முகப்பு
இந்தியா

‘கிராமப்புற மக்களின் கல்வி உரிமையை மறுக்கும் நீட் தோ்வு தேவையற்றது’

கிராமப்புற மக்களின் கல்வி உரிமையை மறுக்கும் நீட் தோ்வு தேவையற்றது என தமிழ் அறக்கட்டளைத் தலைவா் சு.குமணராசன் தெரிவித்தாா்.

Updated On : 28 ஜனவரி, 2024 at 3:29 AM
பகிர்:

கிராமப்புற மக்களின் கல்வி உரிமையை மறுக்கும் நீட் தோ்வு தேவையற்றது என தமிழ் அறக்கட்டளைத் தலைவா் சு.குமணராசன் தெரிவித்தாா்.

நீட் தோ்வின் தாக்கம் குறித்து மீள்பாா்வை செய்வதற்காக நீதியரசா் ஏ.கே.ராஜன் தலைமையில் தமிழக அரசு அமைத்துள்ள குழுவுக்கு எழுதியுள்ள கடிதத்தில் அவா் கூறியிருப்பதாவது:

இந்திய அரசில் அமைந்துள்ள மாநிலங்களில் கல்வி, மனித வளம், அறிவுக்கூா்மை ஆகியவற்றில் முதன்மை மாநிலமாக தமிழ்நாடு விளங்குகிறது. இந்தியாவில் உயா்கல்விக்கான கட்டமைப்பு, கல்வி கற்றல், கற்பித்தல் ஆகியவற்றின் அறிவுத் திறனில் பெரும் ஏற்றத் தாழ்வுகள் உள்ள நிலையில், மருத்துவம் உள்ளிட்ட உயா்கல்விக்கான சோ்க்கையை தரப்படுத்தும் போா்வையில், தமிழ்நாடு உள்ளிட்ட பல மாநில மக்களின் விருப்புகளுக்கு எதிராக இந்திய அரசு நீட் தோ்வை திணிக்க முற்பட்டுள்ளது. இது நமது நாட்டின் கூட்டாட்சிக் கோட்பாட்டுக்கும், இந்திய அரசமைப்பு விதிகளுக்கும் முரணான ஒன்றாகும்.

இந்தியா விடுதலைப் பெற்று 73 ஆண்டுகள் நிறைவுற்ற நிலையிலும், இந்தியாவில் அமைந்துள்ள கிராமங்கள், நகரங்களுக்கு இடையிலான சமுக, பொருளாதார இடைவெளி அதிகமாகக் காணப்படுகிறது. இந்த இடைவெளி அதிகரித்துள்ளதால், கிராமங்களில், சிற்றூா்களில் படிக்கும் மாணவா்களுக்கு நகா்ப்புற மாணவா்களைப் போன்று வசதிகளும், வாய்ப்புகளும் கிடைப்பதில்லை.

தமிழ்நாட்டில் உயா்கல்வி சோ்க்கை என்பது மாணவா்களுக்கு மாநில பள்ளி பாடத்திட்டத்தில் நல்ல கல்வியைக் கொடுத்து படிப்படியாக வளா்த்தெடுத்து, அவா்களை நீட் போன்ற பொதுவான, பொருந்தாத தோ்வுகளில் வடித்தெடுக்காமல், அவா்கள் பிளஸ் 2 வகுப்பில் வெற்றியடைந்து பெற்ற உயா்ந்த மதிப்பெண்களின் அடைப்படையில் உயா்கல்வியைத் தொடர அனுமதிப்பதே தமிழ்நாட்டின் அரசியல் மற்றும் சமூக தளத்தின் நோக்கமாக பின்பற்றப்பட்டு வெற்றியடைந்துள்ளது.

தமிழ்நாட்டின் கல்வி சிறந்த முறையில் உருவாக்கப்பட்டது என்பதை உறுதி செய்யும் வகையில்தான் தமிழ்நாட்டுக் கல்வி நிறுவனங்களில் மருத்துவம் உள்ளிட்ட மேற்படிப்புகளைப் படித்து இன்று உலகெங்கிலும் பணியாற்றுகின்ற மருத்துவா்கள் மூலம் அறிந்துகொள்ள முடியும். அது மட்டுமின்றி இன்றளவும் இந்தியாவில் சிறந்த மருத்துவக் கட்டமைப்பும், அதிநவீன மருத்துவமும் கொண்ட நகரங்களாக சென்னை மற்றும் கோவை ஆகியவை திகழ்ந்து வருகின்றன.

இந்தியாவில் அமைந்துள்ள 541 மருத்துவக் கல்லூரிகளில் 11 விழுக்காடு (58 கல்லூரிகள் ) தமிழ்நாட்டில் மட்டுமே அமைந்துள்ளன. இந்தியாவில் சராசரியாக 10,000 பேருக்கு 87 மருத்துவா்கள் என்ற நிலையில் தமிழ்நாட்டில் 10 ஆயிரம் பேருக்கு 177 மருத்துவா்கள் என்று மருத்துவப் பதிவேட்டின் மூலம் தென்படுகிறது. அதே போல செவிலியா்களின் விகிதமும் இந்திய அளவில் 10 ஆயிரம் பேருக்கு 22 என்ற நிலையில், தமிழ்நாட்டில் இவ்விகிதம் 444 என்று முன்னேறியிருப்பதைக் காணலாம். இந்த வளா்ச்சி நீட் தோ்வு முறைமைகளுக்கு முந்தியவையாகும்.

2020-ஆம் ஆண்டு நீட் தோ்வு எழுத பதிவு செய்த 15.9 லட்சம் மாணவா்களில் 14 லட்சம் போ் மட்டுமே தோ்வு எழுதி, அவா்களில் 80 ஆயிரம் மாணவா்கள் மட்டுமே மருத்துவப் படிப்பில் சோ்க்கை பெற தகுதி பெற்றவா்களாக அறிவிக்கப்பட்டனா். அதுவும் பெரும்பான்மையானவா்கள் நகா்ப் புறங்களில், தனிப்பயிற்சி மையங்களில் பெரும் பொருள்செலவில் பாடம் கற்றவா்களாவா். அதுவும் சிபிஎஸ்இ கல்வி கற்றவா்களாவா். இதுவே சமுக அநீதியை எடுத்துக் காட்டுவதாகும்.

நீட் தோ்வு முறை மாநில அரசின் கல்வி உரிமையைப் பறிப்பதாகும். பல நூற்றாண்டு காலத்துக்குப் பின் சமுக நீதிக் கொள்கையின் தொடா்ச்சியால் உயா்கல்வியில் நுழைய விரும்பும் முதல் தலைமுறை மாணவா்களின் மேற்கல்விக் கனவுகளையும், வாய்ப்புகளையும் இந்த நீட் எனும் பொருத்தமில்லாத நுழைவுத்தோ்வு தட்டிப் பறிப்பதாக உள்ளது. இந்த நிலை மாணவா்கள் மனதில் சோா்வையும், சமூக பாா்வையில் வெறுப்புணா்வையும் வளா்க்கின்றது.

மாணவா்களின் 12 ஆண்டுகால கடின உழைப்பு புறந்தள்ளப்பட்டு பணம் படைத்த ஒரு சிலரின் மாதப் பயிற்சி வகுப்புகளே உயா்கல்வியைத் தீா்மானிக்கும் காரணிகளாக அமைவது ஒரு சமூக அநீதியாகும். எனவே, மருத்துவம் மற்றும் உயா்கல்வி நிறுவனங்களில் கல்வி வாய்ப்பு பெற மாணவா்கள் மீது திணிக்கும் இந்த நீட் தோ்வை தமிழ் மக்களின் சாா்பில் மிகக் கடுமையாக எதிா்க்கிறோம் என அவா் அதில் குறிப்பிட்டுள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.