தில்லிக்கு ஸ்புட்னிக்-வி தடுப்பூசி விநியோகம்: கேஜரிவால்
தில்லிக்கு ஸ்புட்னிக்-வி தடுப்பூசியை விநியோகிக்க அந்த நிறுவனம் ஒப்புக்கொண்டுள்ளதாக தில்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவால் புதன்கிழமை தெரிவித்தார்.
தில்லிக்கு ஸ்புட்னிக்-வி தடுப்பூசியை விநியோகிக்க அந்த நிறுவனம் ஒப்புக்கொண்டுள்ளதாக தில்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவால் புதன்கிழமை தெரிவித்தார்.
இதுபற்றி செய்தியாளர் சந்திப்பில் அவர் கூறியது:
"ஸ்புட்னிக்-வி தயாரிப்பாளர்களுடன் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. அவர்கள் தில்லிக்கு தடுப்பூசியை விநியோகிப்பார்கள். ஆனால், தடுப்பூசிகளின் அளவு குறித்து இன்னும் முடிவு செய்யப்படவில்லை. எங்களது அதிகாரிகளும் நிறுவனத்தின் பிரதிநிதிகளும் செவ்வாய்க்கிழமை கூட பேச்சுவார்த்தை நடத்தினர்.
அனைத்து மாநில அரசுகளும் அவர்களால் முடிந்தவற்றைச் செய்தனர். உலகளாவிய ஒப்பந்தப் புள்ளிக்கு அழைப்பு விடுத்தனர், அனைத்து தடுப்பூசி தயாரிப்பாளர்களுடனும் பேச்சுவார்த்தை நடத்தினர். அனைத்து நிறுவனங்களும் எங்களிடம் பேச்சுவார்த்தை மறுத்துவிட்டனர்.
இன்று நாம் கரோனா தொற்றுக்கு எதிரான போரில் உள்ளோம். அதில் மத்திய அரசும், மாநில அரசுகளும் பொறுப்புகளைப் பகிர்ந்துகொள்ள வேண்டும். மாநில அரசுகள் தங்களைக் காத்துக்கொள்ள வேண்டும் என்று மத்திய அரசு தங்களது பொறுப்பைத் தட்டிக் கழிக்கக் கூடாது. அது தவறு.
தடுப்பூசிகளைக் கொள்முதல் செய்து, மாநிலங்களுக்கு விநியோகிப்பது மத்திய அரசின் பொறுப்பாகும். தடுப்பூசிகளை விநியோகித்த பிறகும், அதை செலுத்துவதற்கு நாங்கள் மையங்களைத் திறக்காமல் இருந்தால் அதற்கு தில்லி அரசு பொறுப்பாகும்" என்றார் கேஜரிவால்.