வேளாண் பிரச்னைகள் குறித்து விரிவான விவாதம் நடத்தப்பட வேண்டும் என பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் எதிர்க்கட்சிகள் வலியுறுத்தின.
நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் கூடவுள்ள நிலையில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அனைத்துக் கட்சிக் கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது. அந்தக் கூட்டத்தில் வேளாண் சட்டங்கள் மற்றும் அது சார்ந்த பிரச்னைகள் குறித்து விரிவான விவாதம் நடத்தப்பட வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர்கள் வலியுறுத்தியுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதுபற்றி தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்ததாவது:
"காங்கிரஸ் கட்சியின் குலாம் நபி ஆசாத், திரிணமூல் காங்கிரஸின் சுதீப் பந்தோபத்யாய், ஆம் ஆத்மியின் பகவாந்த் மான், சிவசேனையிலிருந்து விநாயக் ரௌத் மற்றும் சிரோமணி அகாலி தளத்திலிருந்து பால்விந்தர் சிங் உள்ளிட்டோர் விவசாயிகள் போராட்டம் குறித்து விரிவாகப் பேசினர். மேலும் புதிய சட்டங்கள் தொடர்பான அனைத்து சர்ச்சைக்குரிய விவகாரங்கள் குறித்தும் விரிவாக ஆலோசனை நடத்த அரசு உறுதியளிக்க வேண்டும் என்று கோரிக்கை வைக்கப்பட்டது. அரசு தங்களை எதிரிகளாகப் பார்க்க வேண்டாம் என எதிர்க்கட்சித் தலைவர்கள் கூறினர்.
ஆசாத் தெரிவிக்கையில், போராட்டம் குறித்து காங்கிரஸ் ஏற்கெனவே அரசை எச்சரித்தது. தற்போது இந்த விளைவுகளை அரசே எதிர்கொள்ள வேண்டும் என்றார்.
விவசாயிகள் போராட்டத்தில் சமூக விரோதிகள் நுழைந்து பிரச்னைகளைக் கிளப்பியதாகவும், விவசாயிகள் அவரவர் இடத்துக்கு போய்விட்டதாகவும் பிரதமரிடம் பகவாந்த் மான் கூறினார். மேலும் வழக்குகள் மட்டும் உண்மையான விவசாயிகள் மீது பதியப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார். தொடர்ந்து பேசிய அவர் வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெற வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.
பெரும்பாலான எதிர்க்கட்சித் தலைவர்கள் நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் வேளாண் சட்டங்கள் குறித்து மீண்டும் விவாதிக்க வேண்டும் என வலியுறுத்தினர்."
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.