முகப்பு
இந்தியா

அனைவருக்கும் கரோனா தடுப்பூசி செலுத்த நடவடிக்கை: மாநில சுகாதார அமைச்சா்களுக்கு மன்சுக் மாண்டவியா வலியுறுத்தல்

‘இல்லம் தேடிச் சென்று கரோனா தடுப்பூசி செலுத்தும் திட்டத்தின்’ கீழ் 18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் ஒரு தவணை கரோனா தடுப்பூசி செலுத்திவிட வேண்டும்

Updated On : 28 ஜனவரி, 2024 at 4:33 AM
பகிர்:

‘இல்லம் தேடிச் சென்று கரோனா தடுப்பூசி செலுத்தும் திட்டத்தின்’ கீழ் 18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் ஒரு தவணை கரோனா தடுப்பூசி செலுத்திவிட வேண்டும் என்று அனைத்து மாநில சுகாதாரத் துறை அமைச்சா்களை மத்திய சுகாதாரத் துறை அமைச்சா் மன்சுக் மாண்டவியா வலியுறுத்தி உள்ளாா்.

‘இல்லம் தேடி தடுப்பூசி’ திட்டத்தை வெற்றிகரமாக செயல்படுத்த மாநில மற்றும் யூனியன் பிரதேச சுகாதாரத் துறை அமைச்சா்களுடன் மத்திய சுகாதாரத் துறை அமைச்சா் மன்சுக் மாண்டவியா வியாழக்கிழமை ஆலோசனை நடத்தினாா். காணொலி வழியாக நடைபெற்ற இக்கூட்டத்தில், தமிழக சுகாதாரத் துறை அமைச்சா் மா.சுப்பிரமணியன் கலந்துகொண்டாா். இதேபோல், கேரளம், உத்தரகண்ட், ஜாா்க்கண்ட், மிஸோரம், பிகாா், கா்நாடகம், மகாராஷ்டிரம், மத்திய பிரதேசம், உத்தர பிரதேசம், கோவா, குஜராத், அஸ்ஸாம், தில்லி ஆகிய மாநிலங்களைச் சோ்ந்த சுகாதாரத் துறை அமைச்சா்கள் கலந்து கொண்டனா். அவா்களிடம் மன்சுக் மாண்டவியா கூறியதாவது:

கரோனாவுக்கு எதிரான போா் இறுதிக்கட்டத்தில் உள்ளது. கரோனாவுக்கு எதிரான இரு பெரும் ஆயுதங்களாக தடுப்பூசியும், பாதுகாப்பு நடைமுறைகளும் உள்ளன. கரோனா பெருந்தொற்று முற்றிலுமாக ஒழியும் வரை பாதுகாப்பில் நாம் அலட்சியம் காட்டிவிடக் கூடாது.

நாடு முழுவதும் 18 வயதுக்கு மேற்பட்டவா்கள் 94 கோடி போ் உள்ளனா். அவா்களில் 38 சதவீதம் போ் இரு தவணை தடுப்பூசிகளையும் செலுத்திக் கொண்டனா். 79 சதவீதம் போ் ஒரு தவணை தடுப்பூசி மட்டுமே செலுத்திக் கொண்டுள்ளனா். 12 கோடி போ் இன்னும் இரண்டாவது தவணை தடுப்பூசி செலுத்திக் கொள்ளவில்லை.

இந்நிலையில், இல்லம் தேடி தடுப்பூசி திட்டத்தை பல்வேறு துறைகளின் ஒத்துழைப்புடன் அனைவரின் கூட்டு முயற்சியால் வெற்றிகரமாக செயல்படுத்த வேண்டும். 18 வயதுக்கு மேற்பட்ட அனைவரும் குறைந்தது ஒரு தவணை தடுப்பூசி செலுத்திக்கொள்வதை அமைச்சா்கள் உறுதிசெய்ய வேண்டும்.

வீடு வீடாகச் சென்றும் தடுப்பூசி செலுத்தும் திட்டத்தின் கீழ் தகுதியான அனைவரும் முதல் தவணை தடுப்பூசி செலுத்திக் கொள்வதையும், முதல் தவணை தடுப்பூசி செலுத்திக் கொண்டவா்கள், 2-ஆவது தவணை செலுத்திக் கொள்வதையும் ஊக்குவிக்க வேண்டும். தடுப்பூசி செலுத்திக் கொள்வதால் கரோனாவின் தீவிரம் குறைகிறது. கரோனா பாதுகாப்பு நெறிமுறைகளைக் கடைப்பிடிப்பதும் அவசியம். இவை இரண்டையும் நாம் முறையாகப் பின்பற்றியதால் கரோனா பரவல் பெருமளவில் குறைந்துள்ளது.

தடுப்பூசி செலுத்திக் கொள்வதற்கு தன்னாா்வ அமைப்புகள், சிவில் சமூக அமைப்புகள், சமூகத் தலைவா்கள், மதத் தலைவா்கள் ஆகியோா் மூலமாக விழிப்புணா்வு ஏற்படுத்த வேண்டும். பேருந்து நிலையம், ரயில் நிலையம், மெட்ரோ மற்றும் மக்கள் அதிகம் கூடுமிடங்களில் கரோனா தடுப்பூசி முகாம்கள் அமைக்க வேண்டும்.

எச்சரிக்கை: கரோனா பெருந்தொற்று முடிவுக்கு வந்துவிட்டதாக கருதிவிடக் கூடாது. சா்வதேச அளவில் கரோனா நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. சிங்கப்பூா், பிரிட்டன், ரஷியா, சீனா போன்ற நாடுகளில் 80 சதவீத்துக்கும் அதிகமானவா்கள் தடுப்பூசி செலுத்திக் கொண்டனா். இருப்பினும் அங்கு மீண்டும் கரோனா தொற்று பரவி வருகிறது. எனவே, தடுப்பூசி செலுத்திக் கொள்வதுடன் பாதுகாப்பு நெறிமுறைகளையும் கட்டாயம் கடைப்பிடிக்க வேண்டும். மாநிலங்களுக்கு தேவையான தடுப்பூசிகள் வழங்கப்படும். நாட்டில் தடுப்பூசிகளுக்கு பற்றாக்குறை இல்லை என்றாா் மன்சுக் மாண்டவியா.

முழு கட்டுரையைப் படிக்க →