இந்தியா

கரோனா இரண்டாம் அலை ஏன்? எப்போது குறையும்? - ஆய்வாளர் அதிர்ச்சித் தகவல்

DIN

இந்தியாவில் கரோனா இரண்டாம் அலை குறைவதற்கு  ஜூலை மாதம் வரை ஆகலாம் என்று நச்சுயிரியலாளர் ஷாஹித் ஜமீல் தெரிவித்துள்ளார். 

இந்தியாவில் கரோனா இரண்டாம் அலை பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது. தினமும் லட்சக்கணக்கானோர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். ஆயிரக்கணக்கில் உயிரிழப்பு ஏற்பட்டு வருகிறது. கரோனா முதல் அலையை விட வேகமாகப் பரவி வரும் இரண்டாம் அலையின் தாக்கம் மக்களை பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. 

இந்நிலையில், கரோனா இரண்டாம் அலை பாதிப்பு குறித்தும் தொற்று பரவல் எப்போது குறையும் என்பது குறித்தும் அசோகா பல்கலைக்கழகத்தின் திரிவேதி உயிர் அறிவியல் பள்ளியின் இயக்குநர், நச்சுயிரியலாளர் ஷாஹித் ஜமீல் கூறியதாவது: 

கரோனா இரண்டாம் அலை பரவுவதற்கு உருமாறிய கரோனா வைரஸும் காரணம். உருமாறிய கரோனா வைரஸால்தான் இன்று பாதிப்பு அதிகரித்து வருகிறது. ஆனால், உருமாறிய கரோனா வைரஸ் அதிக ஆபத்தானது என்று கூற முடியாது. 

கரோனா இரண்டாம் அலை வேகமாக உச்சத்தை அடைந்துவிட்டது. கரோனா பாதிப்பு குறைவதாக தற்போதைய வரைபடம் காட்டுகிறது. ஆனால், முழுவதுமாகக் குறைவது அவ்வளவு எளிதல்ல. இரண்டாம் அலை முழுவதுமாக குறைவதற்கு காலம் எடுத்துக்கொள்ளும். அதற்கு ஜூலை மாதம் வரை ஆகலாம். கரோனா பாதிப்பு குறைவதாக வரைபடம் காட்டினாலும் ஒருநாள் பாதிப்பு என்பது தற்போதைய சூழ்நிலையில் அதிகமாகத்தான் இருக்கும். 

கரோனா முதல் அலை பாதிப்பில் நிலையான சரிவு இருந்தது. அதாவது படிப்படியாக குறைந்தது. மேலும் அது 90,000-95,000 என்ற குறைவான பாதிப்பில் தொடங்கியது. ஆனால், இரண்டாம் அலையின் உச்சம் 4 லட்சம் எனத் தொடங்கியுள்ளது. எனவே, இரண்டாம் அலை பாதிப்பு எதிர்பார்ப்பதைவிட மெதுவாகவேக் குறையும். 

இந்தியாவில் உயிரிழப்பு தொடர்பான தரவுகள் தவறானது. இதற்கு ஒரு மாநிலம் அல்லது குழுவின் மீது தவறு சொல்ல முடியாது. ஆனால் இப்போது நாம் பதிவு செய்யும் உயிரிழப்புகள் தவறானது என்றே கருதுகிறேன். 

கரோனா முதல் அலையால் நோய் எதிர்ப்பு சக்தி வந்துவிட்டதால் இரண்டாம் அலையை எதிர்கொள்ள முடியும் என்ற மக்கள் கருதுகின்றனர். ஆனால், அது தவறு. 

அதேபோல மக்கள் யாரும் கரோனாவை பரப்ப விரும்புவதில்லை. மாறாக அவர்கள் கரோனாவை பரப்ப வாய்ப்பளிக்கிறார்கள். 

கடந்த டிசம்பர் மாதத்தில் கரோனா பாதிப்பு குறைந்துவிட்டது, நமக்கு எதிர்ப்பு சக்தி வந்துவிட்டது என்று நினைத்து திருமணங்கள், விழாக்கள் நடத்தினோம். அதன் காரணமாகவே தற்போது கரோனா மிகவேகமாகப் பரவி வருகிறது. குறிப்பாக தேர்தல் பிரச்சாரங்களும், மத விழாக்களும் காரணம். 

அதேபோன்று கரோனா தடுப்பூசி பெற வாய்ப்பிருந்தும் கடந்த ஜனவரி, பிப்ரவரியில் பலரும் தடுப்பூசி போடுவதைத் தவிர்த்துள்ளனர். இந்த இரு காரணங்களினாலே கடந்த பிப்ரவரி முதல் கரோனா பரவல் அதிகரிக்கத் தொடங்கியது. 

கரோனா தடுப்பூசி பாதுகாப்பானது. அதனால் வரும் விளைவுகள் மிகவும் அரிதானது. கரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டவர்களுக்கு கரோனா வந்தால் உயிரிழப்பு ஏற்படுவது மிகமிகக் குறைவு. 

கரோனா தடுப்பூசிகளை நிறுவனங்கள் திட்டமிட்டபடி முறையாக வழங்குவதற்கும் வருகிற ஜூலை மாதம் ஆகலாம். எதிர்ப்பு சக்தி அதிகமாக இருக்கிறது என்று கூறியவர்களில் 75% பேர் தொற்றுக்கு ஆளாகியுள்ளனர். எனவே, அனைவரும் கரோனா  தடுப்பூசி செலுத்திக்கொள்ள வேண்டும்.

எனவே, இந்தியாவில் கரோனா இரண்டாம் அலை கண்டிப்பாக குறையும். ஆனால், அது குறைவதற்கு ஜூலை மாதம் வரை ஆகலாம். அதேநேரத்தில் சூழ்நிலைகள், தடுப்பூசிகளின் நிலைகளைப் பொருத்து இந்தியா கரோனாவின் பல அலைகளை சந்திக்க நேரிடலாம் என்று கூறியுள்ளார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கோவிஷீல்டு தடுப்பூசியை திரும்பப் பெறுவதாக அறிவிப்பு!

வேங்கைவயல் விவகாரம்: மேலும் 3 பேருக்கு இன்று குரல் மாதிரி சோதனை

சவுக்கு சங்கர் மீது சென்னை காவல்துறையும் வழக்கு!

வெப்ப அலை: தொழிலாளா்கள் பாதிக்காத வகையில் பணி நேரம்

இன்று நல்ல நாள்!

SCROLL FOR NEXT