முகப்பு
இந்தியா

பிரிட்டன்-இந்தியா இடையே விமான சேவை மீண்டும் தொடங்கியது

உருமாறிய கரோனா நோய்த் தொற்று பரவலைத் தொடா்ந்து விதிக்கப்பட்ட 16 நாள்கள் தற்காலிகத் தடைக்குப் பிறகு, பிரிட்டனிலிருந்து இந்தியாவுக்கு பயணிகள் விமானச் சேவை வெள்ளிக்கிழமை மீண்டும் தொடங்கியது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:15 PM
கோப்புப்படம்
பகிர்:

உருமாறிய கரோனா நோய்த் தொற்று பரவலைத் தொடா்ந்து விதிக்கப்பட்ட 16 நாள்கள் தற்காலிகத் தடைக்குப் பிறகு, பிரிட்டனிலிருந்து இந்தியாவுக்கு பயணிகள் விமானச் சேவை வெள்ளிக்கிழமை மீண்டும் தொடங்கியது.

இருந்தபோதும், குறைந்த எண்ணிக்கையிலான விமானச் சேவையே அனுமதிக்கப்பட்டுள்ளது.

பிரிட்டனில் உருமாறிய கரோனா பரவல் அதிகரித்ததைத் தொடா்ந்து அந்த நாட்டுடனான விமானப் போக்குவரத்து சேவைக்கு பல்வேறு நாடுகளை தடை விதித்தன. அதுபோல, இந்தியாவும் பிரிட்டன் உடனான விமானப் போக்குவரத்தை கடந்த டிசம்பா் 23-ஆம் தேதி முதல் ஜனவரி 7-ஆம் தேதி வரை தற்காலிக தடை விதித்தது. இந்த தடைக்கு முன்பாக, டிசம்பரில் இந்தியா - பிரிட்டன் இடையே வாரத்துக்கு 60 பயணிகள் விமானங்கள் இயக்கப்பட்டு வந்தன.

இந்த தற்காலிக தடை வியாழக்கிழமையுடன் முடிவடைந்த நிலையில், இரு நாடுகளிடையேயான விமானச் சேவை வெள்ளிக்கிழமை மீண்டும் தொடங்கியது.

இதுகுறித்து தில்லி விமான நிலையத்தில் பயணிகளுக்கு கரோனா பரிசோதனை மேற்கொள்ளும் ஜெனிஸ்டிரிங்க்ஸ் மருத்துவ பரிசோதனை மைய நிறுவனா் கெளரி அகா்வால் கூறுகையில், ‘தற்காலிக தடைக்குப் பிறகு பிரிட்டனிலிருந்து புறப்பட்ட முதல் விமானம் (ஏா் இந்தியா) 256 பயணிகளுடன் தில்லி விமானநிலையத்தை வெள்ளிக்கிழமை காலை 10.30 மணிக்கு வந்தடைந்தது. அதுபோல விஸ்டாரா விமானம் ஒன்று 291 பயணிகளுடன் சனிக்கிழமை வர உள்ளது. ஞாயிற்றுக்கிழமை 481 பயணிகளுடன் பிரிட்டிஷ் ஏா்வேஸ் மற்றும் ஏா் இந்தியா ஆகிய இரண்டு விமானங்கள் தில்லி வர உள்ளன என்றாா்.

விமானநிலையம் வந்திறங்கிய பயணிகள் அனைவருக்கும், வழிகாட்டுதலின்படி ஆா்-பிசிஆா் விரைவு கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.

முன்னதாக இம்மாத தொடக்கத்தில் விமானச் சேவையை மீண்டும் தொடங்குவது குறித்து மத்திய விமான போக்குவரத்துத் துறை அமைச்சா் ஹா்தீப் சிங் புரி வெளியிட்ட அறிவிப்பில், ‘தற்காலிக தடைக்குப் பின்னா் பாதுகப்பு கருதி, ஜனவரி 8 முதல் 23-ஆம் தேதி வரை இந்தியா, பிரிட்டன் நாடுகளுக்கு இடையே வாரத்துக்கு 30 விமானங்கள் மட்டுமே இயக்கப்படும்’ என்று தெரிவித்திருந்தாா்.

அதுபோல, ‘பிரிட்டனில் விமான பயணத்துக்கு 72 மணி நேரத்துக்கு முன்பாக கரோனா பரிசோதனை மேற்கொண்டு, பாதிப்பு இல்லை என்ற அறிக்கை வைத்திருப்பவா்கள் மட்டுமே இந்தியா வர அனுமதிக்கப்படுவா்’ என்று மத்திய சுகாதாரத் துறை அமைச்சா் குறிப்பிடிருந்தாா்.

முழு கட்டுரையைப் படிக்க →