முகப்பு
இந்தியா

தில்லியில் முன்னாள் அமைச்சர் குமாரமங்கலத்தின் மனைவி கொலை 

முன்னாள் மத்திய அமைச்சர் ரங்கராஜன் குமாரமங்கலத்தின் மனைவி கிட்டி குமாரமங்கலம் (67), தில்லி வசந்த் விஹாரில் உள்ள அவரது வீட்டில் செவ்வாய்க்கிழமை இரவு கொலை செய்யப்பட்டார்.

Updated On : 28 ஜனவரி, 2024 at 3:35 AM
பகிர்:

புது தில்லி: முன்னாள் மத்திய அமைச்சர் ரங்கராஜன் குமாரமங்கலத்தின் மனைவி கிட்டி குமாரமங்கலம் (67), தில்லி வசந்த் விஹாரில் உள்ள அவரது வீட்டில் செவ்வாய்க்கிழமை இரவு கொலை செய்யப்பட்டார். இந்தக் கொலையில் தொடர்புடைய சலவை செய்யும்  இளைஞர் கைது செய்யப்பட்டார். மேலும் இருவரைத் தேடி வருவதாக போலீஸார் தெரிவித்தனர்.
தமிழகத்தைச் சேர்ந்தவர் முன்னாள் மத்திய அமைச்சர் ரங்கராஜன் குமாரமங்கலம். அவர் சேலம் ((1984 - 1996), திருச்சி (1998 - 2000) மக்களவைத் தொகுதி உறுப்பினராக இருந்தவர்.

முன்னாள் பிரதமர் நரசிம்மராவ் அரசில் சட்டம், நீதி மற்றும் கம்பெனி விவகாரத் துறை அமைச்சராகவும், வாஜ்பாய் அரசில் 1998 முதல் 2000 வரை மின் துறை அமைச்சராகவும் பதவி வகித்தவர். இவர், 2000, ஆகஸ்ட் 23-ஆம் தேதி காலமானார். அவரது மனைவியும் உச்சநீதிமன்ற வழக்குரைஞருமான கிட்டி குமாரமங்கலம் (67), தென்மேற்கு தில்லியில் உள்ள வசந்த் விஹார் பகுதியில் வசித்து வந்தார். இந்த நிலையில், செவ்வாய்க்கிழமை இரவு வீட்டில் அவர் கொலை செய்யப்பட்டார்.

இதுகுறித்து தில்லி காவல் துறையினர் புதன்கிழமை கூறியதாவது: 

Advertisement

வசந்த் விஹாரில் வசிக்கும் கிட்டியின் வீட்டில் மஞ்சு என்பவர் பணிப் பெண்ணாக வேலை செய்து வருகிறார். 

செவ்வாய்க்கிழமை இரவு கிட்டியின் வீட் டுக்கு அந்தப் பகுதியில் சலவைத் தொழிலாளியாக வேலை செய்யும் ராஜு (24) வந்தார். ராஜு ஏற்கெனவே அறிமுகமானவர் என்பதால், அங்கிருந்த பணிப் பெண் கதவைத் திறந்தார். அப்போது உள்ளே புகுந்த அவர், பணிப் பெண்ணை வேறு அறையில் அடைத்துவைத்து கட்டிப் போட்டார்.

இதனிடையே, அங்கு வந்த மேலும் இருவர் மற்றோர் அறையில் இருந்த கிட்டியின் முகத்தை தலையணையால் அழுத்திக் கொலை செய்தனர். அதன்பிறகு அங்கிருந்து ஓடிவிட்டனர்.

இந்த சம்பவத்துக்குப் பிறகு பணிப்பெண் சப்தமிட்டு அருகில் உள்ளவர்களை உதவிக்கு அழைத்துள்ளார். இந்தக் கொலை குறித்து போலீஸாருக்கு அவர் தகவல் தெரிவித்தார்.

இதைத் தொடர்ந்து, போலீஸார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணையில் ஈடுபட்டனர். கொலை நடந்த வீட்டில் பொருள்கள் சிதறிக் கிடந்தன. சூட்கேஸ் திறந்து கிடந்தது. இதை வைத்துப் பார்க்கும்போது இந்தக் கொலைக்கு பின்னால் கொள்ளை முயற்சி நடந்திருக்கும் என்று சந்தேகம் எழுந்துள்ளது. இந்தக் கொலை சம்பவம் தொடர்பாக ராஜு கைது செய்யப்பட்டுள்ளார்.  அவரிடம் நடத்திய விசாரணையில், இந்த சம்பவத்தில் மேலும் இருவருக்கு தொடர்புள்ளது தெரியவந்தது. அந்த இருவரையும் பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது என்று போலீஸார் தெரிவித்தனர்.

ரங்கராஜன் குமாரமங்கலம் -கிட்டி தம்பதிக்கு ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர். மகன் ரங்கராஜன் மோகன் குமாரமங்கலம் தற்போது காங்கிரஸ் கட்சியில் செயல் தலைவராக உள்ளார். 

2014-ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் சேலம் தொகுதியிலும், 2021, சட்டப்பேரவைத் தேர்தலில் ஓமலூர் தொகுதியிலும் போட்டியிட்டு தோல்வி அடைந்தார். ரங்கராஜன் குமாரமங்கலத்தின் சகோதரி லலிதா குமாரமங்கலம், பாஜகவை சேர்ந்தவர். தேசிய மகளிர் ஆணையத்தின் தலைவராகவும் பதவி வகித்தவர். இவர்களின் தாத்தா ப.சுப்பராயன், பிரிக்கப்படாத சென்னை மாகாணத்தின் முதல்வராக 1925 முதல் 1930-ஆம் ஆண்டு வரை இருந்தவர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments