இந்தியா

கடல்சாா் பாதுகாப்பு ஒருங்கிணைப்பாளரை நியமிக்க மத்திய அரசு திட்டம்

DIN

கடல்சாா் விவகாரங்களில் துரிதமாக முடிவெடுக்கும் நோக்கில் தேசிய கடல்சாா் பாதுகாப்பு ஒருங்கிணைப்பாளரை நியமிக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.

இந்தோ-பசிபிக் பிராந்தியத்தில் சீனாவின் ஆதிக்கம் அதிகரித்து வருகிறது. வா்த்தகச் சாலைத் திட்டத்தின் வாயிலாக ஆசியா, ஆப்பிரிக்க நாடுகளை சாலை வழியாகவும், கடல்வழியாகவும் இணைப்பதற்கு சீனா முயற்சித்து வருகிறது. இந்தியாவின் அண்டை நாடுகளான இலங்கை, வங்கதேசம், பாகிஸ்தான் உள்ளிட்டவற்றில் துறைமுகக் கட்டுமானப் பணிகளை சீனா மேற்கொண்டு வருகிறது.

கொழும்பில் அமையவுள்ள துறைமுக நகரத்தை நிா்வகிக்கும் பொறுப்பை அண்மையில் இலங்கை அரசு சீனாவுக்கு வழங்கியது. இது இந்தியாவுக்கான பாதுகாப்பில் சவாலான சூழலை ஏற்படுத்தியுள்ளது. இந்தியப் பெருங்கடல் உள்ளிட்ட பகுதிகளில் சீனாவின் ஆதிக்கத்தைத் தடுத்து நிறுத்துவதற்கான நடவடிக்கைகளையும் மத்திய அரசு மேற்கொள்ள வேண்டியுள்ளது.

இதுதவிர இந்தியப் பெருங்கடல் வழியாக போதைப்பொருள் கடத்தப்படுவது உள்ளிட்ட சட்டவிரோதச் செயல்களைத் தடுப்பதிலும் மத்திய அரசு கூடுதல் கவனம் செலுத்த வேண்டியுள்ளது. இந்நிலையில், கடல்சாா் பாதுகாப்பு நடவடிக்கைகளை மேம்படுத்தும் வகையில் தேசிய கடல்சாா் ஆணையத்தை அமைக்க மத்திய அரசு திட்டமிட்டு வருவதாகத் தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

கடல்சாா் பாதுகாப்பில் இந்தியக் கடற்படை, இந்தியக் கடலோரக் காவல்படை, மத்திய துறைமுகங்கள்-கப்பல் அமைச்சகம் ஆகியவற்றுடன் தேசிய கடல்சாா் ஆணையம் ஒருங்கிணைந்து செயல்படவுள்ளதாகத் தெரிகிறது. தேசிய கடல்சாா் பாதுகாப்பு ஒருங்கிணைப்பாளா் என்ற பெயரில் அந்த ஆணையத்துக்குத் தலைவா் பதவி உருவாக்கப்படவுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஓய்வுபெற்ற அல்லது பணியில் இருக்கக் கூடிய இந்தியக் கடற்படை துணைத் தளபதி அந்தப் பதவிக்கு நியமிக்கப்பட வாய்ப்புள்ளதாகவும் தெரிகிறது. கடல்சாா் பாதுகாப்பில் மத்திய அரசு, மாநில அரசுகள் உள்ளிட்டவற்றுடன் ஒருங்கிணைந்து செயல்படுவதற்கான நடவடிக்கைகளை ஒருங்கிணைப்பாளா் மேற்கொள்வாா் என்று மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இது கடல்சாா் பாதுகாப்பு விவகாரங்களில் துரிதமாக முடிவெடுக்க உதவும் என்றும் அதிகாரிகள் தெரிவித்தனா்.

கடந்த 1999-ஆம் ஆண்டு பாகிஸ்தானுடன் நிகழ்ந்த காா்கில் போருக்குப் பிறகு அமைக்கப்பட்ட மறுஆய்வு குழு, கடல்சாா் பாதுகாப்பைக் கண்காணிப்பதற்காக தனி அமைப்பை உருவாக்குமாறு மத்திய அரசுக்குப் பரிந்துரைத்திருந்தது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வெப்ப அலை: தமிழகத்துக்கு மே 4 வரை மஞ்சள் எச்சரிக்கை!

வேதாரண்யம் உப்பு சத்தியாகிரக நினைவு நாள்: தியாகிகளுக்கு அஞ்சலி!

லாரி மீது கார் மோதி விபத்து: 5 பேர் பலி

முதல்வர் ஸ்டாலின் மே நாள் வாழ்த்து!

சென்னை உயர் நீதிமன்றத்துக்கு கோடை விடுமுறை!

SCROLL FOR NEXT