குழந்தையை முதுகில் சுமந்தபடி, உயிரை பணயம் வைத்து தடுப்பூசி செலுத்தும் ஊழியர் 
இந்தியா

குழந்தையை முதுகில் சுமந்தபடி, உயிரை பணயம் வைத்து தடுப்பூசி செலுத்தும் ஊழியர்

ஒப்பந்த முறையில் பணியாற்றி வரும் சுகாதார ஊழியர் மந்தி குமாரி, தனது ஒன்றரை வயது குழந்தையை முதுகில் சுமந்தபடி, கையில் தடுப்பூசி பெட்டியை எடுத்துக் கொண்டு ஒரு ஆற்றைக் கடந்து செல்கிறார்.

DIN


ராஞ்சி: ஒப்பந்த முறையில் பணியாற்றி வரும் சுகாதார ஊழியர் மந்தி குமாரி, தனது ஒன்றரை வயது குழந்தையை முதுகில் சுமந்தபடி, கையில் தடுப்பூசி பெட்டியை எடுத்துக் கொண்டு ஒரு ஆற்றைக் கடந்து செல்கிறார்.

இவ்வளவும் எதற்கென்றால், ஜார்க்கண்ட் மாநிலம் லதேஹார் பகுதியில் உள்ள மஹௌதன்ர் என்ற இடத்தில் வசிக்கும் குழந்தைகளுக்கு தடுப்பூசி செலுத்துவதற்காகத்தான்.

செத்மா சுகாதார துணை மையத்தில் பணியமர்த்தப்பட்டிருக்கும் மந்தி, எட்டு கிராமங்களில் தடுப்பூசி செலுத்தும் பணியை மேற்கொண்டு வருகிறார். அனைத்து கிராமங்களும், அடர்ந்த வனப்பகுதி மற்றும் ஆற்றைக் கடந்து சுமார் 35 கிலோ மீட்டர் தூரம் நடந்து சென்றால்தான் இந்தக் கிராமங்களை அடைய முடியும்.

இவர் தனது குழந்தையை முதுகில் சுமந்து கொண்டு ஆற்றைக் கடந்து வந்து கொண்டிருந்த போது, செய்தியாளரிடம் பேசினார். இது எனக்கு ஒன்றும் புதிதில்லை. இதற்கு முன்பும் இதுபோன்றுதான் பணியாற்றியுள்ளேன். இப்போது பிரசவ கால விடுமுறை முடிந்து மூன்று மாதங்களுக்கு முன்பு பணியில் சேர்ந்தேன். அப்போதிலிருந்து குழந்தையை முதுகில் சுமந்தபடி இப்படித்தான் பணியாற்றி வருகிறேன் என்கிறார் எளிமையாக.

பல கிராமங்கள் இந்த ஆற்றைக் கடந்துதான் இருக்கிறது. ஆனால் என்ன இந்த ஆறு ஆழமாக இல்லை. ஆனால் மழைக்காலத்தில் இந்த ஆற்றைக் கடக்க முடியாது. எனவே மழைக்காலம் தொடங்குவதற்குள் இந்தக் கிராமங்களில் இருக்கும் குழந்தைகளுக்கு அவரவர் வயதுக்கான தடுப்பூசிகளை போட்டு விட வேண்டும். என் நெஞ்சுப் பகுதி வரை கூட ஆற்றுத் தண்ணீர் இருக்கும் போது தைரியமாகக் கடந்து விடுவேன். அதற்கும் மேல் உயரும்போது, இந்த கிராமங்களுக்குச் செல்ல முடியாமல் போய்விடும் என்கிறார்.

ஒரு நாளைக்கு காடு, ஆறு என 40 கிலோ மீட்டருக்கும் மேல் நடந்து செல்ல வேண்டியது வரும் என்றும் கூறுகிறார்.

இவர் செல்லும் பல கிராமங்கள் நக்ஸலைட்டுகளின் கோரப்பிடியில் உள்ளது. அங்கு மருத்துவ வசதிகளை ஏற்படுத்துவது இன்னமும் அரசுக்கு பெரும் சவாலாகவே உள்ளது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

வித் லவ் பாடல் புரோமோ!

விபி - ஜி ராம் ஜி மசோதாவுக்கு குடியரசுத் தலைவர் ஒப்புதல்!

ஓட்டுநருக்கு திடீர் மாரடைப்பு! கார்கள் மீது மோதிய லாரி! | CBE

”ஏழைகளும் பாஜகவிற்கு சம்பந்தமில்லை!” 100 நாள் வேலைத்திட்டம் பெயர் மாற்றம் குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின்

புதுச்சேரியில் நடைபெறுவது தேஜ கூட்டணி அரசுதான்: முதல்வர் ரங்கசாமி

SCROLL FOR NEXT