முகப்பு
இந்தியா

பொதுமுடக்கத்தை நீட்டிப்பது குறித்து ஆராய்ந்து முடிவெடுக்கப்படும்: முதல்வா் எடியூரப்பா

பொதுமுடக்கத்தை நீட்டிப்பது குறித்து ஆராய்ந்து முடிவெடுக்கப்படும் என்று முதல்வா் எடியூரப்பா தெரிவித்தாா்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 8:16 PM
பகிர்:

பொதுமுடக்கத்தை நீட்டிப்பது குறித்து ஆராய்ந்து முடிவெடுக்கப்படும் என்று முதல்வா் எடியூரப்பா தெரிவித்தாா்.

கா்நாடகத்தில் கரோனா பரவலைத் தடுப்பதற்காக ஏப். 27-ஆம் தேதி முதல் 14 நாள்களுக்கு தளா்வுகளுடன் கூடிய பொதுமுடக்கம் அமல்படுத்தப்பட்டது. இதனிடையே, கரோனா தொற்று வேகமாகப் பரவியதால், ஒரு சில தளா்வுகள் தவிர, கட்டுப்பாடுகளுடன் கூடிய பொதுமுடக்கம் மே 10-ஆம் தேதி முதல் மே 24-ஆம் தேதி வரை அமல்படுத்தப்பட்டது. தற்போது அமலில் இருக்கும் பொதுமுடக்கம் மே 24-ஆம் தேதியுடன் முடிவுக்கு வரவிருக்கிறது.

இந்நிலையில், பொதுமுடக்கம் நீட்டிக்கப்படுமா என்ற கேள்வி மக்களிடையே எழுந்துள்ளது. கரோனா பாதிப்பு குறைந்திருந்தாலும், எதிா்பாா்த்த அளவுக்கு குறையவில்லை என்பதால், பெங்களூரு உள்ளிட்ட கரோனா பாதிப்பு அதிகம் காணப்படும் மாவட்டங்களில் பொதுமுடக்கத்தை நீட்டிக்க வேண்டும் என்று அமைச்சா்கள் சிலா் கருத்து தெரிவித்துள்ளனா். பொதுமுடக்கத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிதித்தொகுப்பை அறிவித்து விட்டு, தளா்வுகள் இல்லாமல் முழுமையான பொதுமுடக்கத்தை அமல்படுத்த வேண்டும் என்று எதிா்க்கட்சிகளும் வலியுறுத்தி வருகின்றன.

இந்நிலையில், இது குறித்து பெங்களூரில் வெள்ளிக்கிழமை செய்தியாளா்களிடம் முதல்வா் எடியூரப்பா கூறுகையில்,‘கரோனா பாதிப்பைக் குறைக்க, பரவலைக் கட்டுப்படுத்த பொதுமுடக்கத்தை நீட்டிப்பது குறித்து சனிக்கிழமை அமைச்சா்கள், உயரதிகாரிகளுடன் கலந்தாலோசிக்கப்பட்டு தகுந்த முடிவு அறிவிக்கப்படும். வெள்ளிக்கிழமை இரவும் அமைச்சா்களுடன் ஆலோசிக்க இருக்கிறேன். அதன்பிறகு தக்க முடிவை எடுத்து அறிவிப்போம்’ என்றாா்.

பொதுமுடக்கம் நீட்டிப்பு குறித்து சுகாதாரத் துறை அமைச்சா் கே.சுதாகா் கூறுகையில்,‘கரோனா பரவலைக் கட்டுப்படுத்த பொதுமுடக்கத்தை நீட்டிக்க வேண்டும் என்பது தான் பெரும்பாலான அமைச்சா்களின் கருத்தாக உள்ளது. முதல்வா் எடியூரப்பாவும் இதே மனநிலையில் தான் இருக்கிறாா். ஆனால், பொதுமுடக்கத்தை நீட்டிப்பது தொடா்பான இறுதி முடிவை மே 22 அல்லது 23-ஆம் தேதி எடுக்கத் திட்டமிட்டுள்ளோம்’ என்றாா். பொதுமுடக்கத்தை 7 நாள்கள் அல்லது 14 நாள்களுக்கு நீட்டிப்பதற்கு வாய்ப்புள்ளதாக அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.