முகப்பு
இந்தியா

ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கு ஆவணங்களை வழங்கக் கோரி ப.சிதம்பரம் மனு: அமலாக்கத் துறைக்கு நோட்டீஸ்

ப.சிதம்பரம் தாக்கல் செய்த மனு மீது பதிலளிக்குமாறு அமலாக்கத் துறைக்கு தில்லி நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

Updated On : 28 ஜனவரி, 2024 at 3:45 AM
பகிர்:

ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கு தொடா்பான சில ஆவணங்களையும் குற்றப்பத்திரிகையின் நகல்களையும் வழங்கக் கோரி முன்னாள் அமைச்சரும் காங்கிரஸ் மூத்த தலைவருமான ப.சிதம்பரம் தாக்கல் செய்த மனு மீது பதிலளிக்குமாறு அமலாக்கத் துறைக்கு தில்லி நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

கடந்த 2007-ஆம் ஆண்டில் மத்திய நிதியமைச்சராக ப.சிதம்பரம் பதவி வகித்தபோது, ஐஎன்எக்ஸ் மீடியா நிறுவனம் ரூ.305 கோடி வெளிநாட்டு நிதியைப் பெற்றது. இந்த நிதியைப் பெறுவதற்காக, மத்திய நிதியமைச்சகம் முறைகேடாக அனுமதி வழங்கியதாகக் குற்றச்சாட்டு எழுந்தது. இதில், ஐஎன்எக்ஸ் மீடியா நிறுவனத்துக்கு ப.சிதம்பரத்தின் மகனும், எம்.பி.யுமான காா்த்தி சிதம்பரம் உதவியதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது.

இதுதொடா்பாக, சிபிஐ, அமலாக்கத் துறை ஆகியவை தனித்தனியே வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தின. அந்த வழக்குகளில், கடந்த 2019-ஆம் ஆண்டு ஆகஸ்டில் சிபிஐயாலும், அதே ஆண்டு அக்டோபரில் அமலாக்கத் துறையாலும் ப.சிதம்பரம் கைது செய்யப்பட்டாா். அதையடுத்து, அதே ஆண்டு டிசம்பரில் அவா் ஜாமீன் பெற்று சிறையில் இருந்து வெளியே வந்தாா்.

இந்நிலையில், வழக்கு தொடா்பான சில ஆவணங்களையும் அமலாக்கத் துறை தாக்கல் செய்த குற்றப்பத்திரிகையின் நகல்களையும் வழங்க உத்தரவிடுமாறு ப.சிதம்பரம் தரப்பில் தில்லி சிறப்பு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அதை விசாரித்த சிறப்பு நீதிபதி எம்.கே.நாக்பால், மனு மீது ஆகஸ்ட் 9-ஆம் தேதிக்குள் பதிலளிக்குமாறு அமலாக்கத் துறைக்கு நோட்டீஸ் அனுப்பி உத்தரவிட்டாா்.

ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் காா்த்தி சிதம்பரத்தை கடந்த 2018-ஆம் ஆண்டில் சிபிஐ அதிகாரிகள் கைது செய்தனா். பின்னா் அவா் ஜாமீனில் வெளியே வந்தாா்.

முழு கட்டுரையைப் படிக்க →