577 குழந்தைகளை ஆதரவற்றவர்களாக்கிய கரோனா 2-ம் அலை
நாட்டில் கோரத் தாண்டவம் ஆடி வரும் கரோனா இரண்டாம் அலையில், 577 குழந்தைகள் தங்களது பெற்றோரை இழந்து ஆதரவற்றவர்களாகி உள்ளனர்.
புது தில்லி: நாட்டில் கோரத் தாண்டவம் ஆடி வரும் கரோனா இரண்டாம் அலையில், 577 குழந்தைகள் தங்களது பெற்றோரை இழந்து ஆதரவற்றவர்களாகி உள்ளனர்.
இந்தத் தகவலை மத்திய மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
அனைத்துக் குழந்தைகளும் தற்போது அவர்களது நெருங்கிய உறவினர்களின் கவனிப்பில் இருப்பதாகவும், விரைவில் அவர்களது தேவைகள் ஆராயப்பட்டு, அவர்களது பாதுகாப்பும், நலமும் உறுதி செய்யப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தற்போது 577 குழந்தைகள் குறித்த தகவல்கள் மட்டுமே உள்ளது. ஆனால், பதிவாகாத தகவல்கள் அதிகமாக இருக்கும். தற்போதைய நிலையில் தகவல் கிடைக்கப் பெற்ற குழந்தைகளின் நலனை மாவட்ட நிர்வாகங்கள் தொடர்ந்து கண்காணிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது என்றும் கூறப்பட்டுள்ளது.