நாடு முழுவதும் இதுவரை 5.5 கோடி பேருக்கு கரோனா தடுப்பூசிகள்
நாடு முழுவதும் 5.5 கோடி பேருக்கு கரோனா தடுப்பூசிகள் செலுத்தப்பட்டிருப்பதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
நாடு முழுவதும் 5.5 கோடி பேருக்கு கரோனா தடுப்பூசிகள் செலுத்தப்பட்டிருப்பதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
இதுகுறித்து மத்திய சுகாதாரத்துறை வெளியிட்ட தகவலில், நாட்டில் கரோனா தடுப்பூசி போடும் பணி இன்னும் வேகம் எடுத்துள்ளது. இன்று காலை 7 மணி வரை 5.5 கோடிக்கும் மேற்பட்டோர் கொவிட் தடுப்பூசி போட்டுக் கொண்டுள்ளனர்.
இவர்களில் 60 வயதுக்கும் மேற்பட்டோரின் எண்ணிக்கை 2,47,67,172.
69ம் நாளான நேற்று 23 லட்சத்துக்கும் அதிகமான (23,58,731) தடுப்பூசிகள் போடப்பட்டன.
மகாராஷ்டிரம், பஞ்சாப், கர்நாடகம், சத்தீஸ்கர் மற்றும் குஜராத் ஆகிய 5 மாநிலங்களில் தினசரி கரோனா பாதிப்பு அதிகரித்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 59,118 பேருக்கு புதிதாக தொற்று ஏற்பட்டுள்ளது.
மகாராஷ்டிரத்தில் அதிகபட்சமாக தினசரி கரோனா பாதிப்பு 35,952-ஆக உள்ளது.
நாட்டில் கரோனா சிகிச்சை பெறுபவர்களின் எண்ணிக்கை கடந்த பிப்ரவரி மாத மத்தியில் மிகக் குறைந்த அளவை எட்டியது. அதன்பின் தொடர்ந்து அதிகரிக்கிறது.
இன்று நாட்டில் மொத்தம் 4.21 லட்சம் பேர் (4,21,066) கரோனா சிகிச்சை பெறுகின்றனர்.
நாட்டில் கரோனா பாதிப்பிலிருந்து குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை இன்று 1,12,64,637-ஐ எட்டியுள்ளது. குணமடைந்தோர் வீதம் 95.09 சதவீதமாக உள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 32,987 பேர் குணமடைந்துள்ளனர். 257 பேர் உயிரிழந்துள்ளனர். இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.