மத்திய, மாநில அரசுகளுக்கு தேசிய பசுமைத் தீர்ப்பாயம் நோட்டீஸ்
இயற்கை வளங்களை அபரிமிதமாகக் கொண்டுள்ள மேற்கு, கிழக்குத் தொடர்ச்சி மலைகளைப் பாதுகாக்க உத்தரவிடக் கோரி தாக்கலான மனுவுக்கு பதிலளிக்க மத்திய அரசுக்கும், மலைகள் அமைந்துள்ள சம்பந்தப்பட்ட மாநில
புது தில்லி: இயற்கை வளங்களை அபரிமிதமாகக் கொண்டுள்ள மேற்கு, கிழக்குத் தொடர்ச்சி மலைகளைப் பாதுகாக்க உத்தரவிடக் கோரி தாக்கலான மனுவுக்கு பதிலளிக்க மத்திய அரசுக்கும், மலைகள் அமைந்துள்ள சம்பந்தப்பட்ட மாநில அரசுகளுக்கும் நோட்டீஸ் அனுப்ப தேசிய பசுமைத் தீர்ப்பாயம் உத்தரவிட்டது.
மிகவும் பழைமை வாய்ந்த, இயற்கையின் அருட்கொடையாகத் திகழும் மேற்கு, கிழக்குத் தொடர்ச்சி மலைகளைப் பாதுகாக்க உத்தரவிட கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் திமுக தலைமைக் கழக செய்தித் தொடர்புச் செயலாளர் - வழக்குரைஞர் கே.எஸ்.ராதாகிருஷ்ணன் மனு தாக்கல் செய்தார். இந்த மனுவை கடந்த ஆண்டு ஜூன் மாதம் விசாரித்த உயர்நீதிமன்றம், இந்த விவகாரம் தொடர்பாக தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தை அணுகுமாறு மனுதாரருக்கு அறிவுறுத்தியது.
இதைத் தொடர்ந்து, தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தில் அவர் மனு தாக்கல் செய்தார். அதில் அவர் தெரிவித்திருப்பதாவது:
Advertisement
மேற்குத் தொடர்ச்சி மலை, சுமார் 1.40 லட்சம் சதுர கிலோ மீட்டர் பரப்பளவில் உள்ளது. இந்த மலைத் தொடர் தமிழகம், கேரளம், கர்நாடகம், கோவா மகாராஷ்டிரம், குஜராத் ஆகிய மாநிலங்கள் வழியாகச் செல்கிறது. தமிழகத்தைப் பொருத்தமட்டில் இந்த மலை 28,700 சதுர கிலோ மீட்டர் வரை விரிந்து கிடக்கிறது. இந்த மலையில் இயற்கை வளங்கள் அபரிமிதமாக உள்ளன. இங்கு 7,402 மலர் தாவர இனங்கள், 1,814 மலராத தாவர இனங்கள், 139 பாலூட்டி இனங்கள், 508 பறவை இனங்கள், 6,000 பூச்சி இனங்கள், 290 நன்னீர் மீன் இனங்கள் உள்ளன.
அதேபோன்று, தூத்துக்குடி மாவட்டம் வல்லநாடு பகுதியில் இருந்து தொடங்கும் கிழக்குத் தொடர்ச்சி மலை, ஆந்திர மாநிலம், தெற்குப் பகுதியில் கர்நாடகம், தெலங்கானா உள்ளிட்ட சில மாநிலங்களைக் கடந்து வடக்கு ஒடிஸா வரை செல்கிறது. தமிழகத்தில் கிழக்குத் தொடர்ச்சி மலையின் தொட்டிலாக விழுப்புரம் மாவட்டம் உள்ளது.
மேற்குத் தொடர்ச்சி, கிழக்குத் தொடர்ச்சி மலையில் உள்ள விலங்குகள், இயற்கை வளங்கள், பசுமைத் தாவரங்கள் ஆகியவை பாதுகாக்கப்பட வேண்டும். மலை அமைப்புகள் மாறக் கூடாது. இயற்கையின் மீதான அத்துமீறல்கள் காரணமாகவே மனித சமூகம் பல்வேறு கொடிய நோய்களை எதிர்கொள்ளும் சூழலுக்குத் தள்ளப்படுகிறது.
ஆகவே, இந்த இரு மலைத் தொடர்களையும் அதன் இயற்கை வளங்களையும் பாதுகாக்க, மாதவன் காட்கில் மற்றும் கஸ்தூரி ரங்கன் ஆகியோரது குழுக்கள் அளித்த பரிந்துரையைச் செயல்படுத்தும் வகையில் ஒரு நிரந்தரக் குழுவை அமைக்கவும், அதைச் செயல்படுத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளவும், மத்திய அரசுக்கும் மலைத்தொடர் அமைந்துள்ள சம்பந்தப்பட்ட மாநிலங்களுக்கும் உத்தரவிட வேண்டும். மேலும், இவற்றைப் பாதுகாக்க போதிய நிதி அனுமதிகளையும் அளிக்க வேண்டும் என்று மனுவில் கோரப்பட்டுள்ளது.
இந்த மனு தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தில் நீதிபதி ஏ.கே.கோயல் தலைமையிலான முதன்மை அமர்வு முன் வியாழக்கிழமை விசாரணைக்கு வந்தது. "இந்த விவகாரம் தொடர்பாக கோவா பவுண்டேஷன் அமைப்பு ஏற்கெனவே வழக்குத் தொடுத்துள்ளது. அந்த வழக்கில் தீர்ப்பாயம் சில உத்தரவுகளைப் பிறப்பித்துள்ளது. இந்த விவகாரமும் அதுதொடர்புடைய விஷயமாக இருப்பதால் கோவா பவுண்டேஷன் வழக்குடன் இந்த மனுவும் சேர்த்து விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும். சம்பந்தப்பட்ட மத்திய, மாநில அரசுகள் தங்களது நிலைப்பாட்டைத் தெரிவிக்கக் கேட்டுக் கொள்ளப்படும். முக்கிய விவகாரம் தொடர்பான இந்த மனுவை மனுதாரர் தாக்கல் செய்திருப்பது பாராட்டுக்குரியது' என்று நீதிபதி ஏ.கே. கோயல் தலைமையிலான அமர்வு தெரிவித்தது.
மகிழ்ச்சி அளிக்கிறது
இதுதொடர்பாக மனுதாரர் கே.எஸ்.ராதாகிருஷ்ணன் கூறுகையில், "இந்த மனுவை பசுமை தீர்ப்பாயம் விசாரணைக்கு எடுத்துக் கொண்டிருப்பது மகிழ்ச்சி அளிப்பதாக உள்ளது. கோவா பவுண்டேஷன் தொடர்புடைய வழக்கு மேற்குத் தொடர்ச்சி மலைத்தொடர் பாதுகாப்பு சம்பந்தப்பட்டது. மேற்குத் தொடர்ச்சி மலை விவகாரம் மட்டுமின்றி கிழக்குத் தொடர்ச்சி மலையையும் பாதுகாக்கக் கோரி நான் மனு தாக்கல் செய்துள்ளேன்' என்றார்.