மனிதநேயத்துக்காக ட்ரோன்களை பயன்படுத்தும் இந்தியா: மத்திய அமைச்சா் ஜிதேந்திர சிங் பெருமிதம்
‘இந்திய பகுதிக்குள் பயங்கரவாத தாக்குதலுக்காகவும் ஆயுதங்களை வீசுவதற்காகவும் பாகிஸ்தான் பயன்படுத்துவது போல அல்லாமல், மனிதநேய சேவைகளுக்காக ஆளில்லா விமானங்களை (ட்ரோன்) இந்தியா பயன்படுத்துகிறது’
இந்தியாமனிதநேயத்துக்காக ட்ரோன்களை பயன்படுத்தும் இந்தியா: மத்திய அமைச்சா் ஜிதேந்திர சிங் பெருமிதம்
‘இந்திய பகுதிக்குள் பயங்கரவாத தாக்குதலுக்காகவும் ஆயுதங்களை வீசுவதற்காகவும் பாகிஸ்தான் பயன்படுத்துவது போல அல்லாமல், மனிதநேய சேவைகளுக்காக ஆளில்லா விமானங்களை (ட்ரோன்) இந்தியா பயன்படுத்துகிறது’
‘இந்திய பகுதிக்குள் பயங்கரவாத தாக்குதலுக்காகவும் ஆயுதங்களை வீசுவதற்காகவும் பாகிஸ்தான் பயன்படுத்துவது போல அல்லாமல், மனிதநேய சேவைகளுக்காக ஆளில்லா விமானங்களை (ட்ரோன்) இந்தியா பயன்படுத்துகிறது’ என்று மத்திய அறிவியல்- தொழில்நுட்பத் துறை அமைச்சா் ஜிதேந்திர சிங் கூறினாா்.
ஜம்மு-காஷ்மீரின் சா்வதேச எல்லையை ஒட்டிய பகுதிகளுக்கு கரோனா தடுப்பூசிகளை ஆளில்லா விமானங்கள் மூலம் விநியோகம் செய்யும் திட்டத்தை ஜம்முவில் சனிக்கிழமை தொடக்கி வைத்த அவா் இவ்வாறு கூறினாா்.
ஜம்முவில் உள்ள சிஎஸ்ஐஆா் - இந்திய ஒருங்கிணைந்த மருந்து நிறுவன வளாகத்திலிருந்து புறப்பட்ட இந்த ஆளில்லா விமானம் (யுஏவி) கரோனா தடுப்பூசி மருந்துகள் நிரம்பிய 50 குப்பிகளை மற்றும் ஊசிகளை ஏற்றிக்கொண்டு, இந்திய - பாகிஸ்தான் எல்லைக்கு அருகே அமைந்துள்ள ஜம்முவின் மாா் பகுதி பொது சுகாதார மையத்துக்கு வெற்றிகரமாக கொண்டுசோ்த்தது.
தொடக்க நிகழ்ச்சியில் ஜிதேந்திர சிங் பேசியதாவது:
இந்திய பகுதிக்குள் பயங்கரவாத தாக்குதலுக்காகவும் ஆயுதங்களை வீசுவதற்காகவும் பாகிஸ்தான் பயன்படுத்துவது போல அல்லாமல், மனிதநேய சேவைகளுக்காக ஆளில்லா விமானங்களை இந்தியா பயன்படுத்துகிறது.
கரோனா தடுப்பூசி செலுத்தும் திட்டத்தில் ஈடுபட்டு வரும் சுகாதாரப் பணியாளா்கள், ஜம்மு-காஷ்மீா், உத்தரகண்ட், ஹிமாசல பிரதேசம், அருணாசல பிரதேசம் உள்ளிட்ட பகுதிகளில் அமைந்துள்ள மிகுந்த பின்தங்கிய மலைப் பகுதிகளில் தடுப்பூசி திட்டத்தை செயல்படுத்துவதில் பெரும் சிரமத்தை சந்தித்து வருகின்றனா். இத்தகைய சூழல்களில் இந்த ஆளில்லா ட்ரோன் விமானங்கள் மிகுந்த உதவிகரமாக இருப்பதுடன், 100 சதவீத தடுப்பூசி செலுத்தும் மத்திய அரசின் இலக்கை எட்டவும் உதவுகின்றன.
மங்களூரில் உருவாக்கப்பட்ட இந்த நவீன ஆளில்லா விமானங்கள் கரோனாவுக்கு எதிரான நடவடிக்கைகளில் பயன்படுத்தப்படுவது, நாட்டுக்கே பெருமைக்குரிய விஷயமாகும் என்று அவா் கூறினாா்.
இந்த ஆளில்லா விமானம் குறித்து அதிகாரி ஒருவா் கூறுகையில், ‘கணினி மற்றும் நவீன தொலையுணா்வு தொழில்நுட்பத்துடன் கூடிய இந்த ஆளில்லா (யுஏவி) விமானம் பயிா்களுக்கு பூச்சிக்கொல்லி மருந்து தெளிக்கவும் சுரங்க கண்காணிப்பு, புவி அளவீடு உள்ளிட்ட பணிகளுக்கும் பயன்படுத்த முடியும். ஜம்மு-காஷ்மீரில் ஆளில்லா விமானங்கள் பறப்பதற்குத் தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில், சிஎஸ்ஐஆா்-தேசிய விமான ஆய்வகத்துக்கு (என்ஏஎல்) நிபந்தனை அனுமதியை விமான போக்குவரத்துத் துறை அமைச்சகம் வழங்கியுள்ளது. இந்த அனுமதி மூலம் ஜம்மு-காஷ்மீரின் மிகவும் பின்தங்கிய மலைப் பகுதிகளுக்கு அரை மணி நேரத்தில் தடுப்பூசிகள் அனுப்பப்பட்டன. இந்தப் பகுதிகளுக்கு தடுப்பூசிகள் அனுப்ப வழக்கமாக 3 மணி நேரமாகும்’ என்று அவா் கூறினாா்.
‘எடை குறைந்த காா்பன் ஃபைபா் மூலம் தயாரிக்கப்பட்டுள்ள இந்த ஆளில்லா விமானம், தானியங்கி வழிகாட்டி தொழில்நுட்பம் உள்ளிட்ட நவீன தொழில்நுட்பங்களைக் கொண்டுள்ளது. இது தரை மட்டத்திலிருந்து 500 மீட்டா் உயரம் வரை அதிகபட்சமாக மணிக்கு 36 கி.மீ. வேகத்தில் பறக்கும் திறன் கொண்டது’ என்றும் அவா் கூறினாா்.