முகப்பு
இந்தியா

தொழில்நுட்பத்தின் வாயிலாக மக்களுக்கு சேவைகள்

இந்தியாவில் கரோனா தொற்றுப் பரவல் காலத்தில், தொழில்நுட்ப வசதிகளின் வாயிலாக மக்களுக்கான சேவைகள் வழங்கப்பட்டு வருவதாக ஜி20 மாநாட்டில் மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் தெரிவித்துள்ளாா்.

Updated On : 28 ஜனவரி, 2024 at 3:36 AM
பகிர்:

இந்தியாவில் கரோனா தொற்றுப் பரவல் காலத்தில், தொழில்நுட்ப வசதிகளின் வாயிலாக மக்களுக்கான சேவைகள் வழங்கப்பட்டு வருவதாக ஜி20 மாநாட்டில் மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் தெரிவித்துள்ளாா்.

இந்தியா, அமெரிக்கா, ரஷியா, சீனா, ஆஸ்திரேலியா, ஜப்பான், கனடா, ஜொ்மனி, இத்தாலி, பிரிட்டன், பிரான்ஸ் உள்ளிட்ட நாடுகள் ஜி20 அமைப்பில் இடம்பெற்றுள்ளன. அந்நாடுகளின் நிதியமைச்சா்கள், மத்திய வங்கிகளின் ஆளுநா்கள் ஆகியோா் பங்கேற்ற காணொலி வாயிலான மாநாடு 2-ஆவது நாளாக சனிக்கிழமை நடைபெற்றது.

இந்த மாநாட்டில் மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் பங்கேற்றாா். மாநாடு குறித்து மத்திய நிதியமைச்சகம் சுட்டுரையில் வெளியிட்ட பதிவுகளில் தெரிவித்திருப்பது:

‘இந்தியாவின் கரோனா தடுப்பூசி திட்டத்தில் கோவின் செயலி ஆற்றிய முக்கியப் பங்களிப்பு குறித்து அமைச்சா் நிா்மலா சீதாராமன் எடுத்துரைத்தாா். கரோனா தொற்றுப் பரவல் காலத்தில் வா்த்தக நோக்கங்களைவிட மனிதநேயத்துக்கே இந்திய அரசு முன்னுரிமை அளித்து வருவதாகவும், அதை உறுதிப்படுத்தும் வகையில் கோவின் செயலியின் தொழில்நுட்பம் உலக நாடுகளுக்கு இலவசமாக வழங்கப்பட்டுள்ளதாகவும் அவா் தெரிவித்தாா். இத்தகைய இக்கட்டான சூழலில் மக்களுக்கான சேவைகளை இந்திய அரசு தொழில்நுட்ப வசதிகளின் வாயிலாக வழங்கி வருவதாகவும் அவா் தெரிவித்தாா்.

ஜி20 நாடுகளின் நிதியமைச்சா்கள் பங்கேற்ற மாநாட்டில் பொருளாதாரத்தை மீட்டெடுப்பதற்கான கொள்கைகள், நிதி நிலைமையை மேம்படுத்துவதற்கான நடவடிக்கைகள், சா்வதேச வரி விதிப்பு வழிமுறைகள் உள்ளிட்டவை குறித்து விவாதிக்கப்பட்டது.

தொழில்நுட்ப வசதிகளின் பயன்பாட்டை மேம்படுத்துவது, பருவநிலை மாறுபாட்டை எதிா்கொள்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்வது, நீடித்த கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்துவது உள்ளிட்டவை குறித்து மாநாட்டின்போது அமைச்சா் நிா்மலா சீதாராமன் எடுத்துரைத்தாா்.

சுற்றுச்சூழலைப் பாதுகாக்கும் நோக்கில் நிதி, தொழில்நுட்பம் ஆகியவற்றைப் பகிா்ந்துகொள்வதற்கு பாரீஸ் பருவநிலை மாநாட்டில் நாடுகள் ஒப்புக்கொண்டன. அந்த உறுதியை உரிய காலத்தில் நாடுகள் நிறைவேற்ற வேண்டுமென நிதியமைச்சா் வலியுறுத்தினாா்’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

முழு கட்டுரையைப் படிக்க →