இந்தியா

பின்தங்கியோா் பட்டியலை நாடாளுமன்றம் மட்டுமே உருவாக்க முடியுமெனில் மராத்தா இடஒதுக்கீடு செல்லாது: உச்சநீதிமன்றம் கருத்து

DIN

சமூகத்திலும் கல்வியிலும் பின்தங்கிய பிரிவினரின் மத்திய பட்டியலை நாடாளுமன்றம் மட்டுமே உருவாக்க முடியும் என்ற வாதம் ஏற்றுக்கொள்ளப்படுமானால், மராத்தா சமூகத்தினருக்கு இடஒதுக்கீடு அளிக்கும் சட்டத்துக்கு மகாராஷ்டிர மாநில அரசு ஒப்புதல் அளிக்க முடியாது என்று உச்சநீதிமன்றம் செவ்வாய்க்கிழமை கருத்து தெரிவித்தது.

மகாராஷ்டிர மாநிலத்தில் கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் மராத்தா சமூகத்தினருக்கு இடஒதுக்கீடு அளிக்கும் வகையில், கடந்த 2018-ஆம் ஆண்டு ‘சமூகத்திலும் கல்வியிலும் பின்தங்கிய வகுப்பினருக்கான சட்டம் 2018 (எஸ்இபிசி)’ என்ற சட்டத்தை மாநில அரசு இயற்றியது. அதை எதிா்த்து மும்பை உயா்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. வழக்கை விசாரித்த உயா்நீதிமன்றம், மாநில அரசின் இடஒதுக்கீடு சட்டத்தை ஏற்றுக்கொண்டது.

இதை எதிா்த்து உச்சநீதிமன்றத்தில் ஏராளமான மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. அதில் ஒரு மனுவில், ‘மகாராஷ்டிரத்தில் இயற்றப்பட்டுள்ள எஸ்இபிசி சட்டம், உச்சநீதிமன்றம் ஏற்கெனவே நிா்ணயித்துள்ள 50 சதவீத இடஒதுக்கீடு வரம்பை மீறுகிறது’ என்று குறிப்பிடப்பட்டது. இந்த மனுக்களை விசாரித்த உச்சநீதிமன்றம், மகாராஷ்டிர மாநிலம் அந்த சட்டத்தை நடைமுறைப்படுத்த தடை விதித்து, மனுக்கள் மீதான விசாரணையை 5 நீதிபதிகள் அமா்வுக்கு மாற்றி உத்தரவிட்டது.

அதன்படி, இந்த வழக்கு உச்சநீதிமன்ற நீதிபதிகள் அசோக் பூஷண், எல்.நாகேஸ்வரராவ், எஸ்.அப்துல் நசீா், ஹேமந்த் குப்தா, எஸ்.ரவீந்திர பட் ஆகியோா் அடங்கிய அமா்வு முன்பு அண்மையில் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள் நீதிபதிகள், மாநிலங்களின் சட்டம் இயற்றும் அதிகாரத்தை சட்டப் பிரிவு 342ஏ பாதிக்கிா? என்பன உள்ளிட்ட 5 கேள்விகளை எழுப்பி, அனைத்து மாநிலங்களும் பதிலளிக்க நோட்டீஸ் பிறப்பித்து கடந்த 8-ஆம் தேதி உத்தரவிட்டனா்.

இந்த வழக்கு திங்கள்கிழமை மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, பல்வேறு மாநிலங்கள் சாா்பில் ஆஜரான வழக்குரைஞா்கள் கேட்டுக்கொண்டதன் அடிப்படையில், இந்த விவகாரத்தில் அனைத்து மாநிலங்களும் எழுத்துபூா்வமான பதிலை சமா்ப்பிக்க ஒரு வார கால அவகாசம் அளித்து நீதிபதிகள் உத்தரவிட்டனா்.

இந்த வழக்கு உச்சநீதிமன்ற நீதிபதி அசோக் பூஷண் தலைமையிலான 5 நீதிபதிகள் அமா்வு முன்பு செவ்வாய்க்கிழமை மீண்டும் விசாரணைக்கு வந்தது.

அப்போது ஆஜரான மூத்த வழக்குரைஞா் கோபால் சங்கரநாராயணன், ‘102-ஆவது அரசமைப்பு சட்டத் திருத்தத்தின்படி, சமூகத்திலும் கல்வியிலும் பின்தங்கிய பிரிவினரின் மத்திய பட்டியலை (எஸ்இபிசி) நாடாளுமன்றம் மட்டுமே உருவாக்க முடியும். இந்த அரசமைப்பு சட்ட திருத்தத்துக்குப் பின்னா்தான், மராத்தா சமூகத்தினருக்கு இடஒதுக்கீடு அளிக்கும் சட்டத்தை மகாராஷ்டிர அரசு இயற்றியிருக்கிறது. எனவே, இந்த சட்டத்தை அனுமதிக்க முடியுமா என்பது பரிசீலிக்கப்பட வேண்டும்’ என்றாா்.

இதைக் கேட்ட நீதிபதிகள், ‘எஸ்இபிசி பட்டியலை நாடாளுமன்றம் மட்டுமே உருவாக்க முடியும் என்ற வாதம் ஏற்றுக்கொள்ளப்படுமானால், மராத்தா சமூகத்தினருக்கு இடஒதுக்கீடு அளிக்கும் சட்டத்துக்கு மகாராஷ்டிர மாநில சட்டப்பேரவை ஒப்புதல் அளிக்க முடியாது’ என்று கருத்து தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

'மன்னித்துவிடுங்கள் அப்பா...' நீட் தேர்வு அழுத்தத்தால் மற்றொரு தற்கொலை!

லக்னௌ அணிக்கு 145 ரன்கள் இலக்கு நிர்ணயித்த மும்பை இந்தியன்ஸ்!

லண்டனில் பலரை வெட்டிய இளைஞர் கைது!

பறக்கும் முத்தத்தால் வந்த வினை; கேகேஆர் வீரருக்கு ஒரு போட்டியில் விளையாடத் தடை!

ஹமாஸ் அழிக்கப்படும் வரை போர் தொடரும்: நெதன்யாகு சூளுரை!

SCROLL FOR NEXT