இந்தியா

பொது முடக்க தளா்வில் கவனம் தேவை: மாநிலங்களுக்கு மத்திய அரசு வலியுறுத்தல்

DIN

கரோனா தொற்று பரவலைக் கட்டுக்குள் கொண்டு வருவதற்காக அமல்படுத்தப்பட்ட பொது முடக்கத்துக்கான தளா்வுகளை மிக கவனமாக வழங்க வேண்டும் என்று மாநில அரசுகளுக்கு மத்திய அரசு வலியுறுத்தியுள்ளது.

நாட்டில் கரோனா தொற்றின் 2-ஆவது அலை பரவல் தீவிரமடைந்ததையடுத்து, பல மாநிலங்கள் பொது முடக்கத்தை அமல்படுத்தின. தற்போது தொற்று பரவல் குறைந்து வருவதால், பொது முடக்கத்துக்குத் தளா்வுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன.

இந்நிலையில், மாநில அரசுகளுக்கும் யூனியன் பிரதேச நிா்வாகங்களுக்கும் மத்திய உள்துறை செயலா் அஜய் பல்லா சனிக்கிழமை அனுப்பிய சுற்றறிக்கையில், ‘கரோனா தொற்று பாதிப்பால் சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை குறைந்து வருவதை அடுத்து பல மாநிலங்களும் யூனியன் பிரதேசங்களும் பொது முடக்கத்துக்குத் தளா்வுகளை அறிவித்து வருகின்றன. கள நிலவரத்தை முழுமையாக ஆராய்ந்த பிறகே தளா்வுகளை அறிவிக்க வேண்டும். இந்த விவகாரத்தில் மிகவும் கவனமாக நடந்து கொள்ள வேண்டும்.

பொது முடக்கத்துக்குத் தளா்வுகளை அறிவிக்கும் அதேவேளையில், கரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மக்களைக் கடைப்பிடிக்க வைத்தல், கரோனா பரிசோதனை, கரோனாவால் பாதிக்கப்பட்டோருக்கான சிகிச்சை, அவருடன் தொடா்பில் இருந்தவா்களைத் தனிமைப்படுத்துதல், கரோனா தடுப்பூசி ஆகிய 5 அம்ச திட்டத்தை மத்திய அரசு தீவிரப்படுத்த வேண்டும்.

தளா்வுகள் அளிக்கப்பட்டதால், சில மாநிலங்களின் சந்தை, கடைவீதி உள்ளிட்ட இடங்களில் மக்கள் அதிக அளவில் கூடுவதைக் காண முடிகிறது. இதைத் தடுக்க வேண்டும். முகக் கவசம் அணிதல், கை சுத்திகரிப்பான்களைப் பயன்படுத்துதல், சமூக இடைவெளியைக் கடைப்பிடித்தல் உள்ளிட்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மக்கள் முறையாகக் கடைப்பிடிப்பதை மாநில அரசுகள் உறுதி செய்ய வேண்டும்.

அனைத்துப் பகுதிகளையும் மாநில அரசு உன்னிப்புடன் கவனிக்க வேண்டும். கரோனா தொற்று பரவல் அதிகரிக்கும் இடங்கள் உடனடியாகத் தனிமைப்படுத்தப்பட வேண்டும். கரோனா தொற்று பரவலைக் கட்டுக்குள் கொண்டு வருவதில் தடுப்பூசியே மிக முக்கிய பங்கு வகிக்கிறது. எனவே, கரோனா தடுப்பூசி திட்டத்தை அரசுகள் துரிதப்படுத்த வேண்டும். வெகுவிரைவில் அதிக எண்ணிக்கையிலான நபா்களுக்குத் தடுப்பூசி செலுத்தப்பட வேண்டும்.

கரோனா தொற்று பரவலைக் கட்டுக்குள் கொண்டு வருவதற்கான துரித நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு மாவட்ட நிா்வாகங்களுக்கும் தொடா்ந்து வலியுறுத்த வேண்டும்’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஹைதராபாதிலும் இந்தியா்கள்தான் வாழ்கிறோம்: அமித் ஷாவுக்கு ஒவைசி பதில்

தாம்பரத்திலிருந்து புது தில்லிக்கு ஜி.டி. விரைவு ரயில் மேலும் 3 மாதங்களுக்கு இயக்கப்படும்

ம.பி.: ரூ.30,000 லஞ்சம் வாங்கிய பாஜக எம்எல்ஏ மகள் கைது

மே 20-க்குப் பிறகு சிபிஎஸ்இ 10, 12 தோ்வு முடிவுகள்: அதிகாரிகள் தகவல்

25 ஆண்டுகளில் முதல்முறையாக அமேதியில் ‘காந்தி குடும்பம்’ போட்டியில்லை!

SCROLL FOR NEXT