கரோனா உயிரிழப்புகள் மறைப்பு? விளக்கம் கேட்கும் காங்கிரஸ்
மத்திய அரசு சில மாநில அரசுகளுடன் இணைந்து கரோனா பாதிப்பு எண்ணிக்கைகள் மற்றும் பலி எண்ணிக்கைகளை மறைப்பதாக சந்தேகம் எழுந்துள்ளதையடுத்து விளக்கமளிக்க வேண்டும் என காங்கிரஸ் தெரிவித்துள்ளது.
மத்திய அரசு சில மாநில அரசுகளுடன் இணைந்து கரோனா பாதிப்பு எண்ணிக்கைகள் மற்றும் பலி எண்ணிக்கைகளை மறைப்பதாக சந்தேகம் எழுந்துள்ளதையடுத்து விளக்கமளிக்க வேண்டும் என காங்கிரஸ் தெரிவித்துள்ளது.
காங்கிரஸ் தலைவர்கள் ப. சிதம்பரம் மற்றும் சக்திசிங் கோஹில் காணொலி வாயிலாக சனிக்கிழமை செய்தியாளர்களைச் சந்தித்தனர்.
அப்போது சிதம்பரம் பேசியது:
"மார்ச் 1 முதல் மே 10 வரையிலான காலகட்டத்தில் 1,23,000 இறப்புச் சான்றிதழ்கள் வழங்கப்பட்டுள்ளதாதவும், கடந்த ஆண்டு இதே காலகட்டத்தில் 58,000 இறப்புச் சான்றிதழ்கள் மட்டுமே வழங்கப்பட்டுள்ளதாகவும் குஜராத் செய்தித் தாள் ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதே காலகட்டத்தில் கரோனா தொடர்பாக உயிரிழந்தவர்கள் 4,218 என குஜராத் அரசு அதிகாரப்பூர்வமாகத் தெரிவித்துள்ளது.
65,000 இறப்புச் சான்றிதழ்கள் அதிகரித்திருப்பது ஆபத்தான எண்ணிக்கையாக உள்ளது.
இந்த பலி எண்ணிக்கைகள் இயற்கை மரணங்களால் ஏற்பட்டது என்று காரணங்கள் கூற முடியாது. இந்த அதிகரிப்புக்கு நிச்சயம் கரோனாதான் காரணமாக இருக்கக்கூடும் என்ற சந்தேகம் எங்களுக்கு வலுவாக உள்ளது. உண்மையான கரோனா பலி எண்ணிக்கைகளை மாநில அரசு மறைக்கிறது.
எங்கள் சந்தேகங்கள் உண்மையாக இருந்தால், இது நாட்டுக்கே பெரிய அவமானம் மற்றும் சோகம் என்பதைத் தாண்டி மிகப் பெரிய குற்றச் செயல்.
மத்திய அரசும், குஜராத் அரசும் நாட்டு மக்களுக்கு விளக்கமளிக்க வேண்டும்" என்றார் சிதம்பரம்.