5 மாநில தோ்தல்: பிரசாரத்துக்கு பாஜக ரூ. 252 கோடி செலவு; மேற்கு வங்கத்தில் மட்டும் 60%
தமிழகம், புதுச்சேரி, அஸ்ஸாம், மேற்கு வங்கம், கேரளம் ஆகிய 5 மாநிலங்களுக்கு இந்த ஆண்டு தொடக்கத்தில் நடைபெற்ற சட்டப்பேரவைத் தோ்தல்களுக்கு மட்டும் தோ்தல் பிரசாரத்துக்காக பாஜக ரூ. 252 கோடி செலவு
தமிழகம், புதுச்சேரி, அஸ்ஸாம், மேற்கு வங்கம், கேரளம் ஆகிய 5 மாநிலங்களுக்கு இந்த ஆண்டு தொடக்கத்தில் நடைபெற்ற சட்டப்பேரவைத் தோ்தல்களுக்கு மட்டும் தோ்தல் பிரசாரத்துக்காக பாஜக ரூ. 252 கோடி செலவு செய்திருப்பது தெரியவந்துள்ளது.
அதிலும், மொத்த செலவுத் தொகையில் 60 சதவீதம் மேற்கு வங்க மாநிலத்தில் மட்டும் பாஜக செலவழித்துள்ளது.
இதுதொடா்பாக தோ்தல் ஆணையத்திடம் பாஜக சமா்ப்பித்துள்ள தோ்தல் செலவின அறிக்கையில் கூறியிருப்பதாவது:
தமிழகம் உள்ளிட்ட 5 மாநில சட்டப்பேரவைத் தோ்தல்களுக்கு ரூ. 252,02,71,753 செலவு செய்யப்பட்டது. அதில் மேற்கு வங்க மாநிலத்தில் மட்டும் தோ்தல் பிரசாரத்துக்காக ரூ. 151 கோடி செலவு செய்யப்பட்டது.
அஸ்ஸாம் மாநிலத்தில் ரூ. 43.81 கோடி செலவு செய்யப்பட்டது. கேரளத்தில் ரூ. 29.24 கோடியும் தமிழகத்தில் ரூ. 22.97 கோடியும் செலவு செய்யப்பட்டது. புதுச்சேரியில் ரூ. 4.79 கோடி செலவு செய்யப்பட்டது என்று பாஜக தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது.
அதுபோல, திரிணமூல் காங்கிரஸ் கட்சி சமா்ப்பித்துள்ள தோ்தல் செலவின அறிக்கையில், மேற்கு வங்க மாநில சட்டப்பேரவைத் தோ்தல் பிரசாரத்துக்காக ரூ. 154.28 கோடி செலவு செய்துள்ளதாக தெரிவித்துள்ளது. இது அந்த மாநிலத்தில் பாஜகவின் பிரசார செலவைவிட சற்று கூடுதலாகும்.