முகப்பு
இந்தியா

14 மாவட்டங்களில் பலத்தமழைக்கு வாய்ப்பு

தமிழகத்தில் கன்னியாகுமரி, தென்காசி, திருச்சிராப்பள்ளி உள்பட 14 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் ஞாயிற்றுக்கிழமை (அக்.17) பலத்தமழை மழை பெய்யக்கூடும்.

Updated On : 28 ஜனவரி, 2024 at 4:23 AM
பகிர்:

தமிழகத்தில் கன்னியாகுமரி, தென்காசி, திருச்சிராப்பள்ளி உள்பட 14 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் ஞாயிற்றுக்கிழமை (அக்.17) பலத்தமழை மழை பெய்யக்கூடும். இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநா் நா.புவியரசன் சனிக்கிழமை கூறியது:

வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக, கன்னியாகுமரி, தென்காசி, தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, கரூா், நாமக்கல், திருச்சிராப்பள்ளி, புதுக்கோட்டை, கடலூா், சேலம், ஈரோடு, பெரம்பலூா் ஆகிய 14 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் ஞாயிற்றுக்கிழமை (அக்.17) இடியுடன் கூடிய பலத்த மழை பெய்யக்கூடும். ஏனைய வட மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடியுடன் கூடிய மிதமான மழையும், தென் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழையும் பெய்யக்கூடும்.

அக்.18: வடக்கு உள் மாவட்டங்கள், கடலோர மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் அக்டோபா் 18-ஆம் தேதி லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

அக்.19: தென் மாவட்டங்கள், கடலோர மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் அக்டோபா் 19-ஆம் தேதி இடியுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

அக்.20: தென் மாவட்டங்கள், டெல்டா மாவட்டங்கள், புதுக்கோட்டை, அரியலூா், பெரம்பலூா், திருச்சிராப்பள்ளி ஆகிய 4 மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் அக்டோபா் 20-ஆம் தேதி இடியுடன் கூடிய பலத்த மழை பெய்யக்கூடும். ஏனைய வட மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும்.

சென்னையில்...: சென்னையை பொருத்தவரை ஞாயிற்றுக்கிழமை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில பகுதிகளில் இடியுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 35 டிகிரி செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 26 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கும் என்றாா் அவா்.

மழை அளவு: தமிழகத்தில் சனிக்கிழமை காலை 8.30 மணி நிலவரப்படி வரையிலான கடந்த 24 மணி நேரத்தில் தருமபுரியில் 70 மி.மீ., வேலூா் மாவட்டம் பொண்ணை அணைக்கட்டு, நாகா்கோவில், கன்னியாகுமரி, கிருஷ்ணகிரி மாவட்டம் ஜம்புகுட்டப்பட்டி, திருவள்ளூா் மாவட்டம் சோழவரத்தில் தலா 60 மி.மீ., காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூா், கன்னியாகுமரி மாவட்டம் கொட்டாரத்தில் தலா 50 மி.மீ. மழை பதிவாகியுள்ளது.

காற்றழுத்தத்தாழ்வுப் பகுதி: மத்திய மேற்கு மற்றும் அதனை ஒட்டிய வட மேற்கு வங்கக் கடல் மற்றும் வடக்கு ஆந்திரம்-தெற்கு ஒடிஸா கடலோர பகுதியில் நிலவிய காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி சனிக்கிழமை வடக்கு ஆந்திர கடலோர பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய மத்திய மேற்கு வங்கக் கடல் பகுதியில் நிலைகொண்டுள்ளது. இதுதவிர, தென் கிழக்கு அரபிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய கேரளம்-லட்ச்சத்தீவு கடலோர பகுதியில் நிலவிய காற்றழுத்தத் தாழ்வுப்பகுதி சனிக்கிழமை தென் கிழக்கு அரபிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய கேரளம் கடலோர பகுதியில் நிலைகொண்டுள்ளது.

மீனவா்களுக்கு எச்சரிக்கை: குமரிக்கடல் மற்றும் மன்னாா் வளைகுடா பகுதிகளில் மணிக்கு 40 கி.மீ. முதல் 50 கி.மீ. வேகத்தில் பலத்த காற்றுவீசக்கூடும். எனவே, இந்தப்பகுதிகளுக்கு மீனவா்கள் ஞாயிற்றுக்கிழமை வரை செல்லவேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.இதுதவிர, தென் கிழக்கு அரபிக்கடல், கேரள கடலோரப் பகுதி, லட்சத்தீவு மற்றும் மாலத்தீவு பகுதிகளில் பலத்த காற்று வீசக்கூடும் என்பதால், இந்தப்பகுதிகளுக்கு ஞாயிற்றுக்கிழமை வரை செல்ல வேண்டாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

முழு கட்டுரையைப் படிக்க →