கர்நாடக மாநிலத்தில், மேக்கேதாட்டு பகுதியில் காவிரியின் குறுக்கே அணை கட்டுமானத்தில் விதிகள் மீறப்பட்டதாகக் கூறப்படும் விவகாரத்தில் ஆய்வு அறிக்கையை சமர்ப்பிக்க ஒரு குழுவை அமைத்து தேசிய பசுமைத் தீர்ப்பாயம் (என்ஜிடி) உத்தரவிட்டுள்ளது.
இதுதொடர்பான விவகாரத்தை தீர்ப்பாயத்தின் நீதிபதி கே.ராமகிருஷ்ணன் மற்றும் வல்லுநர் உறுப்பினர் கே. சத்யகோபால் ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரித்தது. அப்போது இந்த விவகாரம் தொடர்பாக மத்திய சுற்றுச்சூழல் மற்றும் வனத் துறை அமைச்சகம், நீர்வள ஆதாரத் துறை, மத்திய நீர் ஆணையம் மற்றும் கர்நாடக, தமிழக அரசுகள் உள்ளிட்டோர் பதிலளிக்க நீதிபதி அமர்வு நோட்டீஸ் அனுப்பியது.
முன்னதாக, இந்த விவகாரம் தொடர்பாக செய்தித்தாளில் செய்தி வெளியாகியிருந்தது. அதில் "மேக்கேதாட்டு பகுதியில் காவிரி ஆற்றின் குறுக்கே கர்நாடக அரசு அணை கட்டுவதற்கு உத்தேசித்துள்ளது. இந்த அணை கட்டும் முன்மொழிவுக்கு தமிழகத்திலிருந்து எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. உச்சநீதிமன்றத்தில் இதுதொடர்பான வழக்கு நிலுவையில் இருப்பதால், அணை கட்டுவதற்கு அனுமதி அளிக்கக் கூடாது என்று தமிழக அரசின் தரப்பில் எதிர்ப்புத் தெரிவிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து, கடந்த இரு முறை காவிரி நீர் மேலாண்மை ஆணையம் கர்நாடக அரசின் முன்மொழிவை ஒத்திவைத்துள்ளது' என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.
அந்தச் செய்தியை அடிப்படையாகக் கொண்டு இந்த விவகாரத்தை தேசிய பசுமைத் தீர்ப்பாயம் தானாக முன்வந்து விசாரணைக்கு எடுத்துக் கொண்டது. இந்த நிலையில், இதுதொடர்பாக கடந்த 21-ஆம் தேதி தேசிய பசுமைத் தீர்ப்பாயம் விசாரித்தது. அப்போது, தீர்ப்பாய அமர்வு கூறியதாவது:
செய்தித்தாளில் வெளிவந்த செய்தியில் தெரிவிக்கப்பட்டிருப்பதைப் பரிசீலிக்கும்போது, இந்த விவகாரத்தில் பசுமைத் தீர்ப்பாயத்தின் தலையீடு தேவைப்படுவதற்கான போதிய கேள்வி எழுவதாக நாங்கள் கருதுகிறோம். ஆகவே, இந்த விவகாரம் விசாரணைக்கு ஏற்றுக் கொள்ளப்படுகிறது. இந்த விவகாரம் தொடர்பாக எதிர் தரப்பினருக்கு நோட்டீஸ் அளிக்கப்பட வேண்டும். அதில், செய்தித்தாளில் வெளிவந்த செய்தியின் பிரதியும் அளிக்கப்பட வேண்டும். இந்த விவகாரம் தொடர்பாக ஆய்வு செய்து அறிக்கை அளிக்க குழு அமைக்கப்படுகிறது.
இந்தக் குழுவில் பெங்களூரில் உள்ள மத்திய சுற்றுச்சூழல், வன அமைச்சகத்தின் ஒருங்கிணைந்த பிராந்திய அலுவலகத்தில் இருந்து மூத்த உறுப்பினர், காவிரி நீர் மேலாண்மை ஆணையம், காவிரி நீராவாரி நிறுவனம் ஆகியவற்றிலிருந்து மூத்த உறுப்பினர்கள், கர்நாடக வனத் துறையின் கூடுதல் வனப் பாதுகாவலர் அந்தஸ்துக்கு குறையாத உறுப்பினர் இடம் பெற வேண்டும். இந்தக் குழுவானது, செய்தித்தாளில் கூறப்பட்டுள்ள குற்றச்சாட்டுகளின்படி அணை கட்டுமான செயல்பாடுகளில் கேள்வி எழுப்பும் வகையில் ஏதும் விதிமீறல் நடந்துள்ளதா என்பது குறித்து விசாரணை நடத்த வேண்டும். குறிப்பாக வனப் பாதுகாப்புச் சட்டம் மற்றும் 2006-ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட இஐஏ அறிவிக்கை ஆகியவற்றின் கீழ் மத்திய சுற்றுச்சூழல் மற்றும் வனத் துறை அமைச்சகம், வனத் துறை ஆகியவற்றிடம் இருந்து தேவையான அனுமதியைப் பெறாமல் அணை கட்டுமானம் தொடங்கப்பட்டுள்ளதாகச் செய்தியில் தெரிவிக்கப்பட்டிருப்பது குறித்தும் விசாரணை நடத்த வேண்டும்.
ஏதேனும், அணை கட்டுமானம் செய்யப்பட்டிருந்தால், சுற்றுச் சூழலுக்கு ஏதேனும் சேதம் ஏற்படுத்தப்பட்டிருந்தால் அந்த சேத மதிப்பீட்டையும், இதற்காக சம்பந்தப்பட்ட துறையினரால் அளிக்கப்பட வேண்டிய சுற்றுச்சூழல் இழப்பீட்டையும் குழு மதிப்பீடு செய்ய வேண்டும். இந்தக் குழுவுக்கு தேவையான போக்குவரத்து வசதிகள் அளிப்பதற்கும், ஒருங்கிணைப்பு செய்வதற்கும் ஒருங்கிணைப்பு முகமையாக கர்நாடக வனத் துறையின் வன முதன்மைத் தலைமைப் பாதுகாவலர் செயல்படுவார் என்று பசுமைத் தீர்ப்பாய உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேக்கேதாட்டு அணை கட்டுமான விதிமீறல் தொடர்பாக செய்தித்தாளில் வெளியாகியிருந்த செய்தியில், "இந்த அணை கட்டுமானமானது அருகிலுள்ள பாதுகாக்கப்பட்ட வனப் பகுதிகள் மற்றும் விலங்குகள் வாழும் பகுதிகள் ஆகியவற்றில் தாக்கத்தை ஏற்படுத்தும். இந்த அணை கட்டுவதற்காக வனப் பாதுகாப்புச் சட்டம் மற்றும் இஐஏ அறிவிக்கை ஆகியவற்றின் கீழ் தேவையான அனுமதியைப் பெறவில்லை.
இந்த அணை கட்டும் திட்டம் செயல்படுத்தப்படுமேயானால், காவிரி வனவிலங்கு சரணாலயம் மற்றும் அருகில் உள்ள பாதுகாக்கப்பட்ட வனப் பகுதி ஆகியவற்றுக்கு சில தாக்கத்தை ஏற்படுத்தலாம். அணை கட்டுமானம் காரணமாக 5,252. 40 ஹெக்டேர் நிலங்கள் நீரில் மூழ்கி பாதிக்கப்படக்கூடும்' என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்த அணை கட்டுமானத்துக்கான திட்டச் செலவு ரூ.9 ஆயிரம் கோடியாக மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது. இந்தத் திட்ட முன்மொழிவானது, பெங்களூரு பெருநகர பிராந்தியம் மற்றும் அருகில் உள்ள பகுதிகளுக்கும் 4.75 டிஎம்சி குடிநீர் வசதியை வழங்குவதாகும்.
மேலும், கூடுதல் பயனாக 400 மெகாவாட் மின்சாரத்தையும் உற்பத்தி செய்வதாகும். இந்தத் திட்டத்துக்கு தமிழகம் தனது வலுவான எதிர்ப்பைத் தெரிவித்துள்ளது. மேலும், இந்த விவகாரத்தை உச்ச நீதிமன்றத்துக்கும் எடுத்துச் சென்றுள்ளது. காவிரிப் படுகையில் நதியின் மேல்நிலை மாநிலங்கள் எந்தக் கட்டுமான முன்மொழிவு செய்தால் அது தமிழகத்தின் டெல்டா விவசாயிகளின் நீர்ப் பங்கீட்டு உரிமையைப் பாதிக்கும் என்று தெரிவித்துள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.