முகப்பு
இந்தியா

'விபின் ராவத்தின் சேவையை இந்தியா என்றும் மறக்காது' - பிரதமர் மோடி இரங்கல்

முப்படைத் தலைமை தளபதி விபின் ராவத் மறைவுக்கு பிரதமர் நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். 

Updated On : 28 ஜனவரி, 2024 at 5:39 AM
பகிர்:

முப்படைத் தலைமை தளபதி விபின் ராவத் மறைவுக்கு பிரதமர் நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். 

வெலிங்டன் ராணுவக் கல்லூரி ஆய்வுக்காக கோவையிலிருந்து சூலூர் சென்ற விமானப் படை ஹெலிகாப்டர், நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே காட்டேரி பகுதியில் விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் முப்படைத் தலைமை தளபதி விபின் ராவத், அவரது மனைவி உள்பட 13 பேர் உயிரிழந்தனர். வெலிங்டன் ராணுவக் கல்லூரியைச் சேர்ந்த கேப்டன் வருண் சிங் படுகாயமடைந்த நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார். 

முப்படைத் தலைமை தளபதி விபின் ராவத் மறைவுக்கு தலைவர்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். 

பிரதமர் நரேந்திர மோடி தனது ட்விட்டர் பக்கத்தில், 

ஹெலிகாப்டர் விபத்தில் ஜெனரல் விபின் ராவத், அவரது மனைவி மற்றும் ராணுவ வீரர்களை இழந்ததில் மிகவும் வேதனை அடைந்துள்ளேன். அவர்கள் மிகுந்த சிரத்தையுடன் நாட்டிற்கு சேவை செய்தனர். 

ஜெனரல் பிபின் ராவத் ஒரு சிறந்த ராணுவ வீரர். ஒரு உண்மையான தேசபக்தரான அவர், ஆயுதப் படைகள் மற்றும் பாதுகாப்பு இயந்திரங்களை நவீனமயமாக்குவதில் பெரிதும் பங்களித்தார். முக்கிய விஷயங்களில் அவரது நுண்ணறிவு மற்றும் முன்னெடுப்புகள் குறிப்பிடத்தக்கவை. அவரது மறைவு என்னை மிகவும் வருத்தத்தில் ஆழ்த்தியுள்ளது. 

இந்தியாவின் முதல் முப்படைத் தலைமை தளபதியாக பாதுகாப்பு சீர்திருத்தங்கள் உட்பட நமது ஆயுதப் படைகள் தொடர்பான பல்வேறு அம்சங்களில் அவர் பணியாற்றினார். ராணுவத்தில் சிறப்பாக பணியாற்றிய அனுபவம் கொண்டவர். அவரது சிறப்பான சேவையை இந்தியா என்றும் மறக்காது' என்று குறிப்பிட்டுள்ளார்.

முழு கட்டுரையைப் படிக்க →