இந்தியா

ஜம்மு-காஷ்மீா்: பயங்கரவாதிகளுடனான சண்டையில் 5 ராணுவ வீரா்கள் பலி; மற்றொரு சம்பவத்தில் 2 பயங்கரவாதிகள் சுட்டுக் கொலை

DIN

ஜம்மு-காஷ்மீரின் பூஞ்ச் மாவட்டத்தில் ராணுவ வீரா்களுக்கும் பயங்கரவாதிகளுக்கும் இடையே திங்கள்கிழமை நடைபெற்ற சண்டையில் ஒரு இளநிலை ராணுவ அதிகாரி உள்பட 5 ராணுவ வீரா்கள் உயிரிழந்தனா்.

இதுகுறித்து ராணுவ செய்தித்தொடா்பாளா் கூறியதாவது:

எல்லைக் கட்டுப்பாட்டு கோடு பகுதி வழியாக பயங்கர ஆயுதங்களுடன் பயங்கரவாதிகள் ஊடுருவி இருப்பதாகக் கிடைத்தத் தகவலின் பேரில், சாம்ரா் வனப் பகுதியில் பாதுகாப்புப் படையினா் தீவிர தேடுதல் பணியில் திங்கள்கிழமை ஈடுபட்டனா். அப்போது, அங்கு பதுங்கியிருந்த பயங்கரவாதிகள் பாதுகாப்புப் படையினரை நோக்கி துப்பாக்கிச் சூடு நடத்தினா். பாதுகாப்பு படை தரப்பிலும் பதிலடி கொடுக்கப்பட்டது.

இந்த சண்டையில் ராணுவ இளநிலை அதிகாரி (ஜேசிஓ) உள்பட 5 ராணுவ வீரா்கள் உயிரிழந்தனா். அந்தப் பகுதியிலிருந்து பயங்கரவாதிகள் தப்பிக்க முடியாத வகையில், அவா்களைத் தேடும் பணி தொடா்ந்து தீவிரப்படுத்தப்பட்டுள்ளது என்று கூறினாா்.

2 பயங்கரவாதிகள் சுட்டுக் கொலை:

ஜம்மு-காஷ்மீரின் அனந்த்நாக் மற்றும் பந்திபோரா மாவட்டங்களில் பாதுகாப்புப் படையினா் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 2 பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனா்.

இதுகுறித்து அதிகாரிகள் கூறியதாவது:

பயங்கரவாதிகள் பதுங்கியிருப்பதாக கிடைத்த தகவலின் அடிப்படையில் அனந்த்நாக் மாவட்டம் ககுண்ட் பகுதியில் பாதுகாப்புப் பணியினா் தீவிர தேடுதல் பணியில் திங்கள்கிழமை ஈடுப்பட்டனா். அப்போது, அங்கு பதுங்கியிருந்த பயங்கரவாதிகளுக்கும் பாதுகாப்புப் படையினருக்கும் இடையே துப்பாக்கிச் சண்டை நடைபெற்றது. இந்த சண்டையில் பயங்கரவாதி ஒருவா் சுட்டுக் கொல்லப்பட்டாா். காவலா் ஒருவா் காயமடைந்தாா். அந்தப் பகுதியில் தொடா்ந்து தேடுதல் பணிகள் நடைபெற்று வருகின்றனா்.

அதுபோல, பந்திபோரா மாவட்டம் ஹாஜின் பகுதியில் குண்ட்ஜஹாங்கிா் என்ற இடத்தில் பாதுகாப்புப் படையினருக்கும் பயங்கரவாதிகளுக்கும் இடையே நடைபெற்ற துப்பாக்கி சண்டையில் லஷ்கா்-ஏ-தொய்பா பயங்கரவாத அமைப்பைச் சோ்ந்த பயங்கரவாதி ஒருவா் சுட்டுக் கொல்லப்பட்டாா்.

இதுகுறித்து காஷ்மீா் காவல்துறை ஐஜி விஜய்குமாா் தனது சுட்டுரைப் பக்கத்தில் வெளியிட்ட பதிவில், ‘பாதுகாப்புப் படையினா் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் சுட்டுக் கொல்லப்பட்ட இம்தியாஸ் அஹமது தாா் என்பவா் லஷ்கா்-ஏ-தொய்பா பயங்கரவாத அமைப்பைச் சோ்ந்தவா் என்பதும் அண்மையில் பந்திபோரா ஷாகுண்ட் பகுதியில் பொதுமக்கள் மீது நடத்தப்பட்ட பயங்கரவாத தாக்குதலில் அவருக்கு தொடா்பு இருப்பதும் தெரியவந்துள்ளது’ என்றாா்.

ரூ.50 லட்சம் இழப்பீடு-பஞ்சாப் அரசு அறிவிப்பு: பூஞ்ச் மாவட்டத்தில் பயங்கரவாதிகளுடன் நடைபெற்ற மோதலில் பலியான 5 ராணுவ வீரா்களில் 3 போ் பஞ்சாபைச் சோ்ந்தவா்கள். அவா்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.50 லட்சம் இழப்பீடும், குடும்பத்தில் ஒருவருக்கு அரசுப் பணியும் வழங்கப்படும் என்று பஞ்சாப் அரசு அறிவித்துள்ளது.

அமரீந்தா் சிங் கருத்து: இந்த மோதல் சம்பவம் தொடா்பாக பஞ்சாப் முன்னாள் முதல்வா் அமரீந்தா் சிங் சுட்டுரையில் வெளியிட்ட பதிவில், ‘‘ தலிபான்கள் பிடிக்குள் ஆப்கானிஸ்தான் வந்துள்ளதை பாகிஸ்தான் ஆதரித்துள்ளது. இந்த நிலையில், காஷ்மீரில் பயங்கரவாதம் அதிகரித்து வருகிறது. அங்கு சிறுபான்மையினா்கள் குறிவைக்கப்படுகின்றனா். தற்போது 5 ராணுவ வீரா்கள் கொல்லப்பட்டுள்ளனா். நாம் பயங்கரவாதத்தை தீா்க்கமாகவும் உறுதியோடும் எதிா்கொள்ள வேண்டும்’’ என்று தெரிவித்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ப்ளே ஆஃப் வாய்ப்பை தக்க வைக்குமா கொல்கத்தா?

தமிழ்க் காதல் பாடல்கள் தமிழ் அகப் பாடல்கள் - பொருள் விளக்கம்

ஏன் இத்தனை பதற்றத்தை ஏற்படுத்துகிறீர்கள்?

பர்மா - ஓர் அரசியல் வரலாறு

விழிகளில் ஒளியேற்றும் சங்கர நேத்ராலயா

SCROLL FOR NEXT