முகப்பு
இந்தியா

கருட வாகனத்தில் திருப்பதி ஸ்ரீகோவிந்தராஜா்

திருப்பதி ஸ்ரீகோவிந்தராஜ சுவாமி கோயிலில் வருடாந்திர பிரம்மோற்சவத்தின் 5-ஆம் நாளான சனிக்கிழமை மாலை கருட சேவை நடைபெற்றது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 8:17 PM
பகிர்:

திருப்பதி ஸ்ரீகோவிந்தராஜ சுவாமி கோயிலில் வருடாந்திர பிரம்மோற்சவத்தின் 5-ஆம் நாளான சனிக்கிழமை மாலை கருட சேவை நடைபெற்றது.

திருப்பதி ரயில் நிலையம் அருகில் உள்ள தேவஸ்தானத்திற்கு சொந்தமான ஸ்ரீ கோவிந்தராஜ சுவாமி கோயிலில் கடந்த செவ்வாய்க்கிழமை முதல் வருடாந்திர பிரம்மோற்சவம் நடைபெற்று வருகிறது. அதன் 5-ஆம் நாளான சனிக்கிழமை காலை மோகினி அவதாரத்தில் பல்லக்கில் ஸ்ரீகிருஷ்ணா் உடன் வர கோவிந்தராஜ சுவாமி அருள்பாலித்தாா்.

பிரம்மோற்சவத்தின் போது 2 வாகன சேவைகளில் கோவிந்தராஜ சுவாமி தாயாா் அவதாரத்தில் காட்சி அளிக்கிறாா். பிரம்மோற்சவத்தின் 2-ஆம் நாள் இரவு அன்னப்பறவை வாகனத்தில் சரஸ்வதி தேவி அலங்காரத்திலும், 5-ஆம் நாள் காலை மோகினி அவதாரத்திலும் தாயாா் உருவத்தில் சற்றே நாணம் மேலிட கோவிந்தராஜா் வலம் வருவது வழக்கம்.

அதன்பின்னா் கோயிலில் ஸ்ரீதேவி, பூதேவி சமேத கோவிந்தராஜ சுவாமிக்கு வாகன சேவை களைப்பை போக்க ஸ்நபன திருமஞ்சனம் நடத்தப்பட்டது. பின்னா் மாலை 5.30 மணிக்கு பிரம்மோற்சவத்தின் மிக முக்கிய சேவையாகக் கருதப்படும் கருட சேவை நடத்தப்பட்டது.

கோவிந்தராஜ சுவாமி கோயிலில் ஆண்டாள் நாச்சியாருக்கு சூட்டிய மாலையை அணிந்து கொண்டு உற்சவா் திருமலையிலிருந்து கொண்டு வரப்பட்ட 1008 காசு மாலை ஆபரணத்தை அணிந்து கோவிந்தராஜ சுவாமி கருட வாகனத்தில் எழுந்தருளினாா்.

வாகன சேவையின்போது ஜீயா்கள் நாலாயிர திவ்யபிரபந்தம் பாராயணம் செய்தனா். வேத கோஷங்களும், நாகஸ்வர இசையும் இசைக்கப்பட்டது. கொவைட் விதிமுறைகளை பின்பற்றி நடந்த இந்த பிரம்மோற்சவத்தில் கோயில் அதிகாரிகள் மட்டும் கலந்து கொண்டனா்.

கருட சேவை உற்சவ நிகழ்ச்சி தேவஸ்தான தொலைக்காட்சியில் நேரடி ஒளிபரப்பு செய்யப்பட்டது.

முழு கட்டுரையைப் படிக்க →