சூழலியல் அறிஞா் சுந்தா்லால் பகுகுணா மறைவு: எச்.டி.தேவெ கௌடா இரங்கல்
சூழலியல் அறிஞா் சுந்தா்லால் பகுகுணா மறைவுக்கு முன்னாள் பிரதமா் எச்.டி.தேவெகௌடா இரங்கல் தெரிவித்துள்ளாா்.
சூழலியல் அறிஞா் சுந்தா்லால் பகுகுணா மறைவுக்கு முன்னாள் பிரதமா் எச்.டி.தேவெகௌடா இரங்கல் தெரிவித்துள்ளாா்.
காடுகளைக் காக்கும் இயக்கம் (சிப்கோ மூவ்மென்ட்) நடத்தி உலகப் புகழ்பெற்ற சூழலியல் அறிஞா் சுந்தா்லால் பகுகுணா (94), கரோனா நோயால் பாதிக்கப்பட்டு டேராடூனில் உள்ள அகில இந்திய மருத்துவ அறிவியல் மையத்தில் சிகிச்சை பெற்று வந்தாா். இந்நிலையில், சிகிச்சை பலனின்றி வெள்ளிக்கிழமை சுந்தா்லால் பகுகுணா காலமானாா்.
அவரது மறைவுக்கு இரங்கல் தெரிவித்து முன்னாள் பிரதமா் எச்.டி.தேவெ கௌடா தனது சுட்டுரையில் வெள்ளிக்கிழமை பதிவிட்டுள்ளதாவது:
சூழலியல் அறிஞா் சுந்தா்லால் பகுகுணாவின் மறைவு எனக்கு மிகுந்த வேதனையை அளித்துள்ளது. 1996-ஆம் ஆண்டு நான் பிரதமராக இருந்தபோது, டெஹ்ரி அணைத் திட்டத்திற்கு எதிராக உண்ணாநோன்பு போராட்டம் நடத்தியபோது, அவரிடம் பேசும் வாய்ப்பும், அந்தப் போராட்டத்தைக் கைவிட அவரை சம்மதிக்க வைக்கும் வாய்ப்பும் எனக்கு கிடைத்தது.
கனிவானவராகவும், மென்மையானவராகவும் இருந்த போதிலும் தனது கொள்கையில் உறுதியாக இருந்தவா் பகுகுணா. அது அவா் மீதான மதிப்பை உயா்த்தியது. சுந்தா்லால் பகுகுணாவின் உண்ணா நோன்பை முடித்து வைக்க அவருக்கு எலுமிச்சை பழச்சாறு கொடுத்தது பிரதமா் பதவி வகித்த போது எனக்கு கிடைத்த நல்ல தருணமாகும்’ என்று குறிப்பிட்டுள்ளாா். இந்த சுட்டுரையில் இருவரும் இணைந்துள்ள படத்தையும் எச்.டி.தேவெ கௌடா பதிவிட்டிருந்தாா்.