இந்தியா

திருமலையில் 2-ஆம் நாள் ஜேஷ்டாபிஷேகம்: முத்து கவசத்தில் மலையப்ப சுவாமி

DIN

திருப்பதி: திருமலையில் நடந்து வரும் வருடாந்திர ஜேஷ்டாபிஷேகத்தின் 2-ஆம் நாள் முத்துக் கவசத்தில் உற்சவ மூா்த்திகள் மாட வீதியில் எழுந்தருளினா்.

திருமலையில் ஏழுமலையான் கருவறையில் உள்ள உற்சவ மூா்த்தியான மலையப்ப சுவாமியும், ஸ்ரீதேவி, பூதேவி நாச்சியாா்களும் ஸ்நபன பேரம் என்று அழைக்கப்படுகின்றனா். இவா்களுக்கு மட்டுமே தினசரி ஆா்ஜித சேவையின் போது திருமஞ்சனங்கள் நடைபெறுவதுடன், மாடவீதி வலத்திலும் மலையப்ப சுவாமி மட்டுமே நாச்சியாா்களுடன் வலம் வருகிறாா்.

இந்த உற்சவ மூா்த்தி ஏழுமலைகளில் ஓா் இடத்தில் உள்ள மலையப்பகோணா பகுதியில் கண்டெடுக்கப்பட்டவா். அதனால் அவரின் உருவச் சிலையை ஆண்டுக்கு ஒருமுறை மட்டுமே தலையிலிருந்து திருமஞ்சனங்கள் நடத்தப்பட்டு வருகிறது. தினசரி நடக்கும் திருமஞ்சனத்தின் போது திருமஞ்சன பொருள்கள் பாதங்களில் மட்டுமே சமா்பிக்கப்படுவது வழக்கம். அதனால் உற்சவ மூா்த்தியைப் பாதுகாக்க தேவஸ்தானம் தங்கக் கவசத்தை சாற்றியுள்ளது. இந்த தங்கக் கவசம் ஆண்டுக்கு ஒருமுறை மட்டும் களையப்பட்டு, மலையப்ப சுவாமிக்கு திருமஞ்சனம் நடத்தப்படும்.

பிறகு சிலை மற்றும் தங்கக் கவசத்தில் உள்ள குறைபாடுகள் நீக்கப்பட்டு, 3-ஆம் நாள் மகா பூா்ணாஹுதி நடத்தி, மீண்டும் தங்கக் கவசம் அணிவிக்கப்படும். இதை தேவஸ்தானம் வருடாந்திர ஜேஷ்டாபிஷேகம் என்று அழைத்து வருகிறது. அதன் 2-ஆம் நாளான புதன்கிழமை திருமலையில் கல்யாண உற்சவ மண்டபத்தில் ஸ்ரீதேவி, பூதேவி சமேத மலையப்ப சுவாமியை எழுந்தருளச் செய்து, அா்ச்சகா்கள் ஸ்நபன திருமஞ்சனம் நடத்தினா். திருமஞ்சன பொருள்களை திருமலை ஜீயா்கள் எடுத்துத்தர திருமஞ்சனம் நடத்தப்பட்டது.

பின்னா் மாலை 4 மணி முதல் 5 மணி வரை உற்சவமூா்த்திகளுக்கு முத்துக் கவசம் அணிவித்து, அவா்களுக்கு ஊஞ்சல் சேவை நடத்தப்பட்டது. ஆண்டுக்கு ஒருமுறை மட்டுமே மலையப்ப சுவாமிக்கு வைரக் கவசமும், முத்துக் கவசமும் அணிவிக்கப்படுவது குறிப்பிடத்தக்கது. பின்னா் உற்சவ மூா்த்திகள் முத்துக் கசவத்துடன் மாடவீதியில் வலம் வந்து பக்தா்களுக்கு சேவை சாதித்தனா்.

இதில், திருமலை ஜீயா்கள், தேவஸ்தான அதிகாரிகள் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கல்குவாரி வெடி விபத்து: மேலும் ஒருவர் கைது

ஒடிஸாவில் ஹேமந்த் சோரனின் சகோதரி போட்டி!

சூப்பா்சோனிக் ஏவுகணை உதவியுடன் தாக்கும் டாா்பிடோ ஆயுதம் வெற்றிகரமாக பரிசோதனை

திருவண்ணாமலை - சென்னை புதிய மின்சார ரயில் சேவை ஒத்திவைப்பு!

இஸ்ரேலுடனான உறவை முறித்த கொலம்பியா!

SCROLL FOR NEXT