இந்தியா

ஜம்மு-காஷ்மீரில் 150 மீட்டர் நீள சுரங்கப் பாதை கண்டுபிடிப்பு

DIN


ஜம்மு: ஜம்மு-காஷ்மீரில் கதுவா மாவட்டம் ஹிரா நகர் செக்டாரில் பயங்கரவாதிகள் தோண்டிய 150 மீட்டர் நீள சுரங்கப் பாதையை எல்லைப் பாதுகாப்புப் படையினர் (பிஎஸ்எஃப்) புதன்கிழமை கண்டுபிடித்தனர்.

இது தொடர்பாக பிஎஸ்எப்பின் ஜம்மு பகுதி ஐ.ஜி.யான என்.எஸ்.ஜாம்வால் செய்தியாளர்களிடம் கூறியது:

ஜம்மு-காஷ்மீரில், பாகிஸ்தானையொட்டிய எல்லைப்புற மாவட்டம் கதுவா. இந்த மாவட்டத்தில் பாகிஸ்தான் பயங்கரவாதிகள் சுரங்கப் பாதை தோண்டி அதன் மூலம் இந்தியப் பகுதிக்குள் ஊடுருவுவதைத் தடுக்கும் நடவடிக்கைகளில் எல்லைப் பாதுகாப்புப் படையினர் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில், கதுவா மாவட்டத்தின் ஹிரா நகர் செக்டாரில் உள்ள போபியான் கிராமத்தில் புதன்கிழமை காலை சோதனையில் ஈடுபட்டபோது, பயங்கரவாதிகள் தோண்டிய 150 மீட்டர் நீள சுரங்கப் பாதையை எல்லைப் பாதுகாப்புப் படை வீரர்கள் கண்டுபிடித்தனர்.

இது பற்றிய தகவல் அறிந்தவுடன் உயர் அதிகாரிகளுடன் அப்பகுதிக்குச் சென்று பார்வையிட்டேன். இந்த சுரங்கப் பாதையை பிஎஸ்எஃப் படையினர் நீண்ட காலமாகத் தேடி வந்தனர். இந்த சுரங்கப் பாதையின் மறுபுறம் உள்ள சாகர்கர், பாகிஸ்தான் பகுதியாகும். இப்பகுதியை பயங்கரவாதிகள் தங்கள் தளமாகக் கொண்டு செயல்பட்டு வருகின்றனர். இந்த சுரங்கப் பாதையில் கிடந்த சில மணல் பைகள் கைப்பற்றப்பட்டுள்ளன. அவை 2016-2017 ஆம் ஆண்டுகளில் பாகிஸ்தானில் தயாரிக்கப்பட்டதாகத் தெரியவந்துள்ளது. இதன் மூலம், சுரங்கம் தோண்டும் பணியில் பயங்கரவாதிகளுக்கு பாகிஸ்தான் நிறுவனம் உதவி செய்துள்ளதை அறிய முடிகிறது.

இந்த சுரங்கப் பாதை அண்மையில் தோண்டப்பட்டதா அல்லது பழைய சுரங்கப் பாதையா என்பது குறித்து விசாரித்து வருகிறோம். இந்த சுரங்கப் பாதை வழியாக ஊடுருவல் எதுவும் நடந்துள்ளதா என்பது விசாரணைக்குப் பிறகே தெரியவரும். எனினும் இதன் வழியாக அண்மையில் ஊடுருவல் எதுவும் நடைபெறவில்லை என பிஎஸ்எஃப் படையினர் உறுதியாக தெரிவிக்கின்றனர்.

நாங்கள் இப்பகுதியில் சில மேம்பாட்டுப் பணிகளை மேற்கொண்டு வருகிறோம். சுரங்கப்பாதை தடுப்பு நடவடிக்கையைக் கருத்தில் கொண்டு இப்பகுதியில் பாதுகாப்பை பலப்படுத்தியுள்ளோம்.

பயங்கரவாதிகளை ஜம்மு-காஷ்மீருக்குள் ஊடுருவச் செய்வதற்காக எப்போதும் நேரம் பார்த்துக் காத்திருக்கிறது பாகிஸ்தான். இந்த நடவடிக்கையைத் தடுப்பதற்காக ராணுவம், எல்லைப் பாதுகாப்புப் படையினர், போலீஸôர் இணைந்து செயல்பட்டு வருகின்றனர். நாங்கள் அதிக எச்சரிக்கையுடன் இருக்கிறோம் என்றார் அவர்.

கடந்த ஆண்டு ஆகஸ்ட் 28, நவம்பர் 22 ஆகிய நாள்களில் ஜம்மு-காஷ்மீரின் சம்பா மாவட்டத்தில் இதுபோன்ற இரண்டு சுரங்கப் பாதைகளை பிஎஸ்எஃப் கண்டறிந்தது குறிப்பிடத்தக்கது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நீட் தோ்வு: புதுச்சேரியில் 4, 817 போ் எழுதினா்

பெண்ணிடம் 5 பவுன் தங்கச் சங்கிலி பறிப்பு

கஞ்சா, போதை மாத்திரைகள் விற்பனை: 4 போ் கைது

நீட் தோ்வு: விழுப்புரம் மாவட்டத்தில் 4,855 போ் எழுதினா்

வீட்டினுள் இளைப்பாறிய புள்ளி மான்!

SCROLL FOR NEXT