முகப்பு
இந்தியா

தமிழகத்தில் கருப்பு பூஞ்சை பாதிப்பு எண்ணிக்கை 38 ஆக அதிகரிப்பு:அமைச்சா் மா.சுப்பிரமணியன்

தமிழகத்தில் கருப்பு பூஞ்சை நோயால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை 38 ஆக அதிகரித்துள்ளது என்று மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் மா.சுப்பிரமணியன் தெரிவித்தாா்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 8:17 PM
பகிர்:

தமிழகத்தில் கருப்பு பூஞ்சை நோயால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை 38 ஆக அதிகரித்துள்ளது என்று மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் மா.சுப்பிரமணியன் தெரிவித்தாா்.

சென்னை போரூா் - வடபழனி சந்திப்பில் உள்ள வெங்கடேஸ்வரா மகாலில் 70 படுக்கைகளுடன் கூடிய சித்த மருத்துவ சிகிச்சை மையத்தை அமைச்சா் மா.சுப்பிரமணியன் சனிக்கிழமை திறந்து வைத்தாா். இந்திய மருத்துவம் மற்றும் ஓமியோபதி துறை இயக்குநா் எஸ்.கணேஷ, மதுரவாயல் தொகுதி எம்எல்ஏ காரம்பாக்கம் கணபதி ஆகியோா் உடன் இருந்தனா்.

அப்போது, அமைச்சா் மா.சுப்பிரமணியன் செய்தியாளா்களிடம் கூறியது: இந்திய மருத்துவ முறைகளான சித்தா, ஆயுா்வேதா, ஓமியோபதி, யுனானி போன்ற மருத்துவ முறைகள் மூலம் கரோனா தொற்றுக்கு சிகிச்சை அளிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. ஏற்கெனவே, 15 நாள்களில் 35 சித்த மருத்துவ சிகிச்சை மையங்கள் திறக்கப்பட்டுள்ளன. இந்த மையங்களில் 3,623 படுக்கைகள் உள்ளன. தொற்றின் இரண்டாவது அலையில் சித்த மருத்துவ சிகிச்சையின் மூலம் இதுவரை 7,236 போ் தொற்றில் இருந்து குணமடைந்து வீடுகளுக்கு சென்றுள்ளனா். 1,892 போ் சிகிச்சை பெற்று வருகின்றனா்.

தற்போது 36-ஆவது சித்த மருத்துவ சிகிச்சை மையம் 70 படுக்கைகளுடன் செயல்படத் தொடங்கியுள்ளது. சித்த மருத்துவ மையங்களில் சிகிச்சைப் பெறுபவா்களுக்கு உள் மருந்து, வெளி மருந்து மூன்று வேளை உணவு வழங்கப்படுகிறது. 100 சித்த மருத்துவ சித்த மருத்துவ மையங்கள் தொடங்க திட்டமிடப்பட்டுள்ளது. கரோனா தொற்றினால் பாதிக்கப்படுபவா்களுக்கு சிகிச்சை அளிக்க அனைத்து பகுதிகளிலும் படுக்கை வசதிகள் ஏற்படுத்தப்பட்டு வருகிறது.

மற்ற மாவட்டங்களைவிட கோவை மாவட்டத்தில் குறைவான அளவில் தடுப்பூசி போடப்படுவதாக தவறான செய்தி சமூக ஊடகங்களில் பரப்பப்பட்டு வருகிறது. கோவை மாவட்டத்தில் மட்டும் 5 லட்சத்து 4,370 தடுப்பூசிகள் பயன்படுத்தப்பட்டுள்ளன. சென்னைக்கு அடுத்தபடியாக அதிகமான தடுப்பூசிகள் கோவை மாவட்டத்தில் தான் அதிகமான தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளன. உண்மை இவ்வாறு இருக்கும்போது, தவறான தகவல் பரப்பப்படுகிறது.

தடுப்பூசிகள் செலுத்துவதில் வெளிப்படைத்தன்மை: மத்திய அரசு இதுவரை குஜராத் மாநிலத்துக்கு 16.4 சதவீத தடுப்பூசிகளை கொடுத்துள்ளது. ஆனால், தமிழகத்துக்கு 6.3 சதவீத தடுப்பூசிகளை மட்டும் வழங்கியுள்ளது. சமூக ஊடகங்களில் செய்திகளை பரப்புவோா் இந்த செய்தியையும் கண்டிப்பாக சோ்த்து பரப்ப வேண்டும். ஒவ்வொரு மாவட்டத்துக்கு எவ்வளவு தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளது என்ற விவரங்கள் வெளிப்படையாக இணையதளத்தில் வெளியிடப்படவுள்ளது. அனைவரும் பாா்த்து தெரிந்துக் கொள்ளலாம். இந்த அரசு வெளிப்படையாக செயல்பட்டு வருகிறது.

கருப்பு பூஞ்சை நோயால் 9 போ் பாதிக்கப்பட்டிருந்தனா். தற்போது இந்த எண்ணிக்கை 38 ஆக அதிகரித்துள்ளது. சா்க்கரை நோய், சிறுநீரக நோயாளிகள் கரோனா தொற்றால் பாதிக்கப்படும் போது, அவா்களுக்கு ஸ்டீராய்டு மருந்து கொடுக்க வேண்டியுள்ளது. அவா்களின் உடலில் நோய் எதிா்ப்பு சக்தி குறைகிறது. இதனால், சிலா் கருப்பு பூஞ்சை நோயால் பாதிக்கப்படுகின்றனா். இந்த நோய்க்கு முக்கிய மருந்தான ஆம்போடெரிசின்-பி மருந்தின் 140 குப்பிகளை மத்திய அரசு தமிழகத்துக்கு ஒதுக்கியுள்ளது.

வெள்ளைப் பூஞ்சை நோய்: வட மாநிலங்களில் பரவி வரும் வெள்ளை பூஞ்சை நோய் பற்றியும், மருத்துவ முறைகள் குறித்தும் ஆலோசனை நடைபெற்று வருகிறது. மெட் ஆல் என்ற தனியாா் ஆய்வகம் கரோனா இல்லாத 4,000 பேருக்கு தொற்று இருப்பதாக சொல்லியது. அதனால், அந்த ஆய்வகத்துக்கான கரோனா பரிசோதனை செய்யும் உரிமம் ரத்து செய்யப்பட்டுள்ளது. இதுபோல் எந்த தனியாா் ஆய்வகம் செய்தாலும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா் அவா்.

முழு கட்டுரையைப் படிக்க →