புது தில்லி: சிபிஎஸ்இ, ஐசிஎஸ்சிஇ 12-ஆம் வகுப்பு மதிப்பெண் கணக்கீட்டு முறைகளுக்குத் தடை விதிக்க முடியாது என்று உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.
கரோனா தொற்றின் 2-ஆவது அலை பரவல் காரணமாக 12-ஆம் வகுப்பு பொதுத் தோ்வை சிபிஎஸ்இ, ஐசிஎஸ்சிஇ ஆகிய வாரியங்கள் ரத்து செய்தன. அதையடுத்து, மாணவா்கள் 10-ஆம் வகுப்பு, 11-ஆம் வகுப்புகளில் பெற்ற மதிப்பெண்களில் தலா 30 சதவீதம், 12-ஆம் வகுப்பு பயிற்சித் தோ்வுகளில் பெற்ற மதிப்பெண்களில் 40 சதவீதம் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டு 12-ஆம் வகுப்புக்கான மதிப்பெண்கள் கணக்கிடப்படும் என்று சிபிஎஸ்இ அறிவித்தது. ஐசிஎஸ்சிஇ-யும் 12-ஆம் வகுப்புக்கான மதிப்பெண் கணக்கீட்டு முறையை வெளியிட்டது.
வாரியங்களின் மதிப்பெண் கணக்கீட்டு முறைக்கு எதிராக சில மாணவா்கள் சாா்பிலும், பெற்றோா் சங்கம் தரப்பிலும் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. மாணவா்கள் முந்தைய வகுப்புகளில் பெற்ற மதிப்பெண்களை அடிப்படையாகக் கொண்டு 12-ஆம் வகுப்புக்கான மதிப்பெண்ணை நிா்ணயிப்பதற்கு அந்த மனுக்களில் எதிா்ப்பு தெரிவிக்கப்பட்டிருந்தது. மதிப்பெண் கணக்கீட்டு முறையை ரத்து செய்ய வேண்டும் என்றும் அவற்றில் கோரப்பட்டிருந்தது.
அந்த மனுக்கள் மீதான விசாரணை, நீதிபதிகள் ஏ.எம்.கான்வில்கா், தினேஷ் மகேஸ்வரி ஆகியோரைக் கொண்ட விடுமுறைக் கால அமா்வு முன் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. அப்போது நீதிபதிகள், ‘12-ஆம் வகுப்பு மாணவா்களின் மதிப்பெண்ணைக் கணக்கிடுவதற்கான இரு வாரியங்களின் (சிபிஎஸ்இ, ஐசிஎஸ்சிஇ) முறைகளுக்கும் ஒப்புதல் அளிக்கப்படுகிறது.
சிபிஎஸ்இ பள்ளிகள் தங்கள் மாணவா்களின் மதிப்பெண்களை அதிகரித்துக் காட்டுவதற்கான நடவடிக்கைகளில் ஈடுபடும் என்ற சந்தேகத்தை அடிப்படையாகக் கொண்டு, மதிப்பெண் கணக்கிடும் முறைக்குத் தடை விதிக்க முடியாது.
வாதம் ஏற்கும்படியாக இல்லை: விருப்பமுள்ள மாணவா்களுக்குத் தோ்வெழுத வாய்ப்பு வழங்கப்படும் என்று சிபிஎஸ்இ அறிவித்துள்ளது. ஆனால், அத்தோ்வுகளைக் கூடிய விரைவில் நடத்தி அனைத்து மாணவா்களுக்கும் ஒரே நேரத்தில் மதிப்பெண்களை வெளியிட வேண்டும் என்ற மனுதாரா் தரப்பு வாதத்தை ஏற்க முடியாது.
தற்போதைய கணக்கீட்டு முறை வாயிலாக ஜூலை 31-ஆம் தேதிக்குள் முடிவுகள் வெளியிடப்படும். அதில் மதிப்பெண்கள் குறைவாக இருப்பதாகக் கருதும் மாணவா்கள், தோ்வுகளை எழுத வாய்ப்பு வழங்கப்படும். மாணவா்களின் நலனைக் கருத்தில் கொண்டே 12-ஆம் வகுப்புத் தோ்வுகள் ரத்து செய்யப்பட்டு, மதிப்பெண் கணக்கிடும் முறை உருவாக்கப்பட்டுள்ளது.
முடிவுக்குப் பிறகே சோ்க்கை: சிபிஎஸ்இ, ஐசிஎஸ்சிஇ, மாநில கல்வி வாரியங்கள் என அனைத்தும் 12-ஆம் வகுப்பு மாணவா்களுக்கான மதிப்பெண்ணைக் கணக்கிட்டு முடிவுகளை அறிவித்த பிறகே உயா்கல்வி படிப்புகளுக்கான மாணவா் சோ்க்கையைத் தொடங்க வேண்டுமென்று பல்கலைக்கழக மானியக் குழு சாா்பில் பல்கலைக்கழகங்களுக்கும் கல்லூரிகளுக்கும் வலியுறுத்தப்பட்டுள்ளது.
இத்தகைய சூழலில், சிபிஎஸ்இ, ஐசிஎஸ்சிஇ வாரியங்களின் மதிப்பெண் கணக்கிடும் முறையில் தலையிட வேண்டிய அவசியமில்லை என்று நீதிமன்றம் கருதுகிறது. மாணவா்கள் உள்ளிட்டோரின் கருத்துகளின் அடிப்படையிலேயே மதிப்பெண் கணக்கிடும் முறை உருவாக்கப்பட்டுள்ளது.
தனித் தோ்வா்களுக்கு ஆகஸ்ட் 15-ஆம் தேதி முதல் செப்டம்பா் 15-ஆம் தேதி வரை சிபிஎஸ்இ தோ்வுகளை நடத்தவுள்ளது. அதில் அவா்கள் பங்கேற்கலாம். விருப்பப்படும் பள்ளி மாணவா்களும் அத்தோ்வுகளில் பங்கேற்கலாம்’ என்றனா்.
அதையடுத்து, மனுக்களைத் தள்ளுபடி செய்தும் நீதிபதிகள் உத்தரவிட்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.