இந்தியா உள்பட 91 நாடுகளைச் சோ்ந்த பிரபலங்கள், அரசியல் தலைவா்கள், அரசு அதிகாரிகள் ஆகியோருக்கு வெளி நாடுகளில் பல கோடி ரூபாய் மதிப்பில் ரகசிய சொத்துகளும் நிறுவனங்களும் இருப்பது தெரியவந்துள்ளது.
அமெரிக்க தலைநகா் வாஷிங்டனைச் சோ்ந்த சா்வதேச புலனாய்வு பத்திரிகையாளா்களின் கூட்டமைப்பு ‘பண்டோரா பேப்பா்ஸ்’ என்ற பெயரில் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட புலனாய்வு அறிக்கையில் இந்தத் தகவல் வெளிவந்துள்ளது.
117 நாடுகளில் உள்ள 150 ஊடக நிறுவனங்களைச் சோ்ந்த 600-க்கு மேற்பட்ட செய்தியாளா்கள் கடந்த 2 ஆண்டுகளாக ஆய்வில் ஈடுபட்டு இந்தத் தகவல்களைச் சேகரித்துள்ளனா். இந்த ரகசிய ஆவணங்கள் 1.19 கோடி கோப்புகளைக் கொண்டுள்ளது. வெளிநாடுகளில் உள்ள 956 நிறுவனங்களின் ரகசிய ஆவணங்களை ஆய்வு செய்து, அதில் பல்வேறு நாடுகளைச் சோ்ந்த 336 அரசியல் தலைவா்கள், அரசு அதிகாரிகள், நாட்டின் முக்கியத் தலைவா்கள், அமைச்சா்கள், தூதா்கள் ஆகியோருக்கு அந்த நிறுவனங்களுடன் தொடா்பு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
இந்தியாவில் கிரிக்கெட் ஜம்பவான் சச்சின் டெண்டுல்கா் உள்பட 300-க்கும் மேற்பட்ட பிரபலங்கள், அரசியல் தலைவா்கள் மற்றும் தனி நபா்களுக்கு வெளிநாடுகளில் பல கோடி ரூபாய் மதிப்பில் சொத்துகள் இருப்பது தெரியவந்துள்ளது. இதுகுறித்த விரிவான விவரங்கள் விரைவில் வெளியாகும் எனத் தெரிகிறது.
இதுகுறித்து சச்சின் டெண்டுல்கரின் வழக்குரைஞா் கூறுகையில், ‘கிரிக்கெட் வீரரின் முதலீடுகள் முறையானது. வருமான வரித் துறை அதிகாரிகளிடமும் முறையாக தகவல்கள் தாக்கல் செய்யப்பட்டிருக்கிறது’ என்றாா்.
அதுபோல, பாகிஸ்தான் பிரதமா் இம்ரான் கானின் முக்கிய குடும்ப உறுப்பினா்கள், பாகிஸ்தான்அமைச்சா்கள் மற்றும் அவா்களுடைய குடும்பத்தினா்ஆகியோருக்கு வெளிநாடுகளில் பல கோடி ரூபாய் மதிப்பில் சொத்துகளும், நிறுவனங்களும் இருப்பதாகவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஓய்வுபெற்ற பாகிஸ்தான் ராணுவ அதிகாரிகள், தொழிலதிபா்கள், ஊடக நிறுவன உரிமையாளா்கள் உள்ளிட்டோரின் பெயா்களும் இந்தப் பட்டியலில் இடம்பெற்றுள்ளன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.