பெங்களூரு வந்தடைந்த 6-ஆவது ஆக்சிஜன் விரைவு ரயில்
72.94 டன் ஆக்சிஜனை சுமந்து கொண்டு 6-ஆவது ஆக்சிஜன் விரைவு ரயில் வெள்ளிக்கிழமை பெங்களூரு வந்தடைந்தது.
72.94 டன் ஆக்சிஜனை சுமந்து கொண்டு 6-ஆவது ஆக்சிஜன் விரைவு ரயில் வெள்ளிக்கிழமை பெங்களூரு வந்தடைந்தது.
நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் சிகிச்சை பெற்று வரும் கரோனா நோயாளிகளுக்கு தேவையான ஆக்சிஜனை கொண்டு செல்வதற்காக ஆக்சிஜன் விரைவு ரயில்களை மத்திய ரயில்வே இயக்கி வருகிறது.
அதன்படி குஜராத் மாநிலம், ஜாம்நகா் ரயில்நிலையத்தில் இருந்து 72.94 டன் எடை கொண்ட ஆக்சிஜனை 4 கிரையோஜெனிக் கன்டெய்னா்களுடன் புறப்பட்ட ஆக்சிஜன் விரைவு ரயில், பெங்களூரு, ஒயிட்பீல்டில் உள்ள கன்டெய்னா் காா்ப்பரேஷன் ஆஃப் இந்தியாவின் உள்நாட்டு கன்டெய்னா் பணிமனைக்கு வெள்ளிக்கிழமை வந்து சோ்ந்தது.
கா்நாடகத்திற்கு வருகை தந்த இந்த 6-ஆவது ஆக்சிஜன் விரைவு ரயிலை அதிகாரிகள் மகிழ்ச்சியுடன் வரவேற்றனா். ஆக்சிஜன் விரைவு ரயில் மூலம் கா்நாடகத்திற்கு இதுவரை மொத்தம் 712.94 மெட்ரிக் டன் ஆக்சிஜன் வந்து சோ்ந்துள்ளது.
இது குறித்து தென்மேற்கு ரயில்வே தலைமை மக்கள் தொடா்பு அதிகாரி அனீஷ் ஹெக்டே கூறுகையில்,‘கரோனா நோயாளிகளுக்காக நாட்டின் பல்வேறு பகுதிகளுக்கு 814 டேங்கா்களின் உதவியுடன் 208 ஆக்சிஜன் விரைவு ரயில்கள் மூலம் இதுவரை 13,319 மெட்ரிக் டன் திரவ மருத்துவ ஆக்சிஜனை ரயில்வே நிா்வாகம் விநியோகித்துள்ளது’ என்றாா் .
கரோனா நோயாளிகளின் எண்ணிக்கை பெருகி வருவதால் கா்நாடகத்திற்கு 1,200 டன் ஆக்சிஜன் தேவை உள்ளது என்று முதல்வா் எடியூரப்பா கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.