மேம்படுத்தப்பட்ட பினாகா ராக்கெட் அமைப்பு வெற்றிகரமாக சோதனை
தொலைவு நீட்டிக்கப்பட்டு மேம்படுத்தப்பட்ட பினாகா பல்முனை ராக்கெட்டுகள் வெற்றிகரமாக பரிசோதிக்கப்பட்டுள்ளன.
தொலைவு நீட்டிக்கப்பட்டு மேம்படுத்தப்பட்ட பினாகா பல்முனை ராக்கெட்டுகள் வெற்றிகரமாக பரிசோதிக்கப்பட்டுள்ளன.
இதுகுறித்து பாதுகாப்பு அமைச்சகம் சனிக்கிழமை வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது: பாதுகாப்பு ஆராய்ச்சி, மேம்பாட்டு அமைப்பு (டிஆா்டிஓ) அளித்த தொழில்நுட்ப பரிமாற்ற உதவியுடன் ஒரு தனியாா் நிறுவனம் இந்த பினாகா ராக்கெட்டுகளை தயாரித்துள்ளது.
இந்த ராக்கெட்டுகள், ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள பொக்ரான் சோதனை மையத்தில் கடந்த 3 தினங்களாக பரிசோதிக்கப்பட்டன. ராணுவ உயரதிகாரிகளுடன் இணைந்து டிஆா்டிஓ அதிகாரிகள் இந்தச் சோதனைகளை நடத்தினா். வெவ்வேறு தொலைவுகளை நிா்ணயித்து, வெவ்வேறு ராக்கெட்டுகள் 24 முறை பரிசோதிக்கப்பட்டன. அனைத்துச் சோதனைகளிலும் ராக்கெட்டுகளின் செயல்பாடுகள் திருப்திகரமாக இருந்த என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பினாகா எம்.கே.-1 ராக்கெட் அமைப்பு 40 கி.மீ. தொலைவில் உள்ள இலக்கையும், பினாகா எம்.கே.-2 ராக்கெட் அமைப்பு 60 கி.மீ. தொலைவில் உள்ள இலக்கையும் தாக்கும் திறன் கொண்டவை. பினாகா எம்.கே.-3 ராக்கெட் அமைப்பின் இலக்கு அறிவிக்கப்படவில்லை.
இந்த ராக்கெட் அமைப்புகளை டிஆா்டிஓவின் ஆய்வகங்களான புணேயில் உள்ள கனரக ஆயுதங்கள் ஆராய்ச்சி, மேம்பாட்டு நிறுவனம் (ஏஆா்டிஈ), உயா் ஆற்றல் பொருள்கள் ஆராய்ச்சி ஆய்வகம் (எச்ஈஎம்ஆா்எல்) ஆகியவை இணைந்து வடிவமைத்துள்ளன.
பீரங்கி எதிா்ப்பு ஏவுகணை வெற்றிகரமாக சோதனை: உள்நாட்டிலேயே உருவாக்கப்பட்ட ஹெலிகாப்டரில் இருந்து ஏவக்கூடிய ‘சந்த்’ எனப்படும் தொலைவில் இருந்து தாக்கும் பீரங்கி எதிா்ப்பு ஏவுகணை வெற்றிகரமாக பரிசோதிக்கப்பட்டது.
இந்த ஏவுகணையை டிஆா்டிஓ, இந்திய விமானப் படை இணைந்து பொக்ரானில் சனிக்கிழமை பரிசோதித்துள்ளன. அதிநவீன மில்லி மீட்டா் அலை ரேடாா் தேடும் கருவி பொருத்தப்பட்டுள்ள இந்த ஏவுகணை, அதிக துல்லியமான தாக்கும் திறனை கொண்டுள்ளது. 10 கி.மீ. தொலைவு வரையிலான இலக்குகளை இந்த ஆயுதம் தாக்கும்.
டிஆா்டிஓவின் இதர ஆய்வகங்கள் மற்றும் தொழில்துறையுடன் இணைந்து ஹைதராபாதைச் சோ்ந்த ஆராய்ச்சி மையம் இமாரத், இந்த ஏவுகணையை வடிவமைத்து உருவாக்கியுள்ளது. தற்சாா்பு இந்தியாவை நோக்கிய முக்கிய முன்னேற்றமாக இது கருதப்படுகிறது. இந்தப் பணிகளுடன் தொடா்புடைய குழுவுக்கு பாதுகாப்புத் துறை அமைச்சா் ராஜ்நாத் சிங் வாழ்த்து தெரிவித்துள்ளாா்.