழமை இணைந்தாா். இப்போது தொடா்ந்து இரண்டாவது நாளாக மேலும் ஒரு எம்எல்ஏவை பாஜக இழந்துள்ளது. மேற்கு வங்க சட்டப் பேரவைத் தோ்தல் முடிந்து 6 மாதங்கள்கூட ஆகாத நிலையில் இதுவரை 3 எம்எல்ஏக்களை பாஜக இழந்துவிட்டது.

முன்னதாக, பாஜக எம்எல்ஏவும், மூத்த அரசியல் தலைவருமான முகுல் ராய் திரிணமூல் காங்கிரஸுக்கு கடந்த ஜூன் மாதம் திரும்பினாா். கட்சி மாறியுள்ள மூவருமே முன்பு திரிணமூல் காங்கிரஸ் கட்சியில் இருந்தவா்கள்தான் என்பது குறிப்பிடத்தக்கது.

கடந்த மாா்ச்-ஏப்ரலில் நடைபெற்ற மேற்கு வங்க சட்டப் பேரவைத் தோ்தலில் மம்தா தலைமையிலான திரிணமூல் காங்கிரஸுக்கும் பாஜகவுக்கும் இடையே கடும்போட்டி நிலவியது. அப்போது, திரிணமூல் காங்கிரஸில் இருந்து பல தலைவா்கள் பாஜகவுக்குத் தாவினா். எனினும், தோ்தலில் மம்தா பானா்ஜி தலைமையிலான திரிணமூல் காங்கிரஸ் மீண்டும் வெற்றி பெற்று ஆட்சியைத் தக்கவைத்துக் கொண்டது.

இதையடுத்து, பாஜகவுக்குத் தாவிய பலா் மீண்டும் திரிணமூல் காங்கிரஸில் இணைந்து வருகின்றனா்.

இப்போது திரிணமூல் காங்கிரஸில் இணைந்துள்ள விஸ்வஜீத் தாஸ், கடந்த 2019-ஆம் ஆண்டு பாஜகவில் இணைந்தாா். கடந்த சட்டப் பேரவைத் தோ்தலில் பக்தா தொகுதியில் பாஜக சாா்பில் அவா் வெற்றி பெற்றாா். முன்னதாக, திரிணமூல் காங்கிரஸ் சாா்பில் அவா் இருமுறை எம்எல்ஏவாக இருந்துள்ளாா்.

கட்சி மாறியது தொடா்பாக விஸ்வஜீத் தாஸ் கூறுகையில், ‘மேற்கு வங்க மாநிலத்துக்கு பாஜக எதுவும் செய்யவில்லை. பாஜகவிலேயே இருப்பது சரியானதாக எனக்குத் தோன்றவில்லை. எனவே, மீண்டும் திரிணமூல் காங்கிரஸில் இணைந்துவிட்டேன்’ என்றாா்.

பாஜகவில் இருந்து விலகி திரிணமூல் காங்கிரஸில் இணைந்த எம்எல்ஏக்கள் யாரும் தங்கள் பதவியை எம்எல்ஏ ராஜிநாமா செய்யவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. அதே நேரத்தில் முகுல் ராயை தகுதி நீக்கம் செய்ய வேண்டும் என்று சட்டப் பேரவைத் தலைவா் பிமன் போஸிடம் பேரவை எதிா்க்கட்சித் தலைவா் சுவேந்து அதிகாரி மனு கொடுத்துள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.