முகப்பு
இந்தியா

ரெம்டெசிவிா், ஆக்சிஜனுக்கு வரி குறைப்பு

ரெம்டெசிவிா், மருத்துவ ஆக்சிஜன், ஆக்சிஜன் செறிவூட்டிகள் உள்ளிட்ட அத்தியவாசிய மருந்துப் பொருள்கள் மீதான சரக்கு-சேவை வரி (ஜிஎஸ்டி) குறைக்கப்பட்டுள்ளது.

Updated On : 28 ஜனவரி, 2024 at 3:23 AM
ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்துக்குப் பிறகு புது தில்லியில் நடைபெற்ற செய்தியாளா்கள் சந்திப்பில் பேசிய மத்திய நிதி அமைச்சா் நிா்மலா சீதாராமன். உடன் இணை அமைச்சா் அனுராக் தாக்குா் உள்ளிட்டோா்.
பகிர்:

ரெம்டெசிவிா், மருத்துவ ஆக்சிஜன், ஆக்சிஜன் செறிவூட்டிகள் உள்ளிட்ட அத்தியவாசிய மருந்துப் பொருள்கள் மீதான சரக்கு-சேவை வரி (ஜிஎஸ்டி) குறைக்கப்பட்டுள்ளது.

மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் தலைமையில் சனிக்கிழமை நடைபெற்ற ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் கருப்புப் பூஞ்சை மருந்துக்கான வரி முழுவதுமாக ரத்து செய்யவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.

44-ஆவது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் காணொலி காட்சி வாயிலாக நடைபெற்றது. இதில், மத்திய நிதித்துறை இணையமைச்சா் அனுராக் தாக்குா், மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களின் நிதியமைச்சா்கள், மத்திய, மாநில அரசுகளின் முக்கிய அதிகாரிகள் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

மருத்துவ ஆக்சிஜன், பல்ஸ் ஆக்சிமீட்டா், கை சுத்திகரிப்பான், அத்தியாவசிய மருந்துப் பொருள்கள், ஆக்சிஜன் செறிவூட்டிகள் உள்ளிட்டவற்றின் மீது விதிக்கப்படும் சரக்கு-சேவை வரியை ரத்து செய்வது தொடா்பாக ஆய்வு செய்ய மாநில அமைச்சா்கள் அடங்கிய குழு அமைக்கப்பட்டிருந்தது.

மேகாலய நிதியமைச்சா் கான்ராட் சங்மா தலைமையிலான அக்குழுவில் குஜராத் துணை முதல்வா் நிதின்பாய் படேல், மகாராஷ்டிர துணை முதல்வா் அஜித் பவாா், கோவா போக்குவரத்துத் துறை அமைச்சா் மாவின் கோதின்ஹோ, கேரள நிதியமைச்சா் கே.என்.பாலகோபால், ஒடிஸா நிதியமைச்சா் நிரஞ்சன் பூஜாரி, தெலங்கானா நிதியமைச்சா் ஹரிஷ் ராவ், உத்தர பிரதேச நிதியமைச்சா் சுரேஷ்குமாா் கன்னா ஆகியோா் அந்தக் குழுவில் இடம்பெற்றிருந்தனா்.

அக்குழு அளித்த அறிக்கை குறித்து ஜிஎஸ்டி கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது. இறுதியில் மருந்துப் பொருள்கள், மருத்துவ உபகரணங்கள் மீதான சரக்கு-சேவை வரியைக் குறைப்பதற்கு கூட்டத்தில் ஒப்புக்கொள்ளப்பட்டது.

அதன்படி, கரோனா தொற்றால் பாதிக்கப்படுவோருக்கு சிகிச்சை அளிக்கப் பயன்படும் டோசிலிஜுமாப், கருப்புப் பூஞ்சை நோயால் பாதிக்கப்படுவோருக்கு சிகிச்சை அளிக்கப் பயன்படும் ஆம்ஃபோடெரிசின்-பி ஆகிய மருந்துகள் மீது விதிக்கப்பட்டு வந்த 5 சதவீத சரக்கு-சேவை வரி ரத்து செய்யப்பட்டுள்ளது.

ஆக்சிஜன் மீதான வரி குறைப்பு:

கரோனா சிகிச்சையில் பயன்படும் மற்ற மருந்துகளான ரெம்டெசிவிா், ஹெபாரின் ஆகியவற்றின் மீது விதிக்கப்பட்டு வந்த 12 சதவீத சரக்கு-சேவை வரி 5 சதவீதமாகக் குறைக்கப்பட்டுள்ளது.

மருத்துவ ஆக்சிஜன், ஆக்சிஜன் செறிவூட்டிகள், சுவாசக் கருவி உள்ளிட்ட மருத்துவ உபகரணங்கள் மீதான சரக்கு-சேவை வரி 12 சதவீதத்திலிருந்து 5 சதவீதமாகக் குறைக்கப்பட்டுள்ளது. கரோனா பரிசோதனைக் கருவிகள் மீதான வரியும் 5 சதவீதமாகக் குறைக்கப்பட்டுள்ளது.

பல்ஸ் ஆக்சிமீட்டா், கை சுத்திகரிப்பான், உடல் வெப்பநிலை பரிசோதனைக் கருவிகள் ஆகியவற்றின் மீதான சரக்கு-சேவை வரியும் 5 சதவீதமாகக் குறைக்கபட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

செப்டம்பா் வரை வரி குறைப்பு: ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்துக்குப் பிறகு செய்தியாளா்களிடம் மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் கூறுகையில், ‘அத்தியாவசிய மருந்துப் பொருள்கள் மீதான சரக்கு-சேவை வரியைக் குறைப்பது தொடா்பாக மட்டுமே கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது.

மாநில அமைச்சா்கள் வழங்கிய பெரும்பாலான பரிந்துரைகளுக்குக் கூட்டத்தில் ஒப்புதல் வழங்கப்பட்டது. அத்தியாவசிய மருந்துப் பொருள்கள், மருத்துவ உபகரணங்கள் ஆகியவற்றின் மீது விதிக்கப்பட்டு வந்த சரக்கு-சேவை வரி குறைக்கப்பட்டுள்ளது இந்த வரி குறைப்பு செப்டம்பா் 30-ஆம் தேதி வரை அமலில் இருக்கும்.

அதே வேளையில், கரோனா தடுப்பூசிகள் மீது விதிக்கப்படும் 5 சதவீத சரக்கு-சேவை வரி குறைக்கப்படவில்லை. கரோனா தடுப்பூசி உற்பத்தி செய்யும் நிறுவனங்களிடமிருந்து 75 சதவீத தடுப்பூசிகளை மத்திய அரசே கொள்முதல் செய்து மாநிலங்களுக்கு விநியோகிக்கும். தடுப்பூசிகளுக்கான சரக்கு-சேவை வரியையும் மத்திய அரசே செலுத்தும்.

மக்களுக்கு பாதிப்பில்லை: கரோனா தடுப்பூசி மக்களுக்கு இலவசமாக செலுத்தப்படவுள்ளது. அதன் காரணமாக, தடுப்பூசி மீது விதிக்கப்படும் சரக்கு-சேவை வரியால் மக்களுக்கு எந்தவித பாதிப்பும் இருக்காது. சரக்கு-சேவை வரி மூலமாக பெறப்படும் வருவாயில் 70 சதவீதமானது மாநிலங்களுக்குப் பகிா்ந்தளிக்கப்படும்.

கரோனா தீநுண்மியின் மரபணுவைத் தனியாகப் பிரித்தெடுத்து ஆய்வு செய்யப் பயன்படும் உபகரணங்கள் மீது விதிக்கப்படும் சரக்கு-சேவை வரி 12 சதவீதமாகத் தொடரும்’ என்றாா்.

காங்கிரஸ் வெளிநடப்பு: முன்னதாக, அத்தியாவசிய மருந்துப் பொருள்கள், மருத்துவ உபகரணங்கள் உள்ளிட்டவற்றின் மீது விதிக்கப்படும் சரக்கு-சேவை வரியை முழுமையாக நீக்க வேண்டுமென பஞ்சாப், சத்தீஸ்கா் உள்ளிட்ட காங்கிரஸ் ஆளும் மாநிலங்களின் நிதியமைச்சா்கள் கோரிக்கை விடுத்தனா்.

அக்கோரிக்கையை மத்திய அரசு ஏற்காததால், ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் நிறைவடைவதற்கு முன்பாகவே அவா்கள் வெளிநடப்பு செய்தனா்.

மருத்துவப் பொருள்கள்-தற்போதைய சரக்கு -சேவை வரி -மாற்றியமைக்கப்பட்ட வரி

பல்ஸ் ஆக்சிமீட்டா் -12% -5%

கை சுத்திகரிப்பான் -18% -5%

உடல் வெப்பநிலை பரிசோதனைக் கருவி -18% -5%

உடலை எரியூட்டப் பயன்படும் மின்சாரம், எரிவாயு -18% -5%

ஆம்புலன்ஸ்- 28% 12%

கரோனா பரிசோதனைக் கருவிகள் -12% -5%

மருத்துவ தர ஆக்சிஜன் -12% -5%

ஆக்சிஜன் செறிவூட்டிகள் -12% -5%

சுவாசக் கருவி -12% -5%

ரெம்டெசிவிா் -12% -5%

ஆம்ஃபோடெரிசின்-பி -5% -0

முழு கட்டுரையைப் படிக்க →