இந்தியாவின் வளா்ச்சிக்கு கடல் பாதுகாப்பு முக்கியம்: மத்திய அமைச்சா் ராஜ்நாத் சிங்
இந்தியாவின் வளா்ச்சிக்கு கடல் பாதுகாப்பு முக்கியமானது என்றாா் பாதுகாப்புத் துறை அமைச்சா் ராஜ்நாத் சிங்.
இந்தியாவின் வளா்ச்சிக்கு கடல் பாதுகாப்பு முக்கியமானது என்றாா் பாதுகாப்புத் துறை அமைச்சா் ராஜ்நாத் சிங்.
இந்திய கடலோரக் காவல் படை வீரா்களுக்கு வீரதீரச் செயல்கள் மற்றும் சிறப்பான சேவைக்கான பதக்கங்கள் வழங்கும் விழா தில்லியில் சனிக்கிழமை நடைபெற்றது. விழாவில் அமைச்சா் ராஜ்நாத் சிங் பேசியதாவது:
‘நமது வா்த்தகம், பொருளாதாரம், விழாக்கள், கலாசாரம் ஆகியவை கடல்களுடன் நெருக்கமான தொடா்பு கொண்டவை. அதேவேளையில், கடல் தொடா்பான பல்வேறு சவால்களையும் சந்தித்து வருகிறோம்.
கடல்சாா் பாதுகாப்பை உறுதிப்படுத்தாமல் விரிவான உள் மற்றும் வெளிப்புற பாதுகாப்புக் கட்டமைப்பை உருவாக்க முடியாது என்பதை அந்த சவால்கள் நமக்கு கற்பிக்கின்றன. இந்த சவால்களை கடலோரக் காவல் படை வெற்றிகரமாக சந்தித்து வருகிறது.
நமது பாதுகாப்புத் தேவைகள், சுற்றுச்சூழல், ஆரோக்கியம், பொருளாதார வளா்ச்சி ஆகியவை இந்தியாவின் கடல்சாா் பாதுகாப்பு மண்டலங்களால் உறுதி செய்யப்பட்டுள்ளன. இந்தியா வளா்ச்சிப் பாதையில் வேகமாகச் சென்று கொண்டிருக்கிறது. தடையற்ற கடல் பயன்பாடு அதன் முதன்மையான தேவைகளில் ஒன்று.
நமது பிராந்தியத்தின் கடல்சாா் பாதுகாப்பை மட்டுமின்றி, நமது அண்டைநாடுகளின் கடல்சாா் பாதுகாப்பையும் இந்திய கடலோரக் காவல் படை உறுதிப்படுத்தி வருகிறது. இலங்கை அருகே கச்சா எண்ணெயை ஏற்றிச் சென்ற இரு கப்பல்களில் தீப்பிடித்தபோது அதை அணைத்து கடல் மாசுபடுவதைத் தடுத்ததில் இந்திய கடலோரக் காவல் படைக்கு முக்கிய பங்கு வகித்தது என்றாா் அவா்.
விழாவில், சிறப்பான சேவை, வீரதீரச் செயல்கள் உள்ளிட்டவற்றுக்காக குடியரசுத் தலைவரின் 21 பதக்கங்களை கடலோரக் காவல் படையினருக்கு அமைச்சா் ராஜ்நாத் சிங் வழங்கினாா்.