கருவுற்ற பெண்களுக்கு கரோனா தடுப்பூசி: வழிகாட்டி நெறிமுறைகள் வெளியீடு
கருவுற்ற பெண்கள் கரோனா தடுப்பூசி பெற்றுக் கொள்ள மத்திய சுகாதாரம், குடும்ப நலத் துறை அமைச்சகம் அனுமதி வழங்கியுள்ளது.
கருவுற்ற பெண்கள் கரோனா தடுப்பூசி பெற்றுக் கொள்ள மத்திய சுகாதாரம், குடும்ப நலத் துறை அமைச்சகம் அனுமதி வழங்கியுள்ளது. மேலும், முன்னெச்சரிக்கைக்கான நடவடிக்கைகள், சுகாதார முன்களப் பணியாளர்களுக்கான வழிகாட்டி நெறிமுறைகளையும் மத்திய சுகாதார அமைச்சகம் செவ்வாய்க்கிழமை வெளியிட்டுள்ளது.
கருவுற்ற பெண்களுக்கு தடுப்பூசி வழங்கப்படாதது குறித்து கடந்த ஜூன் 26-ஆம் தேதி மதுரை மக்களவைத் தொகுதி உறுப்பினர் சு.வெங்கடேசன் மத்திய அமைச்சரின் கவனத்துக்கு கொண்டு சென்றார். இதையடுத்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிகிறது.
கரோனா நோயால் பாதிக்கப்பட்ட கருவுற்ற தாய்மார்களில் 90 சதவீதம் பேர் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்படாமல் மீண்டு வந்துள்ளனர். அதேசமயத்தில் இத்தகைய பெண்களுக்கும் அவர்கள் வயிற்றில் உள்ள கருவுக்கும் கடுமையான பாதிப்புகள் ஏற்படும். இதனால், ஆபத்துகள் அதிகரிப்பதைத் தடுக்க முன்னெச்சரிக்கையாக தடுப்பூசி தேவை என மத்திய சுகாதார அமைச்சகம் வலியுறுத்தியுள்ளது. இதற்கான வழிகாட்டி நெறிமுறைகளில் கூறப்பட்டுள்ளதாவது:
கரோனா தொற்று அறிகுறி உள்ள கர்ப்பிணிகளுக்கு நோய் கடுமையாக வாய்ப்புகள் உள்ளன. இதனால், உயிரிழப்புகள் ஏற்படவும் வாய்ப்பு உண்டு. உயர் ரத்த அழுத்தம், உடல் பருமன், நீரிழவு நோய், கை, கால்களில் ரத்தம் உறைதல் போன்ற பிரச்னை ஏற்கெனவே இருந்தாலோ அல்லது 35 வயதுக்கு மேல் உள்ள கர்ப்பிணிகளுக்கு நோய்த்தொற்றால் சிக்கல்கள் அதிகரிக்கும்பட்சத்திலோ ஆபத்துகள் அதிகம். எனவே, முன்களப் பணியாளர்கள், கர்ப்பிணிகளுக்கு தடுப்பூசி குறித்த ஆலோசனைகளை வழங்க வேண்டும். நோய்த்தொற்றுக்குள்ளான கருவுற்ற பெண்களின் பிரசவத்தில் பிறந்த குழந்தைகள் 95 சதவீதம் நலமாக இருப்பதாகத் தெரியவருகிறது. சில சந்தர்ப்பங்களில் நோய்த்தொற்றால் கருவுற்ற தாய்மார்களுக்கு குறைப்பிரசவம் ஏற்பட வாய்ப்புள்ளது. குழந்தையின் எடை சாதாரண எடையைவிட குறைய வாய்ப்பு உண்டு. சில சமயங்கள் குழந்தை பிறப்பதற்கு முன்பே இறக்கக்கூடிய ஆபத்தும் உள்ளது.
கர்ப்பக் காலத்தில் ஒரு பெண் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருந்தால், பிரசவத்துக்குப் பின்னர் அவருக்கு தடுப்பூசி போடலாம். கர்ப்பிணிகள் தடுப்பூசியை பெற்றுக்கொள்ளும்போது, லேசான காய்ச்சல், வலி போன்ற பொதுவான சில பக்கவிளைவுகள் ஏற்படும். அவை 1 முதல் 3 நாள்கள் வரை இருக்கும் என்று வழிகாட்டி நெறிமுறைகளில் கூறப்பட்டுள்ளது.
இதையடுத்து இந்த அறிவிப்பை வரவேற்று மதுரை மக்களவைத் தொகுதி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினர் சு.வெங்கடேசன் மத்திய அமைச்சருக்கு தனது சுட்டுரையில் நன்றி தெரிவித்துள்ளார். முன்னதாக, கடந்த ஜூன் 26-ஆம் தேதி "ஃபைஸர்' தடுப்பூசிகளை கர்ப்பிணிகளுக்கு கொடுப்பது குறித்து அரசு பரிசீலிக்க வேண்டும்.
இந்தத் தடுப்பூசிகள் கர்ப்பிணிகளுக்குப் பாதுகப்பானது என பல ஆதாரங்கள் நிரூபித்துள்ளன எனக் கூறி மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் ஹர்ஷ்வர்தனுக்கு அவர் கடிதம் எழுதியிருந்தது குறிப்பிடத்தக்கது.