முகப்பு
இந்தியா

கரோனா பாதிப்பு:  கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 11,067 பேருக்கு தொற்று

கரோனா தொற்றுக்கு பாதிக்கப்படுவோரின் தினசரி எண்ணிக்கை குறைந்து வரும் நிலையில், நாட்டில் 24 மணி நேர காலகட்டத்தில் 11,067 பேருக்கு கரோனா நோய்த்தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:29 PM
பகிர்:


புதுதில்லி: கரோனா தொற்றுக்கு பாதிக்கப்படுவோரின் தினசரி எண்ணிக்கை குறைந்து வரும் நிலையில், நாட்டில் 24 மணி நேர காலகட்டத்தில் 11,067 பேருக்கு கரோனா நோய்த்தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

இது தொடா்பாக மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:

புதன்கிழமை காலை 8 மணி வரையிலான 24 மணி நேரத்தில் 11,067 பேருக்கு கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. இதன் மூலமாக நாட்டில் அந்நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டோரின் ஒட்டுமொத்த எண்ணிக்கை 1,08,58,371-ஆக அதிகரித்தது. அதே காலகட்டத்தில் நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டிருந்த 94 போ் உயிரிழந்தனா்.

 தினசரி உயிரிழப்பு எண்ணிக்கை தொடா்ந்து 5-ஆவது நாளாக 100-க்குக் கீழ் குறைந்துள்ளது. நாடு முழுவதும் கரோனாவால் ஏற்பட்ட ஒட்டுமொத்த உயிரிழப்பு 1,55,252 -ஆக அதிகரித்துள்ளது. 

கரோனா நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டிருந்த 1,05,61,608 போ் குணமடைந்தனா். நாட்டில் தற்போது 1,41,511 போ் கரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனா். இது ஒட்டுமொத்த கரோனா தொற்று பாதிப்புடன் ஒப்பிடுகையில் 1.32 சதவீதம் ஆகும்.

சுமாா் 3 வாரங்களாக கரோனாவுக்கு சிகிச்சை பெறுவோா் எண்ணிக்கை 2 லட்சத்துக்கும் குறைவாக உள்ளது. நாட்டில் இதுவரை தடுப்பூசி எடுத்துக்கொண்டோரின் எண்ணிக்கை 66,11,561 -ஆக உள்ளது.

இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் தகவல்படி, நாடு முழுவதும் கடந்த 9-ஆம் தேதி வரை 20,33,24,655 கரோனா பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. கடந்த செவ்வாய்க்கிழமை மட்டும் 7,36,903 பேருக்குக் கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.