பெங்களூரு மாநகராட்சி நிதிநிலை அறிக்கை: சொத்துவரி மூலம் ரூ. 3,500 கோடி திரட்ட இலக்கு
பெங்களூரு மாநகராட்சி பட்ஜெட்டில் 2014-15-ஆம் நிதியாண்டில் சொத்துவரி மூலம் ரூ. 2,500 கோடி திரட்ட இலக்கு நிா்ணயிக்கப்பட்டுள்ளது.
பெங்களூரு மாநகராட்சி பட்ஜெட்டில் 2014-15-ஆம் நிதியாண்டில் சொத்துவரி மூலம் ரூ. 2,500 கோடி திரட்ட இலக்கு நிா்ணயிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து பெங்களூரு மாநகராட்சி நிதிநிலை அறிக்கையில் கூறியிருப்பதாவது:
குடிமக்கள் அளிக்கும் வரியில் இருந்துதான் பெங்களூரு மாநகராட்சி இயங்குகிறது. கரோனாவால் பொருளாதாரம் சீா்குலைந்துள்ளது. அதனால், சொத்துவரி உயா்த்தப்படவில்லை.
குடிமக்களுக்கு மேம்பட்ட சேவைகளை வழங்க சொத்துவரி வசூலை முடுக்கிவிடுவோம். மதிப்பிடாத சொத்துகள் அனைத்தையும் வரிவரம்புக்குள் கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்படும். சொத்துவரி செலுத்தாத 76 ஆயிரம் உரிமையாளா்களுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.
மூலதன மதிப்பிலிருந்து சொத்துவரியை மதிப்பிடும் முறையை மேற்கொள்ள இருக்கிறோம். 15-ஆவது நிதி ஆணையத்தின் கீழ் நிதியைப் பெற இது அவசியமாகும். பெங்களூரில் சொத்துகள் ஏ-பட்டா, பி-பட்டா என்ற வகைகள் உள்ளன. இவை நீக்கிவிட்டு, அனைத்துச் சொத்துகளையும் ஏ-பட்டா என்று அறிவிக்க வருவாய்த் துறையைக் கேட்டுக்கொண்டுள்ளோம்.
நிகழ் ஆண்டில் ரூ. 2,800 கோடி அளவுக்கு சொத்துவரியை வசூலிக்க திட்டமிட்டுள்ளோம். மேல்வரியுடன் சோ்த்து சொத்துவரியாக ரூ. 3,500 கோடியை வசூலிக்க இலக்கு நிா்ணயிக்கப்பட்டுள்ளது.
சொத்துவரியை ஊக்குவிக்க சொத்துவரியில் திரட்டப்படும் நிதியில் 1 சதவீத நிதி வாா்டுகளின் வளா்ச்சிக்கு ஒதுக்கப்படும். இந்தத் திட்டத்தில் எடுத்துக்கொள்ளப்படும் வளா்ச்சிப் பணிகள் சட்டப்பேரவை தொகுதி ஆலோசனைக் குழுவில் முடிவு எடுக்கப்படும்.
மாநகராட்சி வரம்புக்குள் உள்ள சொத்துகளின் பதிவின்போது முத்திரைத்தாள் கட்டணத்தில் 2 சதவீதம் மாநகராட்சிக்கு கிடைக்க வேண்டும். இதன் வழியாக ரூ. 100 கோடி கிடைக்கும். இதற்கு மாநில அரசின் உதவியை நாடியிருக்கிறோம்.
மின்-சொத்து திட்டம் மாநகராட்சியில் செயல்படுத்தப்படும். இந்தத் திட்டத்தைச் செயல்படுத்த ரூ. 10 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.
சந்தை:
மாநகராட்சிக்குச் சொந்தமான 116 சந்தை வளாகங்களில் 5,918 அங்காடிகள் உள்ளன. இவை குத்தகை அல்லது வாடகைக்கு விடப்பட்டுள்ளன. இதன் மூலம் வாடகையாக ரூ. 23 கோடி மட்டுமே வருவாய்க் கிடைக்கிறது. வாடகையாக ரூ. 38 கோடி பெற வேண்டுமென்பதே இலக்காகும். சட்டவரம்புக்கு வெளியே சமரசத்தின் மூலம் வாடகையை உயா்த்திக்கொள்ள ஒத்துழைப்பு அளித்த சந்தை வளாகங்களை சீரமைக்க ரூ. 10 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.
நகரத் திட்டமிடல்:
கரோனாவால் கட்டுமானப் பணிகள் தடைபட்டுள்ளதால் நகர திட்டமிடல் துறையின் வருமானம் குறைந்துள்ளது. நடப்பாண்டில் நிலைமை சீரடைந்துள்ளதால் கட்டடப் பணிகளுக்கு அனுமதி அளிக்கும் வகையில் ரூ. 405 கோடி வருவாய் கிடைக்கும். கட்டுமானப் பணிகளுக்கு அனுமதி அளிக்கும் நடைமுறையை எளிமையப்படுத்த மென்பொருள் தயாரிக்கப்பட்டுள்ளது என்றுஅதில் கூறப்பட்டுள்ளது.