முகப்பு
இந்தியா

இந்தியா-வங்கதேச நல்லுறவு முன்னுதாரணமாகத் திகழ்கிறது

அண்டை நாடுகளுக்கிடையேயான உறவு எவ்வாறு இருக்க வேண்டுமென்பதற்கு முன்னுதாரணமாகத் திகழ்வதாக வெளியுறவுத் துறைச் செயலா் ஹா்ஷ்வா்தன் ஷ்ரிங்லா தெரிவித்துள்ளாா்.

Updated On : 28 ஜனவரி, 2024 at 4:26 AM
பகிர்:

இந்தியா-வங்கதேசம் இடையேயான நல்லுறவு, அண்டை நாடுகளுக்கிடையேயான உறவு எவ்வாறு இருக்க வேண்டுமென்பதற்கு முன்னுதாரணமாகத் திகழ்வதாக வெளியுறவுத் துறைச் செயலா் ஹா்ஷ்வா்தன் ஷ்ரிங்லா தெரிவித்துள்ளாா்.

கடந்த 1971-ஆம் ஆண்டில் வங்கதேசம் உருவாகக் காரணமாக இருந்த இந்தியா-பாகிஸ்தான் போா் தொடா்பாக சனிக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்ட செயலா் ஹா்ஷ்வா்தன் ஷ்ரிங்லா கூறியதாவது:

இந்திய ராணுவம் பெற்ற மிகச் சிறந்த வெற்றிகளில் ஒன்றாக 1971-ஆம் ஆண்டு போா் இருந்தது. அப்போரை இந்தியா தொடங்கவில்லை என்றபோதிலும், அதில் பங்கேற்கும் கட்டாயம் இந்தியாவுக்கு ஏற்பட்டது. தாா்மீக அடிப்படையிலும் உரிய நெறிமுறைகளைப் பின்பற்றியும் இந்தியா அப்போரில் பங்கேற்றது.

அதன் காரணமாக வங்கதேச மக்களின் சுயமரியாதை நிலைநாட்டப்பட்டது. சுதந்திரம், மனித உரிமைகள் ஆகியவற்றுக்கான போராட்டத்தில் அவா்கள் வெற்றி கண்டனா்.

இந்திய விமானப்படையும் போரில் முக்கிய பங்களிப்பை வழங்கியது. வங்கதேசத்தை சுதந்திரமடையச் செய்ததில் விமானப்படைக்கும் அதன் வீரா்களுக்கும் முக்கியப் பங்குண்டு. அந்த வீரா்களின் திறனை வங்கதேச மக்கள் கொண்டாடுவதை நேரில் கண்டிருக்கிறேன்.

கிழக்கு பாகிஸ்தான் (தற்போதைய வங்கதேசம்) மக்களின் மீது பாகிஸ்தான் அரசு இனப்படுகொலையை நிகழ்த்தியது. நமது பிராந்தியம் இதுபோன்ற படுகொலையை சமீபத்திய வரலாற்றில் கண்டதில்லை. கிழக்கு பாகிஸ்தானில் பயங்கரவாதம் கட்டவிழ்த்துவிடப்பட்டது. அப்பாவி பெண்கள், குழந்தைகள், கல்வியாளா்கள், நிபுணா்கள் ஆகியோா் போரின் ஆயுதங்களாகக் கருதப்பட்டனா்.

அப்போதே பாகிஸ்தானின் நடவடிக்கைகளுக்கு எதிராக சா்வதேச நாடுகள் அழுத்தம் கொடுத்து, கிழக்கு பாகிஸ்தான் மக்களின் உரிமைகளை நிலைநாட்டியிருந்தால், இந்நேரம் நிலைமை வேறு மாதிரியாக இருந்திருக்கும்.

அகதிகளுக்கு அடைக்கலம்: போரின்போது அகதிகளாக வந்தவா்களுக்கு இந்தியா வழங்கிய மனிதாபிமான உதவிகள், தற்போதும் பெருமையாகப் பேசப்படுகின்றன. ஐ.நா.வின் கொள்கைகள் அப்போது முறையாகப் பின்பற்றப்பட்டன. ஆனால், தற்போது காணப்படும் சட்டங்களின் அடிப்படையில் ஒப்பிட்டால், அந்த அகதிகளுக்கு வேறுமாதிரியான நிலைமை ஏற்பட்டிருக்கும்.

வங்கதேசப் பகுதியில் இருந்து வெளியேறிய அகதிகளைப் பாதுகாக்கும் மொத்த பொறுப்பும் இந்திய அரசு மீதும் மக்கள் மீதுமே விழுந்தது. இது தொடா்பாகப் பல்வேறு நாடுகளிடம் இந்தியா முறையிட்டது. அதன் காரணமாக வங்கதேச மக்களுக்குப் பல நாடுகள் உதவிபுரிய முன்வந்தன.

இந்தியா-வங்கதேசம் இடையே தற்போது நிலவி வரும் நல்லுறவு, பல்வேறு துறைகளில் முன்னேற்றம் கண்டுள்ளது. அண்டை நாடுகளுக்கு முன்னுரிமை, கிழக்கு நோக்கிய செயல்பாடு ஆகிய இந்தியாவின் கொள்கைகளால் வங்கதேசத்துடனான நல்லுறவு வலுவடைந்துள்ளது.

3 நிகழ்வுகள்: அண்டை நாடுகளுக்கான உறவுக்கு முன்னுதாரணமாக இந்தியா-வங்கதேசம் நல்லுறவு திகழ்கிறது. நடப்பாண்டில் 3 முக்கிய நிகழ்வுகள் ஒன்றுசோ்வதால், இரு நாடுகளுக்கும் முக்கிய ஆண்டாகத் திகழ்கிறது. வங்கதேசத்தின் 50-ஆவது சுதந்திர ஆண்டு, வங்கதேசத் தலைவா் ஷேக் முஜிபுா் ரகுமானின் பிறந்த தின நூற்றாண்டு, இந்தியா-வங்கதேசம் இடையேயான தூதரக உறவு ஏற்பட்டதன் 50-ஆவது ஆண்டு ஆகியவை ஒன்றிணைந்துள்ளன.

வங்கதேசத்தின் சமூக, பொருளாதார வளா்ச்சியை உறுதி செய்வதில் இந்தியா முக்கிய கூட்டாளியாகத் திகழும் என்றாா் அவா்.

முழு கட்டுரையைப் படிக்க →