மின்சார வாகனங்களுக்கு பதிவுக் கட்டண சலுகை: மத்திய அரசு வரைவு அறிக்கை வெளியிட்டது
மின்கலங்கள் மூலம் இயங்கும் புதிய வாகனங்கள் பதிவு செய்தல் மற்றும் புதுப்பித்தல் போன்றவைகளுக்கும் மோட்டார் வாகனப்பதிவு (ஆர்சி) கட்டணங்களிலிருந்து விலக்கு அளிக்கப்படுவதாக
மின்கலங்கள் மூலம் இயங்கும் புதிய வாகனங்கள் பதிவு செய்தல் மற்றும் புதுப்பித்தல் போன்றவைகளுக்கும் மோட்டார் வாகனப்பதிவு (ஆர்சி) கட்டணங்களிலிருந்து விலக்கு அளிக்கப்படுவதாக மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை துறை அமைச்சகம் செவ்வாய்க்கிழமை தெரிவித்துள்ளது. இதற்கான பொதுமக்கள் கருத்து கேட்பிற்கும் சிறப்பு அரசிதழ் வரைவு அறிவிக்கையையும் அமைச்சகம் வெளியிட்டுள்ளது.
கடந்த சில மாதங்களாக கச்சா எண்ணெய் விலை உயர்வை அடுத்து, பெட்ரோல் விலையும் ரூ.100-ஐ தாண்டியுள்ளது. எண்ணெய் இறக்குமதி செலவுகளை கட்டுப்படுத்தும் நோக்கில் மட்டுமல்லாது சுற்றுப்புற மாசுவை தடுக்கும் நோக்கத்திலும் மத்திய, மாநில அரசுகள் மின்கலங்களில் இயக்கும் மின்-வாகனங்களை உபயோகிக்க பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. மின்சார பேட்டரி மூலம் இயங்கும் வாகனங்களை ஊக்குவிக்க மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் நிதின் கட்கரியும் பல்வேறு சலுகைகளை அறிவித்து வந்தார்.
தற்போது அவரது அமைச்சகம் மே 27-ஆம் தேதி வெளியிட்டுள்ள வரைவு அரசிதழ் அறிவிக்கையில் தெரிவித்திருப்பதாவது:
1989-ஆம் ஆண்டு மத்திய மேட்டார் வாகன விதிகள் திருத்தம் செய்யப்பட்டு மின்கலங்களில் இயங்கும் புதிய வாகனங்கள் பதிவு செய்யப்பட வரும்போது அதற்கான கட்டணங்களுக்கு விலக்கு அளிக்கப்பட்டு பதிவு செய்யப்படும். மேலும், இத்தகைய வாகனங்கள் புதுபிக்கவும் செலுத்தவேண்டிய கட்டணங்களிலும் விலக்கு அளிக்கப்படும். இந்த முடிவுகளில் பொதுமக்கள் தங்கள் கருத்துகளை மத்திய அரசுக்கு 30 நாள்களில் தெரிவிக்கலாம் என்றும் அமைச்சகத்தின் வரைவு அறிவிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதே சலுகையை தேசிய தலைநகர் தில்லி அரசும் அளித்துள்ளது. கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் தில்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவால், "வாகனங்களினால் ஏற்படும் காற்று மாசுபடுதலைக் கட்டுப்படுத்த தேசிய தலைநகரில் பதிவாகும் அனைத்து மின்சார பேட்டரி வாகனங்களுக்கும் பதிவுக் கட்டணத்திலிருந்து (ஆர்சி) விலக்கு அளிக்கு அளிக்கப்படும்' என அறிவித்திருந்ததும் குறிப்பிடத்தக்கது.