முகப்பு
இந்தியா

பிரதமரின் பாரதிய மக்கள் மருந்தகங்களின் இலக்கு நிறைவு

மக்கள் பயன் பெறும் வகையிலான பிரதமரின் பாரதிய மக்கள் மருந்தகம் நாட்டிலுள்ள அனைத்து மாவட்டங்களிலும் திறக்கப்பட்டுவிட்டதாக மத்திய ரசாயனம், உரத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

Updated On : 28 ஜனவரி, 2024 at 4:19 AM
பகிர்:


புது தில்லி: வறுமைக்கோட்டுக்குள் இருக்கும் மக்கள் பயன் பெறும் வகையிலான பிரதமரின் பாரதிய மக்கள் மருந்தகம் நாட்டிலுள்ள அனைத்து மாவட்டங்களிலும் திறக்கப்பட்டுவிட்டதாக மத்திய ரசாயனம், உரத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
நடப்பு நிதியாண்டில் நிர்ணயிக்கப்பட்ட இலக்கின்படி 8,300 மக்கள் மருந்தகங்கள் இதுவரை திறக்கப்பட்டுவிட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சாதாரண நோய்கள் முதல் நீடித்த நோய்கள் வரையிலான அலோபதி மருந்துகள், வெளிச் சந்தைகளில் அதிக விலையில் விற்கப்படுகின்றன. இந்த மருந்துகள் பொதுமக்களுக்கு மலிவான விலையில் கிடைக்க மத்திய அரசு கொண்டுவந்துள்ள திட்டம்தான் "பிரதம மந்திரி பாரதிய மக்கள் மருந்தக திட்டம் (பிஎம்பிஜேபி)' ஆகும். இந்தத் திட்டத்தை இந்திய மருந்துகள், மருத்துவ சாதனங்கள் பணியகம் (பிஎம்பிஐ) பொறுப்பேற்று நாடு முழுவதும் மலிவு விலையில் முக்கிய மருந்துகளை விற்பனை செய்யும் வகையில், பிரதம மந்திரி பாரதிய மக்கள் மருந்தகங்களைத் திறந்து வருகிறது.
இந்த மருந்தகங்கள் மூலம் சுமார் 1,451 மருந்துகள், 240 மருத்துவ சாதனங்கள் மலிவான விலையில் பொதுமக்களுக்கு விற்கப்படுகின்றன. 
இந்தத் திட்டத்தின்கீழ் கடந்த 2020, மார்ச் வரை 696 மாவட்டங்களில் 6,068 மக்கள் மருந்தகங்கள் திறக்கப்பட்டன. நிகழ் 2021-22-ஆம் நிதியாண்டில் 8,300 மக்கள் மருந்தகங்கள் திறக்கத் திட்டமிடப்பட்டு அக்டோபர் 5-ஆம் தேதி வரை 8,355 மருந்தகங்கள் திறக்கப்பட்டுவிட்டதாக ரசாயனத் துறை தெரிவித்துள்ளது. மேலும், 2024-ஆம் ஆண்டுக்குள் 10,000 மக்கள் மருந்தகங்களைத் திறக்கவும் மத்திய ரசாயனத் துறை திட்டமிட்டுள்ளதாக அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
தமிழகத்தில்... தற்போது நாட்டில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் (725) மக்கள் மருந்தகங்கள் திறக்கப்பட்டுவிட்டன. தமிழகத்தில் இதுவரை சுமார் 827 மக்கள் மருந்தகங்கள் திறக்கப்பட்டு நாட்டிலேயே சிறப்பாகச் செயல்படுவதாகவும் மத்திய ரசாயனத் துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், தற்போது தகவல் தொழில்நுட்ப அடிப்படையில் அனைத்து மக்கள் மருந்தகங்களும் விநியோகச் சங்கிலியால் இணைக்கப்பட்டு நிகழ்நேர அடிப்படையில் மருந்து விநியோகம் மேற்கொள்ளப்படுகிறது.
2020-21- ஆம் ஆண்டில் மக்கள் மருந்தகங்கள் மூலம் ரூ.665.83 கோடிக்கு விற்பனை நடந்துள்ளது. இதன்மூலம் பொதுமக்கள் ரூ. 4,000 கோடி வரை சேமிக்க முடிந்துள்ளது என்று அமைச்சகம்  கூறியுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments