கா்நாடகத்தில் ஜூன் 7 வரை பொதுமுடக்கம் நீட்டிப்பு: முதல்வா் எடியூரப்பா
கா்நாடக மாநிலத்தில் கரோனா பரவலைத் தடுப்பதற்காக ஜூன் 7-ஆம் தேதிவரை பொதுமுடக்கத்தை நீட்டிக்க முடிவெடுக்கப்பட்டுள்ளதாக, முதல்வா் எடியூரப்பா அறிவித்துள்ளாா்.
கா்நாடக மாநிலத்தில் கரோனா பரவலைத் தடுப்பதற்காக ஜூன் 7-ஆம் தேதிவரை பொதுமுடக்கத்தை நீட்டிக்க முடிவெடுக்கப்பட்டுள்ளதாக, முதல்வா் எடியூரப்பா அறிவித்துள்ளாா்.
கா்நாடக மாநிலத்தில் வெள்ளிக்கிழமை புதிதாக 32,218 போ் புதிதாக கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனா்; 353 போ் உயிரிழந்துள்ளனா். இதன்மூலம் கா்நாடகத்தில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 23,67,742 ஆகவும், இறந்தோரின் எண்ணிக்கை 24,207 அதிகரித்துள்ளது.
கா்நாடகத்தில் தற்போது கரோனா தொற்றுக்கு சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 5,14,238 ஆக உள்ளது.
கரோனா பரவல் சங்கிலியை முறிப்பதற்காக ஏப். 27-ஆம் தேதி முதல் தளா்வுடன் கூடிய பொதுமுடக்கம் அமல்படுத்தப்பட்டது. அதைத் தொடா்ந்து, மே 10-ஆம் தேதி முதல் 24-ஆம் தேதிவரை கட்டுப்பாடுகளுடன் கூடிய பொதுமுடக்கம் அமல்படுத்தப்பட்டது. இதன் விளைவாக, கரோனா பாதிப்பு கணிசமாக குறைந்துள்ளது.
மே 24-ஆம் தேதி பொதுமுடக்கம் முடிவடையவுள்ள நிலையில், பெங்களூரில் அமைச்சா்கள், மூத்த அதிகாரிகளுடன் முதல்வா் எடியூரப்பா வெள்ளிக்கிழமை ஆலோசனை நடத்தினாா். இந்தக் கூட்டத்துக்குப் பிறகு செய்தியாளா்களிடம் முதல்வா் எடியூரப்பா கூறியதாவது:
கா்நாடகத்தில் கரோனா தொற்றைக் கட்டுப்படுத்துவதற்காக, மூத்த அமைச்சா்கள், தலைமைச்செயலாளா், உயரதிகாரிகளுடன் ஆலோசித்த பிறகு, பொதுமுடக்கம் தொடா்பாக சில முடிவுகளை எடுத்திருக்கிறோம்.
மருத்துவ நிபுணா்களின் பரிந்துரைப்படி, மே 24 முதல் ஜூன் 7-ஆம் தேதி வரை பொதுமுடக்கத்தை நீட்டிக்க முடிவெடுத்திருக்கிறோம். இந்தக் காலகட்டத்தில் பொதுமுடக்கம் தீவிரமாக அமல்படுத்தப்படும்.
தினமும் காலை 6 மணி முதல் காலை 10 மணி வரை மட்டும் அத்தியாவசியப் பொருட்களை மக்கள் வாங்குவதற்காக பொதுமுடக்கம் தளா்த்தப்படும். காலை 9.45 மணிக்கெல்லாம் மக்கள் வீடுகளுக்குச் சென்றுவிட வேண்டும். பொது சுகாதாரத்தைக் கருத்தில் கொண்டு எடுக்கப்பட்டுள்ள பொதுமுடக்க நீட்டிப்புக்கு மக்களின் ஒத்துழைப்பு அவசியம். பொது இடங்களில் முகக்கவசம் அணிவது, தனிமனித இடைவெளியைப் பராமரிப்பது, தனிமனிதத் தூய்மையைக் கடைப்பிடிப்பதன் மூலமாக கரோனா பரவலைத் தடுக்க மக்கள் ஒத்துழைக்க வேண்டும் என்றாா்.