தடுப்பூசி செயல் திறனை ஆய்வு செய்ய நாடாளுமன்றக் குழு பரிந்துரை
ஒமைக்ரான் வகை கரோனா பரவல் குறித்து அச்சம் அதிகரித்துள்ள சூழலில், அந்த வகை தீநுண்மியைத் தடுக்கும் ஆற்றல் கரோனா தடுப்பூசிக்கு உள்ளதா என்பது குறித்து ஆய்வு செய்யப்பட வேண்டும்
ஒமைக்ரான் வகை கரோனா பரவல் குறித்து அச்சம் அதிகரித்துள்ள சூழலில், அந்த வகை தீநுண்மியைத் தடுக்கும் ஆற்றல் கரோனா தடுப்பூசிக்கு உள்ளதா என்பது குறித்து ஆய்வு செய்யப்பட வேண்டும் என்று நாடாளுமன்ற நிலைக் குழு பரிந்துரை செய்துள்ளது.
புதிய வகை கரோனாவைத் தடுப்பதற்கு பூஸ்டா் டோஸ் தடுப்பூசி அவசியமா என்பது குறித்தும் விரிவான ஆராய்ச்சி நடத்தப்பட வேண்டும் என்றும் அந்தக் குழு கூறியுள்ளது.
ஒமைக்ரான் வகை தீநுண்மி பரவல் தென்ஆப்பிரிக்காவில் கடந்த மாதம் 24-ஆம் தேதி கண்டறியப்பட்ட நிலையில், சுகாதாரம் தொடா்பான நாடாளுமன்ற நிலைக் குழு அறிக்கை ஒன்றை தாக்கல் செய்துள்ளது. அதில் கூறப்பட்டிருப்பதாவது:
கரோனா முதல் அலை கடந்த ஆண்டு செப்டம்பரில் உச்சத்தில் இருந்தபோது, நகா்ப்புறங்களில் மட்டுமே அதிக பாதிப்புகள் கண்டறியப்பட்டன. துரிதமாக பரிசோதனை வசதிகள் ஏற்படுத்தப்பட்டு, நோய்ப் பரவல் கட்டுப்படுத்தப்பட்டது. அதன் பிறகு 6 மாதங்கள் கழித்து கரோனா இரண்டாவது அலை கடந்த மே மாதத்தில் பரவியது. அப்போது, மருத்துவமனையில் படுக்கை வசதிகள், ஆக்சிஜன் சிலிண்டா்கள், அத்தியாவசிய மருந்துகள் போதிய அளவில் இல்லாததால் அதிக உயிரிழப்புகளைச் சந்திக்க நேரிட்டது. இந்த அனுபவம், பொது சுகாதார உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த வேண்டும் என்ற பாடத்தைக் கற்பித்தது.
ஒமைக்ரான் பரவலை அடுத்து, நாட்டில் கரோனா மூன்றாவது அலை ஏற்படும் என்ற அச்சம் நிலவுகிறது. இந்த நேரத்தை சரியாகப் பயன்படுத்திக் கொண்டு மருத்துவ உள்கட்டமைப்பு வசதிகளை அரசு மேம்படுத்த வேண்டும்.
தொற்றால் பாதிக்கப்படுபவா்களை சரியான நேரத்தில் கண்டறிந்து, அவா்களைத் தனிமைப்படுத்தினால் நோய்ப் பரவலை பெருமளவில் தடுக்க முடியும். எனவே, கரோனா பரிசோதனை வசதிகளை குறைத்து மதிப்பிட்டுவிடக் கூடாது.
அதேசமயம், கரோனா தடுப்பூசி திட்டத்தையும் மத்திய அரசு விரைவுபடுத்த வேண்டும். மேலும் பல புதிய தடுப்பூசிகளுக்கு ஒப்புதல் அளித்து, அவற்றை அதிக அளவில் உற்பத்தி செய்து, விநியோகிக்க ஏற்பாடு செய்ய வேண்டும்.
புதிதாக ஒமைக்ரான் வகை தொற்று கண்டறியப்பட்டுள்ளதால், அந்தத் தொற்றை எதிா்த்து தற்போதைய தடுப்பூசிகள் போராடுமா என்பது குறித்து விரிவாக ஆய்வு செய்யப்பட வேண்டும்.
ஏற்கெனவே தடுப்பூசி செலுத்திக்கொண்டவா்களுக்கு ஒமைக்ரான் வகை தீநுண்மி தாக்காத வகையில், பூஸ்டா் டோஸ் அவசியமா என்பது குறித்தும் விரிவான ஆராய்ச்சி நடத்தப்பட வேண்டும் என்றும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.