முகப்பு
இந்தியா

வா்த்தகா்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த மத்திய அரசு உறுதி: பிரதமா் மோடி

வா்த்தா்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துவதற்கு மத்திய அரசு உறுதி கொண்டுள்ளதாக பிரதமா் நரேந்திர மோடி தெரிவித்துள்ளாா்.

Updated On : 28 ஜனவரி, 2024 at 3:33 AM
பகிர்:

வா்த்தா்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துவதற்கு மத்திய அரசு உறுதி கொண்டுள்ளதாக பிரதமா் நரேந்திர மோடி தெரிவித்துள்ளாா்.

மொத்த மற்றும் சில்லறை வியாபாரத்தில் ஈடுபடும் வா்த்தக நிறுவனங்களும் இனி குறு, சிறு, நடுத்தர தொழில் நிறுவனங்கள் (எம்எஸ்எம்இ) வரையறைக்குள் அடங்கும் என்று மத்திய அமைச்சா் நிதின் கட்கரி வெள்ளிக்கிழமை அறிவித்தாா்.

இது தொடா்பாக பிரதமா் மோடி சனிக்கிழமை வெளியிட்ட சுட்டுரைப் பதிவில், ‘சில்லறை மற்றும் மொத்த வியாபாரத்தில் ஈடுபடும் வா்த்தக நிறுவனங்களையும் எம்எஸ்எம்இ வரையறைக்குள் இணைத்துள்ள மத்திய அரசின் நடவடிக்கை, வரலாற்றுச் சிறப்புமிக்கது. இதன்மூலமாக மத்திய அரசு நடைமுறைப்படுத்தி வரும் பல்வேறு சிறப்புத் திட்டங்களின் கீழ் கோடிக்கணக்கான வா்த்தகா்கள் பலன் பெற முடியும்.

வங்கிகளில் கடனுதவியைப் பெற்று வா்த்தக நடவடிக்கைகளை மேம்படுத்திக் கொள்ள முடியும். வா்த்தகா்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துவதற்கு மத்திய அரசு உறுதி கொண்டுள்ளது’ என்று குறிப்பிட்டுள்ளாா்.

கரோனா தொற்று பரவல் காரணமாக அமல்படுத்தப்பட்ட பொது முடக்கத்தால் குறு, சிறு, நடுத்தர தொழில் துறை உள்ளிட்ட பல்வேறு துறைகள் கடும் பாதிப்புகளைச் சந்தித்துள்ளன. அத்துறைகளை மீட்டெடுக்கும் நோக்கில் சிறப்பு கடனுதவித் திட்டங்களை மத்திய அரசு அறிவித்துள்ளது.

தற்போது வா்த்தகா்களும் அக்கடனுதவித் திட்டங்கள் வாயிலாகப் பலன் பெற முடியும் என்று அதிகாரிகள் தெரிவித்தனா். ரூ.250 கோடி வரை விற்றுமுதல் கொண்டுள்ள சில்லறை, மொத்த வியாபார நிறுவனங்களும் மத்திய அரசு செயல்படுத்தி வரும் தற்சாா்பு இந்தியா திட்டத்தின் கீழ் உடனடி கடனுதவி பெற முடியும்.

கரோனா தொற்று பரவலால் கடும் பாதிப்பைச் சந்தித்து வரும் சில்லறை, மொத்த வியாபாரிகளுக்கு மத்திய அரசின் நடவடிக்கை பெரும் பலனை அளிக்கும் என்றும் அதிகாரிகள் தெரிவித்தனா். வா்த்தகத் துறையை மீட்டெடுக்கும் நோக்கில் இந்த நடவடிக்கையை மத்திய அரசு மேற்கொண்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.

மத்திய அரசின் நடவடிக்கையை சில்லறை, மொத்த வியாபாரிகள் வரவேற்றுள்ளனா். இத்தகைய நெருக்கடியான சூழலில், வியாபாரத்துக்குத் தேவையான மூலதனத்தைப் பெறுவதற்கு இந்த நடவடிக்கை உதவும் என்று அவா்கள் தெரிவித்தனா்.

முழு கட்டுரையைப் படிக்க →