மல்யுத்த வீரர் இறந்த விவகாரம்: சுஷீல் குமாரை சம்பவ இடத்துக்கு அழைத்துச் சென்று விசாரணை
தில்லியில் சத்ரசால் ஸ்டேடியத்தில் நிகழ்ந்த தகராறில் மல்யுத்த வீரர் சாகர் ரானா இறந்த சம்பவம் தொடர்பான வழக்கில் கைதான ஒலிம்பிக் பதக்க மல்யுத்த வீரர் சுஷீல் குமாரை
தில்லியில் சத்ரசால் ஸ்டேடியத்தில் நிகழ்ந்த தகராறில் மல்யுத்த வீரர் சாகர் ரானா இறந்த சம்பவம் தொடர்பான வழக்கில் கைதான ஒலிம்பிக் பதக்க மல்யுத்த வீரர் சுஷீல் குமாரை தில்லி போலீஸார் குற்றச் சம்பவம் நடந்த இடத்துக்கு செய்வாய்க்கிழமை நேரில் அழைத்துச் சென்று விசாரணை நடத்தினர்.
தில்லியில் வடக்கு பகுதியில் உள்ள சத்ரசால் ஸ்டேடியத்தின் உள்ளே மே 4-ம் தேதி நள்ளிரவு நடந்த மோதலின்போது, 23 வயதான மல்யுத்த வீரர் சாகர் ரானா உயிரிழந்தார். அவரது இரு நண்பர்கள் சோனு, அமித்குமார் கடுமையாகத் தாக்கப்பட்டனர். அவர்களை சுஷீல் குமார் மற்றும் பிற மல்யுத்த வீரர்கள் தாக்கியதாகப் புகார் தெரிவிக்கப்பட்டது.
ஒரு சொத்துப் பிரச்னை தொடர்பாக நிகழ்ந்த இந்த சம்பவம் குறித்து மாடல் டவுன் காவல் நிலையத்தில் சுஷீல் குமார் உள்ளிட்டோருக்கு எதிராக இந்திய தண்டனைச் சட்டம் மற்றும் ஆயுத சட்டத்தின் கீழ் கொலை, ஆள்கடத்தல் குற்றச் சதி ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
இந்த சம்பவத்துக்கு பிறகு சுஷீல் குமார் தலைமறைவானார். அவரைத் தேடப்படும் நபராக போலீஸார் அறிவித்தனர். மல்யுத்த வீரர் சுஷீல் குமார் தரப்பில் முன்ஜாமீன் கோரி தாக்கலான மனுவை தில்லி ரோஹிணி நீதிமன்றம் அண்மையில் தள்ளுபடி செய்து உத்தரவிட்டிருந்தது. இந்தச் சூழ்நிலையில் சுஷீல் குமார் (38), அவரது கூட்டாளி அஜய் (எ) சுனில் (48) ஆகிய இருவரையும் தில்லி முன்ட்கா பகுதியில் போலீஸார் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனர். சுஷீல் குமாரை 6 நாள் காவலில் வைத்து விசாரிக்க போலீஸாருக்கு நீதிமன்றம் அனுமதி அளித்து உத்தரவிட்டது.
இதைத் தொடர்ந்து, அவரிடம் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். இதுகுறித்து தில்லி காவல் துறை அதிகாரிகள் கூறியதாவது:
போலீஸ் காவலில் இருந்து வரும் சுஷீல் குமாரிடம் திங்கள்கிழமை 4 மணி நேரம் விசாரணை நடத்தப்பட்டது. பல்வேறு கோணங்களில் அவரிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த நிலையில், செவ்வாய்க்கிழமை அவரை குற்ற சம்பவம் நிகழ்ந்த சத்ரசால் ஸ்டேடியத்துக்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தப்பட்டது. காலையில் அழைத்துச் செல்லப்பட்ட அவர், நண்பகலில் திரும்பி அழைத்து வரப்பட்டார். குற்றப் பிரிவைச் சேர்ந்த விசாரணை குழுவினர், அவரை சம்பவ இடத்துக்கு அழைத்துச் சென்று, குற்றச் சம்பவம் எப்படி நிகழ்ந்தது என்பது தொடர்பாக விசாரணை நடத்தினர். அந்த சம்பவத்துக்குப் பிறகு அவர் தலைமறைவாகி இருந்த இடம் தொடர்பாகவும் விசாரணை நடத்தப்பட்டது. மேலும், அவர் தலைமறைவாவதற்கு உதவிய நண்பர்கள், கூட்டாளிகள் தொடர்பாகவும் அவரிடம் கேள்விகள் கேட்கப்பட்டன என்று போலீஸார் தெரிவித்தனர்.