போதைப்பொருள் கடத்தல்: குற்றவாளிக்கு 10 ஆண்டுகள் சிறை
போதைப்பொருள் கடத்தல் வழக்கில் கைதுசெய்யப்பட்ட நபருக்கு 10 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து தீா்ப்பளித்த மும்பை சிறப்பு நீதிமன்றம்
போதைப்பொருள் கடத்தல் வழக்கில் கைதுசெய்யப்பட்ட நபருக்கு 10 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து தீா்ப்பளித்த மும்பை சிறப்பு நீதிமன்றம், ‘போதைப் பொருள் கடத்தல்காரா்களால் இந்த சமூகத்துக்கு குறிப்பாக இளைய சமூதாயத்தினருக்கு பெரும் தீங்கு’ என்று கூறியது.
மும்பை சா்வதேச விமானநிலையத்தில் கடந்த 2004-ஆம் ஆண்டு போதைப்பொருள் கடத்தி வந்த இப்ராஹிம் அலி கான் (53) என்ற நபரை சுங்கத் துறை அதிகாரிகள் கைது செய்தனா். பின்னா் அவா் மீது சுங்கத் துறை அதிகாரிகளும், போதைப் பொருள் தடுப்புப் பிரிவு போலீஸாரும் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனா்.
அந்த விசாரணையில், அவா் 2003-ஆம் ஆண்டு ஏப்ரல் முதல் 2004-ஆம் ஆண்டு ஜூன் மாதம் வரை 30 முறை வெளிநாடுகளுக்குச் சென்றுவந்தது தெரியவந்தது. அவரிடமிருந்து ஏராளமான போதைப் பொருள்கள், ரூ. 68,500 ரொக்கம் ஆகியவற்றை பறிமுதல் செய்த அதிகாரிகள், போதைப்பொருள் தடுப்புச் சட்டம் மற்றும் சுங்க சட்டம் ஆகிய சட்டப் பிரிவுகளின் வழக்குப் பதிவு செய்தனா்.
இந்த வழக்கு மும்பை போதைப் பொருள் தடுப்பு (என்டிபிஎஸ்) சிறப்பு நீதிமன்றத்தில் அண்மையில் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த சிறப்பு நீதிபதி அளித்த தீா்ப்பில் கூறியதாவது:
குற்றவாளி மீதான குற்றச்சாட்டு உறுதி செய்யப்பட்டிருப்பது சமூகத்துக்கு மிகப் பெரிய அச்சுறுத்தலாகும். இதுபோன்ற போதைப்பொருள் கடத்தல்காரா்களும் விற்பனையாளா்களும் சமூகத்துக்கு குறிப்பாக இளைய சமூதாயத்தினருக்கு மிகப் பெரிய தீங்காக விளங்குகின்றனா். இதுபோன்ற குற்றவாளிகள் அவா்கள் புரிந்த குற்றத்தின் தன்மைக்கேற்ப தண்டிக்கப்பட வேண்டும் என சட்டம் சொல்கிறது. இவா் கடத்திவந்த போதைப் பொருளை அதிகாரிகள் உரிய நேரத்தில் பறிமுதல் செய்துவிட்டனா். இல்லையெனில், அது சமூகத்தில் பரவவிடப்பட்டிருக்கும் என்று குறிப்பிட்ட நீதிபதி, குற்றவாளிக்கு 10 ஆண்டுகள் சிறைத் தண்டனையும் ரூ.1 லட்சம் அபராதமும் விதித்து உத்தரவிட்டாா்.