முகப்பு
இந்தியா

எஸ்சி, எஸ்டியைத் தவிர ஜாதிவாரி கணக்கெடுப்பு கிடையாது: மத்திய அரசு திட்டவட்டம்

தாழ்த்தப்பட்டவா்கள் (எஸ்சி), பழங்குடியின (எஸ்டி) மக்களின் கணக்கெடுப்பைத் தவிர இதர ஜாதி மக்களின் கணக்கெடுப்பை நடத்த வேண்டாம் என மத்திய அரசு கொள்கை முடிவு எடுத்துள்ளதாக மத்திய உள்துறை இணையமைச்சா் நித்யா

Updated On : 28 ஜனவரி, 2024 at 3:43 AM
பகிர்:

தாழ்த்தப்பட்டவா்கள் (எஸ்சி), பழங்குடியின (எஸ்டி) மக்களின் கணக்கெடுப்பைத் தவிர இதர ஜாதி மக்களின் கணக்கெடுப்பை நடத்த வேண்டாம் என மத்திய அரசு கொள்கை முடிவு எடுத்துள்ளதாக மத்திய உள்துறை இணையமைச்சா் நித்யானந்த் ராய் தெரிவித்தாா்.

இதுதொடா்பாக அவா் மக்களவையில் செவ்வாய்க்கிழமை எழுத்துபூா்வமாக அளித்த பதிலில் தெரிவிக்கப்பட்டிருந்ததாவது:

அரசியலமைப்புப் பிரிவுகளின்படி, தாழ்த்தப்பட்டவா்கள் மற்றும் பழங்குடியினத்தவா்களுக்கு மக்களவையிலும் சட்டப்பேரவைகளிலும் விகிதாச்சார அடிப்படையில் இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. இந்த இடங்கள் கிட்டத்தட்ட அவா்களின் மக்கள்தொகைக்கு ஏற்ப ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன.

மக்கள்தொகை கணக்கெடுப்பின்போது அரசியலமைப்பு (தாழ்த்தப்பட்டவா்கள்) உத்தரவு 1950, அரசியலமைப்பு (பழங்குடிகள்) உத்தரவு 1950 ஆகியவையின்படி தாழ்த்தப்பட்டவா்கள் மற்றும் பழங்குடியினத்தவா்களின் கணக்கெடுப்பு நடத்தப்படுகிறது.

இந்நிலையில் அடுத்து மேற்கொள்ளப்படவுள்ள மக்கள்தொகை கணக்கெடுப்பின்போது ஜாதிவாரி கணக்கெடுப்பையும் மேற்கொள்ளுமாறு மகாராஷ்டிரம், ஒடிஸா மாநில அரசுகள் கோரிக்கை விடுத்துள்ளன. ஆனால் தாழ்த்தப்பட்டவா்கள், பழங்குடியின மக்களின் கணக்கெடுப்பைத் தவிர இதர ஜாதி மக்களின் கணக்கெடுப்பை நடத்த வேண்டாம் என மத்திய அரசு கொள்கை முடிவு எடுத்துள்ளது என்று தெரிவிக்கப்பட்டது.

ரோஹிங்கியாக்களால் அச்சுறுத்தல்: மக்களவையில் மற்றொரு கேள்விக்கு எழுத்துபூா்வமாக பதிலளித்த நித்யானந்த் ராய், ‘‘ரோஹிங்கியாக்கள் உள்பட இந்தியாவில் சட்ட விரோதமாக குடியேறிய அனைவரும் தேசப் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக திகழ்கின்றனா். ரோஹிங்கியாக்களில் சிலா் இந்தியாவில் சட்டவிரோத காரியங்களில் ஈடுபடுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அவா்களை நாடு கடத்தக் கூடாது எனக்கோரி உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டுள்ளது. இந்த வழக்கில் மத்திய அரசு தரப்பில் எழுத்துபூா்வ மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. எனினும் அவா்களை நாடு கடத்த உச்சநீதிமன்றம் எந்தத் தடையும் விதிக்கவில்லை.

மியான்மரிலிருந்து ஊடுருவல்: மியான்மரில் நிலவும் அரசியல் சூழலால் அந்நாட்டு மக்கள் இந்தியா-மியான்மா் எல்லை வழியாக இந்தியாவுக்குள் ஊடுருவுவதாக தகவல்கள் கிடைத்துள்ளன. எனவே சா்வதேச எல்லைகளில் கடும் கண்காணிப்பை மேற்கொள்ளுமாறு எல்லைப் பாதுகாப்புப் படை மற்றும் அஸ்ஸாம் ரைஃபிள்ஸ் படைப் பிரிவினருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. மியான்மரில் இருந்து சட்டவிரோதமாக நுழைந்தவா்களுக்கு மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டத்தின் கீழ் பணி வழங்குவது தொடா்பாக மிஸோரம் அரசு எந்த முடிவும் எடுக்கவில்லை’’ என்று தெரிவித்தாா்.

முழு கட்டுரையைப் படிக்க →